இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்கள் பணி நீக்கம்

388

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்களை வியாழக்கிழமை (27) பதவி நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டட்லி ஸ்டேன்வோல், உதவிப் பயிற்றுவிப்பாளர் தேவசகாயம் ராஜமணி மற்றும் கோல்காப்பு பயிற்றுவிப்பாளர் மஹின்த கலகெதர ஆகியோரே திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கால்பந்து சம்மேளனம் தமது ஊடக அறிவிப்பு ஒன்றின் மூலமே இதனை உறுதி செய்துள்ளது.  

தேசிய அணியின் பயிற்றுவிப்பு பணியாளர்கள் தேசிய அணியின் சேவைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் காலங்களில் இலங்கை தேசிய அணி சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளாத காரணத்தினாலேயே இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்” என்று குறித்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய தேசிய அணியின் பங்கேற்பு இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த SAFF கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி காலவரை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பயிற்றுவிப்பாளர்களை நீக்குவது குறித்து இலங்கை கால்பந்து சம்மேளனம் ஆலோசித்து வருவதாக செய்திகள் பரவி இருந்த போதும் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக உள்ளது. டட்லி ஸ்டேன்வோல் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேசிய அணிக்கு பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார். எனினும் அவர் ஒரே ஒரு சுற்றுப் பயணத்திற்கே பயிற்றுவிப்பாளராக அணியை வழிநடாத்தியுள்ளார். திறமை அடிப்படையில் அன்றி ஒரு நிர்வாக முடிவாகவே இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

பயிற்சியாளராக பதவி ஏற்ற பின் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சர்வதேச நட்புறவு போட்டிகளை நடாத்துவது பற்றி ஸ்டேன்வோல் விருப்பம் வெளியிட்டிருந்தபோதும் இலங்கை கால்பந்து சம்மேளனம் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கவில்லை.

இந்த பயிற்சியாளர்களை நீக்கும் முடிவின் பின்னணியில் இலங்கை தேசிய கால்பந்து அணிகளின் முகாமைத்துவக் குழுத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பில்லி இருப்பதாக நம்பப்படுகிறது.  

பயிற்றுவிப்பாளர்கள் அந்த பதவிக்கு பொருத்தமானவர்கள் என்று நாம் நம்பவில்லை. FFSL க்கு ஒரு நீண்ட கால திட்டம் தேவைப்படுகிறது.”  என இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு நெருங்கிய வட்டாரம் ஒன்று கருத்து தெரிவித்திருந்தது.

இலங்கை கால்பந்து சம்மேளனமும் உள்நாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தி இருப்பதாக ThePapare.com க்கு தெரியவருகிறது. இதில் டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் தொடர்ந்து இரு முறை சம்பியனாகிய கொழும்பு கால்பந்துக் கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி மற்றும் ரினௌன் விளையாட்டுக் கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மொஹமட் அமானுல்லா ஆகியோர் பயிற்றுவிப்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அறிந்துகொள்ள டட்லி ஸ்டேன்வோலை தொடர்புகொள்ள ThePapare.com முயன்றபோதும் அது பயனளிக்கவில்லை.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராக யாரை தெரிவு செய்யலாம் என்ற உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்