SWAFF நிறைவேற்று சபை உறுப்பினராக அநுர டி சில்வா தெரிவு

92

தென் மேற்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (SWAFF) நிறைவேற்றுச் சபை உறுப்பினராக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் (FFSL) தலைவர் அநுர டி சில்வா தெரிவாகியுள்ளார்.

பூட்டானிடமும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF)..

சவூதி அரேபிய கால்பந்து சம்மேளனத்தின் முயற்சியினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தென் மேற்கு கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முதலாவது பொதுச் சபைக் கூட்டம் சவூதி அரேபியாவின் ஜித்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.

தெற்கு ஆசியாவின் ஏழு நாடுகளும், மேற்கு ஆசியாவின் ஆறு நாடுகளும் உள்ளடங்லாக மொத்தமாக 13 நாடுகள் இந்த புதிய சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்றன.

இதன்படி பஹ்ரைன், ஓமான், குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராட்சியம், மற்றும் ஏமன் ஆகிய மேற்கு ஆசிய நாடுகளும், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய தெற்கு ஆசிய நாடுகளும் இவ்வமைப்பில் இடம்பெற்றுள்ளன.

இப்பிராந்தியத்தில் கால்பந்து விளையாட்டை அபிவிருத்தி செய்யவும், உறுப்பு நாடுகளின் கால்பந்து விளையாட்டின் தரத்தை மேம்படுத்தி ஏனைய உலக நாடுகளுடன் சமபலம் பொருந்திய அணியாக விளையாடுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுமே இந்தப் புதிய சம்மேளத்தின் பிரதான குறிக்கோளாகும்.

ThePapare.com: பிரீமியர் லீக் முதல் வாரத்தின் சிறந்த வீரர்

ThePapare.com பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர்…

எனவே, எதிர்வரும் காலங்களில் உறுப்பு நாடுகளின் பங்குபற்றலுடன் கால்பந்து போட்டித் தொடரொன்றை நடத்துவதற்கும் பொதுச் சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. மேலும், 13 நாடுகளும் பங்குபற்றும் மிகப் பிரமாண்டமான புட்ஸால் கால்பந்தாட்டப் போட்டித் தொடரொன்றை நடத்துவதற்கும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணப் கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆசிய நாடுகளின் பங்குபற்றலை அதிகரிக்கச் செய்யவும், அதன் மூலம் உலகக் கிண்ணத்தை ஆசிய நாடொன்று கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் இவ்வமைப்பு எதிர்பார்த்துள்ளது.

இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா மற்றும் அதன் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமரும் பங்கேற்றிருந்தனர்.

இவ்வமைப்பை நிறுவுவதற்கு முன்நின்று செயற்பட்ட சவூதி அரேபிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஆடில் இஸ்ஸத் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற உப தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தவிர, மற்றைய எல்லாப் பதவிகளுக்குமான உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டன.

இதன்படி, இந்திய கால்பந்து சம்மேளனத்தின் உப தலைவர் சுப்ரதா தத்தா தென் மேற்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராகத் தெரிவாகியதுடன், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பஹ்ரைன் மற்றும் குவைட் ஆகிய ஐந்து அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் நிறைவேற்று சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் தலைவர் அநுர டி சில்வாவும் நிறைவேற்று சபை உறுப்பினராகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில், இப்புதிய சம்மேளனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிப்பதற்கான விசேட நிறைவேற்று சபை கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி மலேஷியாவில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்; தொடரின் மறுநாளான 30ஆம் திகதி ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் மலேஷியாவில் நடைபெறவுள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் இந்தப் புதிய சம்மேளனத்தின் ஊடாக இலங்கையின் கால்பந்து விளையாட்டின் அபிவிருத்திக்கு பல்வேறு உதவிகள் சவூதி அரேபியா உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளினால் கிடைக்கும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது.   

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<