பெனால்டியில் வென்று காலிறுதிக்கு முன்னேறிய குரோஷியா

393
Image Courtesy - Getty Images

குரோஷிய கோல்காப்பாளர் டனிஜல் சுபசிக் மூன்று பொனால்டி ஷுட் அவுட்களை (Penalty shoot-out) தடுத்ததன் மூலம் பரபரப்பான டென்மார்க்குடனான நொக் அவுட் சுற்று போட்டியை வென்ற குரோஷிய அணி ரஷ்யாவுடன் உலகக் கிண்ண காலிறுதி போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.

Image Courtesy – Getty Images

நிஸ்னி நொவ்கொரோட் அரங்கில் ரஷ்ய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற போட்டியின் முதல் நான்கு நிமிடங்களுக்குள் குரோஷியா மற்றும் டென்மார் அணிகள் தலா ஒரு கோலை போட்ட நிலையில் அடுத்து வந்த 116 நிமிடங்களும் கோலின்றி முடிவுற்றது. இதன் மூலம் அன்றைய தினம் நடந்த ஸ்பெயின் – ரஷ்யா அணிகளுக்கு இடையிலான போட்டி போன்று இந்த போட்டியும் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது.  

ரசிகர்களின் தனிப்பட்ட விமர்சனங்களால் ஈரான் கால்பந்து வீரர் சர்தார் ஓய்வு

ஈரானின் மெஸ்ஸி என்று அழைக்கப்படும் 23 வயதாகும்…

இதில் குரோஷிய அணி 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ண காலிறுதிக்கு தகுதி பெற்றது.

குரோஷிய அணி எதிர்வரும் சனிக்கிழமை (07) சொச்சியில் நடைபெறவிருக்கும் காலிறுதியில், போட்டியை நடத்தும் ரஷ்யாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

எனினும் குரோஷிய மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. போட்டியின் முதல் நிமிடத்திலேயே டென்மார்க் கோல் ஒன்றை புகுத்தி முன்னிலை பெற்றது.

ஜோனஸ் க்னுட்சன் வீசிய பந்து நேராக குரோசிய பெனால்டி எல்லைக்குள் வந்த விழ அங்கு குழப்பம் நேர்ந்தது. ஓர் அங்குல தூரத்தில் இருந்து தோமஸ் டெலன்லி வழங்கிய பந்தை மாதியஸ் ஜோகன்சன் உதைக்க அது பல குரோஷிய வீரர்கள் மற்றும் கோல்காப்பாளரையும் தாண்டி வலைக்குள் புகுந்தது.  

மூன்று நிமிடங்கள் கழித்து குரோஷியா இதற்கு பதிலடி கொடுத்தது. அந்த கோலும் வினோதமாக இருந்தது. கோலை நெருங்கி வந்தை பந்தை டென்மார்க் வீரர் ஹென்ரிக் டெல்ஸ்கார்ட் வெளியே தட்டிவிட்டார். ஆனால் அந்த பந்து சக வீரர் அன்ட்ரியஸ் க்ரிஸ்டன்சனின் தலையில்பட்டு நேராக குரோஷிய வீரர் மரியோ மான்சுகிக்கிடம் வர அந்த பொன்னான வாய்ப்பை கொண்டு அவர் பந்தை வலைக்குள் செலுத்தினார்.

உலகக் கிண்ண வரலாற்றில் 2014 இல் ஆர்ஜன்டீனா மற்றும் நைஜீரியாவுக்கு இடையிலான போட்டி தவிர நான்கு நிமிடத்திற்குள் இரு அணிகளும் கோல் பெற்ற முதல் ஆட்டமாக இது இருந்தது.   

இதனைத் தொடர்ந்து போட்டி கோலின்றி நீடித்தது. குறிப்பாக டென்மார்க் அணி தற்காப்பு ஆட்டம் ஒன்றையே வெளிப்படுத்தியதை காண முடிந்தது. அது அந்த அணிக்கு சாதகமாக இருந்த அதவேளை சில நேரங்களில் பாதகமாகவும் மாறியது.

முதல் பாதி: குரோசியா 1 – 1 டென்மார்க்

இரண்டாவது பாதி ஆட்டம் முழுவதும் இரு அணிகளும் சமனான ஆதிக்கத்துடன் விளையாட போட்டி பெனால்டி ஷூட் அவுட்டை நோக்கி சொல்வதாகவே அமைந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் கோலின்றி முடிவடைந்த பின் வழங்கப்பட்ட மேலதிக அரை மணி நேரத்தில் குரோஷிய அணிக்கு கோல் பெறுவதற்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கடைத்தது.

மேலதிக நேரம் முடிவதற்கு நான்கு நிமிடங்கள் இருக்கும்போது குரோஷியாவின் லூகா மொட்ரிக் மைதானத்தில் பாதி தூரத்தில் வைத்து பந்தை அன்டே ரெபிக்கிடம் வழங்கினார். அவர் அந்த பந்தை வேகமாக எதிரணி கோலை நோக்கி கடத்திச் சென்றதோடு அதனை தடுக்க முன்னால் வந்த கோல் காப்பாளரையும் முறியடித்து முன்னேறினார். தமக்கு வலைக்கும் இடையில் யாரும் இல்லை என்ற நிலையிலேயே பின்னால் வந்த டென்மார்க் பின்கள வீரர் மாதியஸ் ஜேர்கன்சன் வேறு வழியின்றி பந்தை தடுக்க முயன்று ரெபிக்கை கீழே வீழ்த்தினார்.

இங்கிலாந்திடம் பலத்தை நிரூபித்த பெல்ஜியம்: டியூனீசியாவுக்கு ஆறுதல் வெற்றி

அத்னன் ஜெனுசாஜ்ஜின் அபார கோல் மூலம் G குழுவில்…

இதனை அடுத்து குரோஷியாவுக்கு பொனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் லூகா மொட்ரிக் அடித்த பெனால்டி உதை வலுவாக இருக்கவில்லை. டென்மார்க் கோல்காப்பாளரால் இலகுவாக தடுக்க முடிந்தது.

இதனால் போட்டி பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றது. இரு அணிகளினதும் முதல் பெனால்டிகளும் தடுக்கப்பட்ட நிலையில் அரங்கில் இருந்த ரசிகர்களும் ஆசன பதற்றம் அடைந்தனர். எனினும் இரு அணிகளினதும் அடுத்த இரண்டு பெனால்டி ஷூட் அவுட்களும் வலைக்குள் சென்றன. தொடர்ந்து அடுத்த பெனால்டிகள் தடுக்கப்பட்ட நிலையில் தீர்மானமிக்க ஐந்தாவது பெனால்டியை குரோஷிய வீரர் இவான் ரக்டிக் வலைக்குள் செலுத்தியதோடு டென்மார்க் வீரர் நிகொலாய் ஜெர்கன்சன் உதைத்த பந்தை குரோஷிய கோல்காப்பாளர் தடுத்து அந்த அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.     

முழு நேரம்: குரோசியா 1 – 1 டென்மார்க்

கோல் பெற்றவர்கள்

டென்மார்க் – மாதியஸ் ஜோகன்சன் 1′
குரோசியா – மரியோ மான்சுகிக் 4′

பெனால்டி ஷூட் அவுட்: குரோஷியா 3 – 2 டென்மார்க்


ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஷ்யா காலிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy – Getty Images

ரஷ்ய கோல்காப்பாளர் இகோர் அகின்பீவ் (Igor AKINFEEV) இரு ஸ்பொட் கிக் உதைகளை தடுத்ததன் மூலம் பலம் மிக்க ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் (Penalty shoot-out) 4-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரஷ்யா உலகக் கிண்ண காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் லிஸ்னிக்கி அரங்கில் ஞாயிற்றிக்கிழமை (01) நடைபெற்ற 16 அணிகள் சுற்று போட்டியில் மேலதிக நேரம் உட்பட 120 நிமிடங்களில் ரஷ்யா மற்றும் ஸ்பெயின் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்று சமநிலை பெற்றதை அடுத்தே போட்டியின் முடிவு பெனால்டி ஷூட் அவுட் முறையில் தீர்மானிக்கப்பட்டது.

பிரான்ஸுடனான காலிறுதிக்கு உருகுவே தகுதி

எடின்சன் கவானியின் இரட்டை கோல் மூலம் போர்த்துக்கல்..

பெனால்டி ஷூட் அவுட்டில் 2010 உலக சம்பியனான ஸ்டிபெயினின் கொகே மற்றும் இயாகோ ஆஸ்பாஸ் அடித்த உதைகளை அகின்பீவ் தடுத்தார். இதன் மூலம் தாம் விளையாடிய கடைசி 23 போட்டிகளிலும் தோல்வியுறாமல் இருந்த ஸ்பெயின் இம்முறை உலகக் கிண்ணத்தில் ஜெர்மனி, ஆர்ஜன்டீனா மற்றும் போர்த்துக்கல்லுக்கு அடுத்து பலம் மிக்க அணியாக கிண்ணத்தை வெல்லும் கனவை பறிகொடுத்தது.

இதன் மூலம் ரஷ்யா அணி 1966 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 52 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலகக் கிண்ணத்தில் முன்னாள் சோவியட் ஒன்றியம் அரையிறுதி வரை முன்னேறியது.

ஸ்பெயின் அணி அதிக வெற்றி வாய்ப்புகளுடன் களமிறங்கிய இந்த போட்டியை காணவந்த 78,011 ரசிகர்களில் அரங்கில் இருந்த பெரும்பாலானவர்கள் போட்டியை நடத்தும் ரஷ்யாவுக்கே ஆதரவை வெளிக்காட்டினர்.

எனினும் போட்டி ஆரம்பித்து 12 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் மார்கோ அசன்சியோ ப்ரீ கிக் மூலம் பந்தை ரஷ்ய கோல்கம்பத்திற்கு அருகில் செலுத்தியபோது ஸ்பெயின் வீரரை தள்ளிக்கொண்டிருந்த ரஷ்யாவின் செர்கி இக்னாஷ்விச்சின் வலது கணுக்காலில்பட்டு பந்து சொந்த வலைக்குள் சென்றது. இதன் மூலமே ஸ்பெயின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

38 வயதும் 352 நாட்களும் கொண்ட இக்னாஷ்விச் உலகக் கிண்ண போட்டியில் ஓன் கோல் (Own goal) பெற்ற வயதான வீரராக மோசமான சாதனை ஒன்றையும் நிலைநாட்டினார். இதற்கு முன்னர் ஹொன்டுராஸ் வீரர் நொயேல் வல்லடரஸ் (37 வயது 43 நாட்கள்) 2014 உலகக் கிண்ணத்தில் ஓன் கோல் பெற்று சாதனை படைத்திருந்தார்.

போட்டியின் ஆரம்பம் முதல் ஸ்பெயின் வீரர்கள் வசமே அதிக நேரம் பந்து இருந்தது. குறிப்பாக ரஷ்யாவின் பின்களத்தில் ஐந்து பேர் இருக்க ஸ்பெயின் வீரர்கள் ஊடுருவ முயற்சிப்பதும் ரஷ்யா அதனை தடுப்பதுமாகவே போட்டி நீடித்தது.

எனினும் 40 ஆவது நிமிடத்தில் எல்லாம் திடீரென மாறியது. ரஷ்யா கோனர் கிக் ஒன்றை வென்றது. அதனை அலெக்சான்டர் சமெடோ உதைக்க நேராக அந்த பந்து ஆர்டம் டியுபாவின் தலையை நோக்கி சென்றபோது ஸ்பெயினின் ஜெராட் பிகேவின் (Gerard PIQUE) கையில்பட்டதால் ரஷ்யாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. டியுபா அதனை இலகுவாக கோலாக மாற்றினார்.

முதல் பாதி: ரஷ்யா 1 – 1 ஸ்பெயின்

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்தபோது ரஷ்யா ஸ்பெயினுக்கு நிகராக பதில் தாக்குதல்களை தொடுத்ததோடு சில வாய்ப்புகளையும் பெற்றது. எனினும் கடைசி நேரத்தில் ஸ்பெயின் அணி பந்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததோடு ரஷ்யா தனது பின்களத்தை பலப்படுத்தி தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியது.

முதல் சுற்றுடன் வெளியேறிய நடப்பு உலகக் கிண்ண சம்பியன்கள்

தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுத்த..

இரண்டாவது பாதி ஆட்டத்தில் மாற்று வீரராக வந்த அன்ட்ரஸ் இனியெஸ்டா நீண்ட தூரத்தில் இருந்து உதைத்த பந்து ஸ்பெயினின் வெற்றிவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது.

போட்டி முழுவதிலும் ஸ்பெயின் 1029 தடவைகள் பந்தை கடத்திச் சென்றபோது ரஷ்யாவால் 202 தடவைகள் மாத்திரமே பந்தை கட்டுப்படுத்த முடிந்தது. எப்படி இருந்தபோதும் ஸ்பெயினால் கோல் ஒன்றை புகுத்த முடியாமல் முழு நேர ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையானது.

இந்நிலையில் போட்டியின் முடிவை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட மேலதிக அரை மணி நேரத்திலும் இதே நிலை தான் நீடித்தது. ஸ்பெயின் வீரர்கள் பல தடவைகள் கோலை நோக்கி உதைத்தபோதும் ரஷ்ய பின்கள வீரர்களும் கோல்காப்பாளரும் பந்து வலைக்குள் செல்ல விடாமல் உறுதியாக தடுத்தனர்.

இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ரஷ்யா தனது நான்கு வாய்ப்புகளையும் வலைக்குள் செலுத்தி போட்டியை வென்றது.

கடைந்த நான்கு உலகக் கிண்ண கால்பந்து தொடர்களிலும் போட்டியை நடத்தும் அணிகள் பெனால் ஷூட் அவுட்டில் வெற்றி பெற்றிருக்கும் சாதனை இம்முறை ரஷ்யாவுக்கு சாதகமாக இருந்தது. மறுபுறம் ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தில் தனது நான்கு பெனால்டி ஷூட் அவுட்டில் மூன்றில் (1986 எதிர் பெல்ஜியம், 2002 எதிர் தென்னாபிரிக்கா மற்றும் இந்த போட்டி) தோற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிஃபா உலகத் தரவரிசையில் மிக பின் தங்கிய அணியாக (70ஆவது இடம்) இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற ரஷ்யா தொடரின் ஆரம்ப போட்டியில் சவூதி அரேபியாவை 5-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பின்னர் எகிப்துடனான போட்டியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வென்றே நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

தெருவில் வாழ்ந்து உலகக் கிண்ண வீரராக வந்தவரின் கதை

நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில்…

இந்நிலையில் ரஷ்யா தனது காலிறுதிப் போட்டியில் குரோஷிய அணியை ஜூலை 7ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.

முழு நேரம்: ரஷ்யா 1 – 1 ஸ்பெயின்

கோல் பெற்றவர்கள்

ஸ்பெயின் – செர்கி இக்னாஷ்விச் 12′ (ஓன் கோல்)
ரஷ்யா – ஆர்டம் டியுபா 40′ (பெனால்டி)

பெனால்டி ஷூட் அவுட்: ரஷ்யா 4 – 3 ஸ்பெயின்

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<