சதமடித்தும் மோசமான சாதனையை நிலைநாட்டிய ரோஹித் சர்மா

848
Crictracker.com

அவுஸ்திரேலிய மண்ணில் நான்கு சதங்களை விளாசிய இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரா ரோஹிட் சர்மா சமதடித்தும் வெற்றி பெற முடியாத அணி வீரர்களின் பட்டியலில் முதலிடம் பெற்று மோசமான சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு அவுஸ்திரேலிய அணியுடன் 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகின்றது.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் கோஹ்லியின் நிலைப்பாடு

சுற்றுப்பயணத்தின் முதல் இரண்டு தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் டி20 தொடர் சமநிலையில் முடிவடைய டெஸ்ட் தொடரை இந்திய அணி 72 வருடங்களுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கைப்பற்றியது.

சுற்றுப்பயணத்தின் இறுதி தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. முதல் ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று (12) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை 34 ஓட்டங்களினால் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 எனும் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியில் 3 வீரர்கள் அரைச்சதம் பெற்றும் எந்தவொரு வீரரும் சதம் பெறவில்லை. இருந்தாலும் இந்திய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா நிதானமாக துடுப்பெடுத்தாடி சதமடித்திருந்தார். சதம் அடிப்பது என்பது குறித்த வீரருக்கு தனிப்பட்ட ரீதியிலான பெருமையை தேடிக்கொடுக்கும் ஒரு விடயம். இருந்தாலும் அவர் அடித்த அந்த சதமே அவருக்கு மோசமான சாதனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

குறித்த போட்டியில் ரோஹித் சர்மா 133 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இது அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பெற்ற 22 ஆவது சதமாகும். மேலும் அவர் அவுஸ்திரேலிய மண்ணில் 17 இன்னிங்சுகளில் விளையாடி பெறும் 4 ஆவது சதம் இதுவாகும்.

இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு மெல்பேர்ன் மைதானத்தில் 138 ஓட்டங்களும், 2016 ஆம் ஆண்டு பேர்த்தில் 171 ஓட்டங்களும், மீண்டும் அதே ஆண்டில் பிரிஸ்பேர்னில் 124 ஓட்டங்களும், தற்போது நேற்று சிட்னியில் 133 ஓட்டங்களும் அவர் அவுஸ்திரேலிய மண்ணில் பெற்ற சதங்களாகும்.

இந்த சதத்தின் மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் எதிரணி வீரர் ஒருவர் சதமடித்தும் அவரது அணியை வெற்றி பெற வைக்க முடியாத வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்து பாராட்டக் கூடிய சாதனைகள் நிகழ்த்தி வருகின்ற நிலையிலும் மோசமான பதிவு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

ரோஹித் சர்மா அவுஸ்திரேலிய மண்ணில் பெற்ற 4 சதங்களிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முன்னர் குறித்த மோசமான சாதனை பட்டியலில் முதலிடத்தில் அவுஸ்திரேலிய மண்ணில் 3 சதங்கள் அடித்த மேற்கிந்திய தீவுகள் அணியிண் ஜாம்பவான் சேர் வீ.ஐ.வீ ரிச்சட்ஸ் இருந்தார். தற்போது அவரை பின்தள்ளி ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

முன்வரிசை வீரர்களின் அரைச்சதங்களோடு வலுப்பெற்றுள்ள அயர்லாந்து A அணி

மூன்றாமிடத்தில் மற்றுமொரு மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் டெஸ்மொன்ட் ஹைன்ஸ் 2 சதங்களுடன் உள்ளார். நான்காமிடத்தில் 2 சதங்களுடன் இங்கிலாந்து அணி வீரர் கிரேம் ஹிக் உள்ளார். ஐந்தாமிடத்தில் இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசூரிய 2 சதங்களுடன் உள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (15) அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பிடித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<