FIFA கழக உலகக் கிண்ணம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரியல் மெட்ரிட் வசம்

192
Image Courtesy - Getty Images

பிரேசிலின் கிரிமியோ (Gremio) அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய ரியல் மெட்ரிட் கழகம் FIFA கழக உலகக் கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணியாக சாதனை படைத்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் சயித் ஸ்பொர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் சனிக்கிழமை (16) இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது.

இரண்டாம் பாதி ஆரம்பித்து 8ஆவது நிமிடத்தில் (53) கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை கொண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்ட கோல் மூலமே ஸ்பெயினின் பலம் கொண்ட அணிக்கு கழக உலக சம்பயன் கிண்ணத்தை வெல்ல முடிந்தது.

இந்த வெற்றி மூலம் ரியல் மெட்ரிட் கழகம் ஆறு தடவைகள் உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முன்னதாக இரு முறை கழக உலகக் கிண்ணத்தை வென்றிருக்கும் அந்த அணி கண்டங்களுக்கு இடையிலான கிண்ணமாக அறியப்பட்டபோது மூன்று தடவைகள் சம்பியனாகியுள்ளது.

அதேபோன்று ரியல் மெட்ரிட் அணி இந்த ஆண்டில் முதல் முறையாக ஐந்து கிண்ணங்களை வென்றுள்ளது. முன்னதாக அந்த அணி சம்பியன்ஸ் லீக், ஸ்பானிஷ் லீக், ஐரோப்பிய சுப்பர் கிண்ணம் மற்றும் ஸ்பானிய சுப்பர் கிண்ணங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரியல் மெட்ரிட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளரான சினடின் சிடேனின் (Zinedine Zidane) அணி முக்கியமான தருணத்திலேயே இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ரியல் மெட்ரிட் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மந்தமான உள்ளுர் பருவத்தை ஆரம்பித்திருந்ததோடு லா லிகாவில் அந்த அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. முன்னணியில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் எட்டு புள்ளிகள் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் அந்த அணி அடுத்த வாரம் எல் க்ளசிகோ (El Clásico) தொடரை எதிர்கொள்ளவுள்ளது.     

FIFA கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் தகுதி

இந்நிலையில் இந்த வெற்றி ரியல் மெட்ரிட்டுக்கு எதிர்வரும் போட்டிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஆண்டு தோறும் நடைபெறும் கழக உலகக் கிண்ண போட்டியில் FIFA அமைப்பின் ஆறு மண்டலங்களின் சம்பியன் கழகங்கள் பங்கேற்கின்றன. இதில் அரையிறுதியில் போட்டியை நடாத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சம்பியன் கழகமான அல் ஜஸீரா அணியை வீழ்த்தியே ரியல் மெட்ரிட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபுறம் தென் அமெரிக்க கழக சம்பியனான கிரிமியோ தனது அரையிறுதியில் கொன்காகப் சம்பியன்ஸ் லீக்கை வென்ற மெக்சிகோவின் பசுக்கா அணியை வீழ்த்தியே ரியல் மெட்ரிட்டுடன் பலப்பரீட்சை நடத்த களமிறங்கியது. எனினும் போட்டி ஆரம்பித்தது தொடக்கம் ரியல் மெட்ரிட் ஆதிக்கம் செலுத்தியபோதும் பலம் கொண்ட அணியை எதிர்கொள்ளும் தயார்படுத்தல்களுடனேயே கிரிமியோ கழகம் களமிறங்கி இருப்பதை காண முடிந்தது.  

போட்டியின் 20ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் கழகத்திற்கு கோல் பெற மிக நெருங்கிய வாய்ப்பொன்று கிட்டியது. கோணர் திசையில் இருந்து வந்த பந்தை கிரிமியோ வீரர் கெரோமல் தலையால் முட்டி வெளியே தள்ளியபோது ரியல் மெட்ரிட்டின் கர்வஜல் (Carvajal) வேகமாக உதைத்து கோலாக்க முயன்றார். எனினும் எதிரணியின் தலைவர் அதனை கடைசி நேரத்தில் காலால் தட்டிவிட்டார்.    

கோணர் உதை மூலம் வந்த பந்தை கசிமிரோ தலையால் முட்டி கோல் எல்லைக்குள் புகுத்தியபோதும் அங்கிருந்த ரொனால்டோவினால் பந்தை எட்ட முடியாததால் ரியல் மெட்ரிட்டின் மற்றொரு கோல் பெறும் வாய்ப்பு பறிபோனது. பின்னர் முதல் பாதி முடிவுற ஐந்து நிமிடங்கள் இருந்தபோது கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை ரொனால்டோ உதைக்க, பந்து கோல் கம்பங்களுக்கு அப்பால் சென்றது. எனவே முதல் பாதி ஆட்டம் இரு அணிகளுக்கும் கோலின்றி முடிவடைந்தது.

முதல் பாதி : ரியல் மெட்ரிட் 0 – 0 கிரிமியோ

எனினும் இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே ரொனால்டோவின் கோல் பெறும் முயற்சி தீவிரம் அடைந்தது. எதிரணி கோல் கம்பத்தில் இருந்து 53 யார்களுக்கு அப்பால் இருந்து பந்தை முன்னோக்கி கொண்டு செல்ல முயன்ற ரொனால்டோவை எதிரணி வீரர் தடுக்க அவர் தடுக்கி விழுந்தார். இதன் மூலம் ரியல் மெட்ரிட் அணிக்கு மற்றொரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ, எதிரணியின் அரணை முறித்துக் கொண்டு கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் பந்தை வலைக்குள் புகுத்தினார்.

இந்த கோல் மூலம் ரொனால்டோ கழக உலகக் கிண்ணத்தில் அதிக கோல் பெற்றவர் என்ற தனது சொந்த சாதனையை மேலும் அதிகரித்துக் கொண்டார். அவர் இந்தப் போட்டிகளில் மொத்தம் ஏழு கோல்களைப் போட்டுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னரே போர்த்துக்கல்லின் ரொனால்டோ தனது ஐந்தாவது பாலோன் டிஓர் (Ballon d’Or) விருதை வென்று லியோனல் மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்திருந்தார்.

சிறந்த கால்பந்து வீரராக மெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ

போட்டியில் தொடர்ந்தும் ரியல் மெட்ரிட் கழகத்தின் ஆதிக்கம் நீடித்தது. பென்செமா, கிரிமியோ அணியின் கோல் கம்பத்துக்கு அருகில் வைத்து பந்தை ரொனால்டோவுக்கு கொடுக்க அவர் இலகுவாக அதனை கோலாக மாற்றினார். எனினும் அது ஓப் சைட் கோலாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

போட்டி இறுதித்தருவாயில் மேலும் கோல் பெற முயன்ற ரியல் மெட்ரிட் சார்பில் மொட்ரிக்ஸ் நீண்ட தூரத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி உதைத்த பந்தை கிரிமியோ கோல் காப்பாளர் மார்சிலோ க்ரோஹே தடுத்தார்.   

மறுபுறம் கிரிமியோ அணி தற்காப்பு ஆட்டத்தையே கடைசி வரை ஆடியதால் அந்த அணி கோல் பெறுவதற்கான எந்த ஒரு நெருக்கமான வாய்ப்பையும் பெறவில்லை.  

முதல் பாதியில் ரியல் மெட்ரிட் அணி 63 சதவீதம் பந்தை தம்மிடம் தக்கவைத்துக் கொண்டிருக்கும்போது கிரிமியோ அணியால் 10 சதவீதமே அதனை செய்ய முடிந்தது. ஒரு தடவை கூட அந்த அணி எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் பெரும்பாலும் இதே நிலை தொடர்ந்தது.

முழு நேரம் : ரியல் மெட்ரிட் 1 – 0 கிரிமியோ

கோல் பெற்றவர்

  • ரியல் மெட்ரிட் – கிறிஸ்டியானோ ரொனால்டோ 53’

கடந்த 11 கழக உலகக் கிண்ண போட்டிகளில் 10 தடவைகள் ஐரோப்பிய கழகங்களே கிண்ணத்தை வென்றுள்ளன. இது தவிர பிரேசிலின் கொரின்தியன் 2012இல் செல்சி கழகத்தை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

இதேவேளை கழக உலகக் கிண்ணத்தின் மூன்றாவது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் சனிக்கிழமை அல் ஜசீரா மற்றும் மெக்சிகோவின் பசுக்கா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த பசுக்கா 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெண்கலப் பதக்கத்தை வென்றது.  

2018 FIFA கழக உலகக் கிண்ணம் அடுத்த ஆண்டு டிசம்பர் 12 முதல் 22 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும்.