முக்கிய தருணங்களில் விக்கெட்டை இழந்ததால் தோற்றோம் – சர்பராஸ்

203
Image Courtesy - Getty Images

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக மென்செஸ்டரில் நடைபெற்ற லீக் போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார சதத்தின் உதவியுடன் 337 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி குவித்தது.

இந்த ஓட்ட எண்ணிக்கை பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், மூன்று ஓவர்களில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தமை தனது அணியின் வெற்றிக்கு தடையாக இருந்ததாக தான் நம்புவதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் கமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் பாபர் அசாம், பக்கர் சமானின் இணைப்பாட்டத்துடன் நல்ல நிலையில் இருந்தது. எனினும், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் அந்த அணி முக்கிய 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.

இறுதியில் மழை குறுக்கிட டக்வத் லூயிஸ் விதிமுறைப்படி பாகிஸ்தானுக்கு இலக்கு 302 ஓட்டங்களாக மாற்றப்பட்டது. எனினும், பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டிகள் வராற்றில் 7ஆவது தடவையாகவும் தொடர்ந்து பாகிஸ்தான் அணியை வென்றுவரும் சாதனையை இந்தியா தக்கவைத்துக் கொண்டது. கடந்த 1992ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இந்திய அணியை வீழ்த்த முடியாத பாகிஸ்தானின் சோகம் தொடர்கிறது.

இந்த நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட சர்பராஸ் அஹமட்,

”இந்தப் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் அனைத்து கௌரவங்களும் கிடைக்க வேண்டும். உண்மையில் பக்கர் சமான், இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்,

எனினும், அந்த 3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது போட்டியில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல, அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தமது பொறுப்பை சரிவர செய்யவில்லை.

நாங்கள் நாணய சுழற்சியை வென்றோம், அதேபோல, ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். ஆனால் சரியான இடங்களில் பந்து வீசவில்லை, ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடினார். ரோஹித்துக்கு நேர்த்தியான முறையில் பந்துவீசி அவரது விக்கெட்டை எடுப்பதே எங்களது திட்டமாக இருந்தது. ஆனால் நாங்கள் அதை சரியாக செயல்படுத்தவில்லை.

இந்த தோல்வியானது மிகவும் கவலையளிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த எந்தவொரு பெறுபேரையும் எம்மால் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது” என தெரிவித்தார்.

ரோஹித்தின் சதத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 22…

உண்மையில் இதுவொரு அழுத்தத்தைக் கொடுக்கின்ற போட்டியாகும். எனவே அந்த அழுத்தத்தை மிகச் சிறந்த முறையில் எதிர்கொண்டதால் தான் கடந்த காலங்களைப் போல இம்முறையும் இந்திய அணி வெற்றியீட்டியது. 90 காலப்பகுதியில் பாகிஸ்தான் அணி முன்னணி அணியாக திகழ்ந்தது. ஆனால் அதன்பிறகு இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி வருகின்றது என சுட்டிக்காட்டிய சர்பராஸ், எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் எமக்கு அரையிறுதிக்கான ஒரு வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளிகள் பட்டியலில் 3 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.

இது இவ்வாறிருக்க, அந்த அணி தமது அடுத்த லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்வரும் 23ஆம் திகதி சந்திக்கவுள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<