வரலாறு படைக்க எமக்கு சிறந்த வாய்ப்பு – திசர பெரேரா

1556

இலங்கை அணி எந்த திசையில் பயணிக்கப்போகிறது என்பதை பொறுப்பேற்கவிருக்கும் சந்திக்க ஹத்துருசிங்க தீர்மானிக்கும் வரை இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை நிறைவேற்றுபவராக திசர பெரேராவை பார்க்க முடியும். எனவே, அவர் எத்தனை காலம் இலங்கை அணியின் தலைவராக இருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எவ்வாறாயினும், அவர் இந்திய மண்ணில் தொடர் ஒன்றை வென்று இதுவரை இலங்கை அணித் தலைவர் ஒருவர் எட்டாத சாதனை ஒன்றை படைக்க நெருங்கியுள்ளார். மொஹாலியில் புதன்கிழமை (13) நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி அல்லது விசாகபட்னத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் வெற்றி பெற்றால் 2019 வரை அணியின் தலைமைப் பதவியை உறுதி செய்துகொள்வார்.

இலங்கை அணி 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் சுதந்திர கிண்ணத்தை வென்றபோதும் அது ஒரு முக்கோண ஒருநாள் தொடராகவே நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இறுதிச் சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி 2-0 என வெற்றியீட்டியது. அந்த ஆண்டின் கடைசியில் இடம்பெற்ற இரு தரப்பு தொடரிலேயே இலங்கை அணி இந்திய மண்ணில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-1 என சமநிலை செய்ய இலங்கை அணியால் முடிந்தது.

சாதனைகள் மூலம் இந்தியாவுடனான கடனைத் தீர்த்த இலங்கை அணி

”தொடரொன்றை வெல்வதற்கு எமக்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது. எந்த ஒரு இலங்கை அணியும் இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தியதில்லை. நாம் தற்போது தொடரில் முன்னணியில் உள்ளோம். இங்கு நாம் வென்று 2-0 என தொடரைக் கைப்பற்றுவது முக்கியமாகும். முதலில் போட்டி பற்றிய சிந்தனையை அகற்றி விட்டு முன்னேறிச் செல்வதில் அவதானம் செலுத்த வேண்டும்” என்று திசர பெரேரா செவ்வாய்க்கிழமை (12) கூறியிருந்தார்.    

டெல்லியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய முன்வரிசை துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா தசைப்பிடிப்பு காரணமாக முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடாத நிலையில் அவர் தொடர்ந்து சுகம்பெற தவறியுள்ளார்.

தரம்சாலாவில் இருந்து கடந்த திங்கட்கிழமை புறப்படவிருந்த இலங்கை அணி மோசமான காலநிலை காரணமாக அந்தப் பயணம் ஒரு நாள் தள்ளிப்போனது. இதனால் இன்று செவ்வாய்க்கிழமை காலை மொஹாலியை அடைந்த இலங்கை அணியினர் அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.  

மொஹாலியில் காலநிலை மேகமூட்டமாக இருண்டு காணப்படுகின்றபோதும் அதிக ஓட்டங்கள் குவிக்கும் போட்டியாக நாளைய ஆட்டம் இருக்கும் என பெரேரா எதிர்பார்க்கிறார்.

”இங்கே நிலைமைகள் எனக்குத் தெரியும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஒரு சில ஆண்டுகள் நான் அங்கம் வகித்திருக்கிறேன். சாதாரணமாக இங்கே சிறந்த துடுப்பாட்ட ஆடுகளம் இருக்கும். இது அதிக ஓட்டங்கள் குவிக்கும் போட்டியாக இருக்கும். நாம் நிலைமையை சிறந்த முறையில் கையாள வேண்டும்” என்றார்.

தரம்சாலாவில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அழுத்தத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். அந்தப் போட்டியில் 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி MS தோனியின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியோடு கடைசியில் 112 ஓட்டங்களைப் பெற்றது. ”இந்தப் போட்டியில் எமக்கு எந்த அழுத்தமும் இல்லை. நாளை நாங்கள் வென்றால் தொடரை வெல்வோம் என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் எமது சிறந்த துடுப்பாட்டத்தைக் காட்டுவோம். பொதுவாக வெற்றி அணியுடன் செல்ல நான் விரும்புகிறேன். என்றாலும் அணியில் மாற்றங்கள் செய்வது குறித்து நாம் அவதானம் செலுத்துவோம். நிலைமை பற்றி ஆலோசித்து அதனைத் தொடர்ந்து முடிவொன்றை எடுப்போம்” என்று பெரேரா குறிப்பிட்டார்.

இடது கை சுழல் பந்து வீச்சாளர் சச்சித் பதிரனவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவை கொண்டுவருவது குறித்து இலங்கை அணி ஆலோசித்து வருகிறது.