புதிய சாதனையுடன் பல்கலைக்கழக பளு தூக்கல் சம்பியனாகிய துஷாந்த்

346

இந்த ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு தூக்கல் சுற்றுப் போட்டிகள் கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழக வணிகப்பீட அரங்கில் இடம்பெற்று நிறைவுற்றது. இப் போட்டிகளில் பங்கேற்றிருந்த யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் புதிய சாதனை ஒன்றினை நிலை நாட்டி சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.  

இளம் தேசிய கால்பந்து அணிக்கான முதல் கட்ட வீரர்கள் தெரிவு நிறைவு

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான சம்பியன்ஷிப் தொடருக்கான..

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவரான குணசீலன் சாமுவேல் துஷாந்த், குறித்த பளு தூக்கல் சுற்றுப் போட்டிகளில், 105 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்னேட்ச் (Snatch) முறையில் அதிகபட்சமாக 100 கிலோ கிராம் எடையினை தூக்கியதோடு, கிளின் என்ட் ஜெர்க் (Clean and Jerk) முறையில் 131 கிலோ கிராம் எடையினை தூக்கி குறித்த எடைப்பிரிவிற்கான சம்பியனாகத் தெரிவாகியிருந்தார்.

இதற்கு முன்னதாக, கிளின் என்ட் ஜெர்க் முறையில் அதிகபட்சமாக 130 கிலோ கிராம் எடை தூக்கப்பட்டிருந்ததே சாதனையாக அமைந்திருந்தது. முன்னர் அச் சாதனையினை 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு தூக்கல் சுற்றுப் போட்டியில் களனி பல்கலைக்கழகத்தை சேர்ந்த RMSK ராஜபக்ஷ நிகழ்த்தியிருந்தார்.

ஆனால், இந்த வருடத்திற்கான தொடரில், கிளின் அன்ட் ஜெர்க் முறையில் தனக்கு கிடைத்த இரண்டாம் வாய்ப்பு மூலம் (Second Attempt) துஷாந்த் அரங்கம் அதிரும் வகையில் 131 கிலோ கிராம் எடையினை தூக்கி பழைய சாதனையை முறியடித்திருந்தார். அவர் தனது மூன்றாவது வாய்ப்பில் 135 கிலோ கிராம் எடையினை தூக்க முயற்சித்திருந்தும் முன்னர் தூக்கியிருந்த எடைகள் மூலம் ஏற்பட்டிருந்த வயிற்று வலியின் காரணமாக அவரால் அது முடியாமல் போயிருந்தது.

துஷாந்த்து மட்டுமின்றி கடந்த காலங்களிலும், பளு தூக்கல் போட்டிகளில் பல சிறப்பான அடைவு மட்டங்களினை வெளிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ஆம் மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கனிஷ்ட வீரர்களுக்குரிய தேசிய மட்ட பளு தூக்கல் சுற்றுத் தொடர்களிலும், பாடசாலைகளுக்கிடையிலான தொடர்களிலும் துஷாந்த் சம்பியனாகியிருந்ததோடு, 2016ஆம் ஆண்டிற்கான கனிஷ்ட வீரர்களுக்கான தேசிய மட்ட பளு தூக்கல் சுற்றுத் தொடரில் இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தார்.

ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை வீழ்த்தி சம்பியனாகியது றெஜிமண்ட் அணி

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98 ஆவது நிறைவு..

புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டிய காரணத்தினால் யாழ்ப்பாணத்தின் ஹல்க் (Hulk) சுப்பர் ஹீரோ என்னும் செல்லப் பெயர் மூலம் அனைவராலும் அழைக்கப்படும் துஷாந்திற்கு, யாழ்ப்பாணம் அச்சுவேலி சொந்த ஊராகும்

பாடசாலை காலங்களில், விதன் அமிர்தலிங்கம் மூலம் தனிப்பட்ட ரீதியில் பயிற்றுவிக்கப்பட்ட துஷாந்த் தேசிய ரீதியில் பல பதக்கங்களை வென்றிருந்தார். தற்போது இவருக்கு பல்கலைக்கழகத்தில் திருமாறன் மற்றும் M. இளம்பிரியன் ஆகியோரினால் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தனது சாதனை வெற்றிக்குப் பின்னர் கருத்து தெரிவித்திருந்த துஷாந்த்,

“எனது அம்மாவே எனக்கு அனைத்துமானவர். ஆரம்ப காலத்தில் எங்களுக்கு வசதிகள் குறைவாக இருந்த போதிலும், எனது தாயார் என்னை விளையாட்டில் ஈடுபட அதிகம் ஊக்கம் தந்திருந்தார். என்னை வேலைக்கு போகச் சொல்லாது, எங்களுக்கு ஒரு தூணாக இருந்து நாங்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சாதிக்க உதவியிருந்தார். அத்தோடு, தந்தை இடையில் சென்றிருந்த எங்களது வாழ்க்கை பயணத்தில் இப்படியொரு தாயை நாங்கள் பெற மிகவும் அதிஷ்டம் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறானதொரு போட்டியில், நான் எடை தூக்குவதை எனது அம்மா பார்ப்பார் என்றால், நிச்சயமாக அழுதுவிடுவார். இதனாலேயே, நான் பங்கேற்கும் போட்டிகளில் வருவதனை அவர் தவிர்த்துக்கொள்கின்றார்“

“இதனை (இவ்விளையாட்டை) எனது வாழ்க்கையில் நான் ஒரு போதும் விட்டுத்தரப்போவதில்லை. நான் விரும்பும் ஒரேயொரு விளையாட்டாகவும், நான் பயிற்சி செய்ய விரும்பும் ஒரேயொரு விளையாட்டாகவும் இது அமைகின்றது. ஏனெனில், வாழ்க்கையில் வரும் தடைகளை தகர்க்க இந்த விளையாட்டு எனக்கு உறுதியினை தருகின்றது. எனக்கு ஆதரவளித்த எனது அன்புக்கிரிய அம்மா, தம்பி எனது தனிப்பட்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் பல்கலைக்கழக உடற்பயிற்சி கல்விப் பிரிவின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில்  நன்றிகளை தெரிவிக்கின்றேன்” என்றார்.

இதேபோன்று, துஷாந்த் இன்னும் பல போட்டிகளில் பங்குபற்றி பல சாதனைகள் செய்து, சர்வதேச ரீதியிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்கள் வெல்ல ThePapare.com இன் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.