CPL தொடரில் விளையாடவுள்ள ஐந்து இலங்கை வீரர்கள்

1329

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) தொடரில் இலங்கை அணியைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் மூன்று அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்கொட்லாந்துக்கெதிரான போட்டியுடன் தன்னம்பிக்கை பெற்றுள்ள திமுத்

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக நேற்று (21) ……..

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை மிகப்பெரிய T20 தொடர்களில் ஒன்றான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 12ம் திகதிவரை மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடரின் 7வது பருவகாலத்துக்கான வீரர்கள் வரைவு நேற்று (22) இலண்டனில் நடைபெற்ற போது, விளையாடவுள்ள 6 அணிகளும் தங்களுடைய அணி வீரர்களை உறுதிப்படுத்தியுள்ளன.

இதில், இலங்கையை பொருத்தவரையில் 5 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக முதல் சுற்றில் வாங்கப்பட்டுள்ளார். இவருடன், தனது T20 பந்துவீச்சு பாணி மற்றும் அதிரடி துடுப்பாட்டம் என பிரகாசித்து வரும் சகலதுறை வீரர் இசுரு உதான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணிக்காக முதல் சுற்றில் வாங்கப்பட்டார்.

குறித்த இருவரும் முதல் சுற்று வரைவில் வாங்கப்பட்டதுடன், இருவருக்கும் தலா 160,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் சுமார் 2 கோடி 83 இலட்சமாகும்.

இதேவேளை, மற்றுமொரு இலங்கை வீரராக வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் திசர பெரேரா, லசித் மாலிங்க விளையாடும் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இவர் 90,000 (ஒரு கோடி 58 இலட்சம்) அமெரிக்க டொலர்கள் கொடுத்து அந்த அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்படாத ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல, மூன்றாவது இலங்கை வீரராக செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியில் இணைந்துள்ளார். இவர், 30,000 (52 இலட்சம்) அமெரிக்க டொலர்களுக்கு லூசியா ஸ்டார்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இறுதியாக 10வது சுற்றில் இலங்கை அணியின் சுழற்பந்து சகலதுறை வீரர் சீகுகே பிரசன்ன, டிரின்பகோ நைட் ரைடர்ஷ் அணிக்காக இணைக்கப்பட்டார்.

இம்முறை கரீபியன் ப்ரீமியர் லீக் வரைவில் மொத்தமாக 536 வீரர்கள் இணைந்திருந்ததுடன், அதில் 34 இலங்கை வீரர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர். இதில், இலங்கையின் 5 வீரர்கள் மாத்திரமே வரைவின் மூலம் அணிகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இம்முறை வீரர்கள் வரைவில் அதிகமான தொகைக்கு இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், பாகிஸ்தானின் சதாப் கான் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் என்ரே ரசல் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் வாங்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இம்முறை கரீபியன் ப்ரீமியர் லீக் நடைபெறும் காலத்தில் இலங்கை அணிக்கு எவ்வித மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<