17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் காலியில் ஒரு நாள் போட்டிகள் ஆரம்பம்

2516
Zimbabwe tour of Sri Lanka
Getty Images

இம்மாத இறுதியில் ஜிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுத் தொடர் மூலம், 17 வருடங்களின் பின்னர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஒரு நாள் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான தொடர்களை முடித்துக் கொண்டதன் பின்னர், சுழற் பந்து வீச்சாளர் கிரேம் கிரேமர் தலைமையிலான ஜிம்பாப்வே அணி தற்போது ஒரு நாள் தரப்படுத்தலில், 8 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணியுடன், ஜூன் 30 ஆம் திகதி காலியில் நடைபெறும் முதலாவது ஒரு நாள் போட்டியில் மோதுகின்றது. அதே போன்று, அதே மைதானத்தில் இரண்டாவது ஒரு நாள் போட்டியும் முதல் போட்டி முடிவடைந்து இரண்டு நாட்களின் பின்னர் ஆரம்பமாகின்றது.

>> ஒரு நாள் தரவரிசையில் எட்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கை <<

அடுத்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் எஞ்சியிருக்கும் மிகுதி மூன்று போட்டிகளையும் விளையாட அம்பாந்தோட்டை பயணமாகின்றன. ஒரு நாள் தொடரை அடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெறுகின்றது.

இலங்கை அணியானது, இறுதியாக 2013 ஆம் ஆண்டில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தது. அதுவே, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியாகும். அதே போன்று, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 2000 ஆம் ஆண்டு இலங்கை, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முக்கோணத் தொடரின் போது இறுதியாக ஒரு நாள் போட்டியொன்று விளையாடப்பட்டிருந்தது.

இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து அம்பாந்தோட்டை சூரியவெவவில் அமைந்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் போட்டிகள் எதனையும் நடாத்தியிருக்கவில்லை. தற்போது, இலங்கை இராணுவப்படை மூலம் மீள்புணரைமக்கப்பட்டு வரும் இம்மைதானம் சுமார், 4.2 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், இம்மைதானத்தில் இதுவரை 11 ஒரு நாள் போட்டிகளும், 9 T20 போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டித் தொடர் அட்டவணை

முதலாவது ஒரு நாள் போட்டி – ஜூன் 30 ஆம் திகதி – காலி (பகல் நேரப்போட்டி)
இரண்டாவது ஒரு நாள் போட்டி – ஜூலை 2 ஆம் திகதி – காலி (பகல் நேரப்போட்டி)
மூன்றாவது ஒரு நாள் போட்டி – ஜூலை 6 ஆம் திகதி – அம்பாந்தோட்டை (பகல் நேரப்போட்டி)
நான்காவது ஒரு நாள் போட்டி – ஜூலை 8 ஆம் திகதி – அம்பாந்தோட்டை (பகல் நேரப்போட்டி)
ஐந்தாவது ஒரு நாள் போட்டி – ஜூலை 10 ஆம் திகதி – அம்பாந்தோட்டை (பகல் நேரப்போட்டி)

(ஒரேயொரு) டெஸ்ட் போட்டி – ஜூலை 14 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை – ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானம்