குலசேகரவுக்கு பிரியாவிடையாக அமையவுள்ள பங்களாதேஷுடனான 3ஆவது ஒருநாள் போட்டி

2170

பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள 3ஆவது ஒருநாள் போட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான நுவன் குலசேகரவுக்கான பிரியாவிடை போட்டியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் மாலிங்க

இலங்கை அணியின் முன்னணி வேகப் ……..

”பங்களாதேஷ் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அதற்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கியிருந்ததுடன், அவரை சிறந்த முறையில் வழியனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், வேகப் பந்துவீச்சாளர் நுவன் குலசேகரவுக்கும் பிரியாவிடை போட்டியொன்றை வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், அதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு சார்பாக நாங்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்தோம். 

எனினும், உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் நுவன் குலசேகர அண்மைக்காலமாக விளையாடாததன் காரணமாக அவரை அணியில் இணைத்துக் கொள்ள முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எமக்கு அறிவித்தது. 

எனவே, பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள 3ஆவது ஒருநாள் போட்டியை நுவன் குலசேகரவுக்கு கௌரம் அளிக்கும் வகையில் அவருடைய பெயரை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோரது யோசனைக்கு அமைய திருத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் யாப்பு குறித்த அறிக்கை நேற்றைய தினம் (23) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது” எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். 

இதேவேளை, தன்னை பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் இணைத்து அதில் ஒரு ஆட்டத்தை பிரியாவிடை போட்டியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நுவன் குலசேகர இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு விசேட கடிதமொன்றின் மூலம் அறிவித்திருந்தார். 

இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியினர் கூட்டாக ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொதுச்செயலாளர் மொஹான் டி சில்வா கருத்து வெளியிடுகையில், 

குலசேகரவுடன் இணைந்து ஓய்வுபெற விரும்பும் மாலிங்க

இணைப்பு என்பது கிரிக்கெட்டில் ………..

”நுவன் குலசேகரவின் கோரிக்கை தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பில் எமது பொதுக்கூட்டத்தின் போது கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்” எனவும் தெரிவித்தார். 

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராகவும், ஐ.சி.சியின் ஒருநாள் பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் முதலிடத்தில் திகழ்ந்தவருமான 37 வயதான நுவன் குலசேகர, 184 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 199 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். 21 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுக்களையும், 58 டி-20 போட்டிகளில் 66 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<