T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

4695

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ள, அணிக்கு பத்து ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட T10 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கையைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

டி-10 கிரிக்கெட் தொடரில் விளையாட தசுன் சானக்க ஒப்பந்தம்

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான தசுன்..

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, குசல் பெரேரா, சகலதுறை வீரர்களான தசுன் சானக்க மற்றும் இசுறு உதான ஆகியோர் இம்முறை T10 அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

நவீன கிரிக்கெட்டின் புதிய மாற்றங்களுக்கு அமைய முதல் தடவையாக சர்வதேச வீரர்களை இணைத்து நடத்தப்பட்ட T10 கிரிக்கெட் தொடரானது இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இம்முறையும் T10 தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதில் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த வருடம் ஆரம்பமாகிய T10 தொடரில் இலங்கையின் லங்கா லயன்ஸ் அணி உட்பட, ஆறு அணிகள் போட்டியிட்டிருந்தன. ஆனால் இம்முறை லங்கா லயன்ஸ் அணி நீக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் மூன்று அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இம்முறை நடப்பு சம்பியனான கேரளா கிங்ஸ், பக்ஹதூன், மரதா அரேபியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாபி லெஜன்ஸ் அணிகளுடன் புதிய அணிகளான ராஜ்பூட், கராச்சியன்ஸ் மற்றும் நொர்தன் வொரியர்ஸ் ஆகிய எட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இம்முறை இலங்கை அணி சார்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள லசித் மாலிங்க மரதா அரேபியன்ஸ் அணிக்காகவும், இசுறு உதான கராச்சியன்ஸ் அணிக்காவும், குசல் பெரேரா பெங்கால் டைகர்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளதுடன், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தசுன் சானக ஆகியோர் கேரளா கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர்.

தலைமைப் பதவியை இழந்த மெதிவ்ஸின் அதிரடி அறிவிப்பு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மற்றும்..

இலங்கை அணியை பொருத்தவரையில் லசித் மாலிங்க சர்வதேச தொடர்களில் அதிகமாக விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பதுடன் இறுதியாக கனடா T20 லீக்கில் விளையாடியிருந்தார். அத்துடன், குசல் பெரேரா மற்றும் இசுறு உதான ஆகியோர் முறையே ஐபிஎல் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர்களில் விளையாடியுள்ளனர்.  

எனினும், தசுன் சானக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச தொடர்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தும், அவர்களால் பங்கேற்க முடிந்திருக்கவில்லை. நிரோஷன் டிக்வெல்ல கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சென்.லூசியா அணிக்கும், தசுன் சானக கனடா T20 லீக்கில் மொன்டீரியல் டைகர்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் தேசிய அணியின் வேலைப்பழு காரணமாக இவர்கள் குறித்த தொடர்களில் பங்குபற்றியிருக்கவில்லை.

இதேபோன்று, இம்முறை இலங்கை அணியின் சில வீரர்களுக்கு T10 தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும் என சந்தேகிக்கப்படுகிறது. T10 கிரிக்கெட் லீக் தொடர் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 02ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி (23-27 திகதிகளில்) நடைபெறவுள்ளது. இதனால் இலங்கை அணி வீரர்களில் லசித் மாலிங்க மாத்திரம் விளையாடுவதற்கான வாய்ப்புள்ளதுடன், ஏனைய வீரர்களின் நிலை சந்தேகத்திற்கிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<