கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த நிக்ஸியின் இன்றைய நிலை என்ன?

12786
Niksy Ahamed

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 5,000 அல்லது 10,000 ஓட்டங்கள் பெறுவது என்பது எவ்வாறு ஒரு மைல்கல்லாக அமைகின்றதோ, அதேபோன்றுதான் பாடசாலைகள் கிரிக்கெட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் குவிப்பதென்பது பாடசாலை வீரா்களைப் பொறுத்தமட்டில் மிகப்பெரிய ஒரு சாதனையாகக் கருதப்படுகின்றது.

அந்த மகத்தான சாதனையை அல்லது மைல்கல்லை 2013/2014 பாடசாலை கிரிக்கெட் பருவ காலத்தில் எட்டியவர்கள் பட்டியலில் இரண்டாமவராக இணைந்து கொண்டவர்தான் இலங்கையின் கிழக்கில் பிறந்து மேற்கில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் நிக்ஸி அஹமட்.

பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரா் ஒருவர் 1,000 ஓட்டங்களைப் பெற்ற வரலாற்றுச் சாதனையையும் நிக்ஸி ஏற்படுத்தினார். எனினும், கொழும்பு பிரதேச பாடசாலையில் இணைந்துகொண்டதாலேயே நிக்ஸி அஹமட்டிற்கு இந்த சாதனையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு அமைந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பாடசாலைகள் கிரிக்கெட்டில் நிக்ஸி எதனை சாதித்தார்?  

கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கிரிக்கெட் அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும் ஆரம்பப் பந்து வீச்சாளராகவும் விளையாடிய நிக்ஸி, 2013/2014 பருவ காலத்தில் 16 போட்டிகளில் விளையாடி 28 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 953 பந்துகளை எதிர்கொண்டு 40.00 என்ற ஓட்ட சராசரியுடன் 1040 ஓட்டங்களைக் குவித்தார்.

இதில் மூன்று சதங்களும், ஐந்து அரைச் சதங்களும் அடங்குகின்றன. அதிலும் குறிப்பாக 35 சிக்ஸர்களும், 139 பவுண்டரிகளும் உள்ளடங்களாகவே இவர் இந்த ஓட்ட எண்ணிக்கையை அடைந்துள்ளார்.  துடுப்பாட்டத்தில் மாத்திரமன்றி, பந்து வீச்சில் 27 விக்கட்டுக்களையும் நிக்ஸி கைப்பற்றியிருந்தார்.

அதேபோன்று அவர், 2012/2013 பாடசாலை கிரிக்கெட் பருவ காலத்திலும் 12 போட்டிகளில் 21 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 607 பந்துகளை எதிர்கொண்டு 36.85 என்ற சராசரியுடன் மொத்தமாக 737 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதில் ஒரு சதமும் 5 அரைச்சதங்களும் அடங்குகின்றன. இந்த ஓட்ட எண்ணிக்கையில் 40 சிக்ஸர்களையும், 88 பவுண்டரிகளையும் அவர் விளாசியுள்ளார்பந்து வீச்சிலும் 26 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் கந்தானை ஜோஸப் வாஸ் கல்லூரி அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும், ரேவத்த அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களையும், பாணந்துறை ரோயல் அணிக்கு எதிராக 115 ஓட்டங்களையும் நிக்ஸி அஹமட் குவித்துள்ளார்.

லும்பினி கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில் மற்றொரு சதம் குவிக்கும் வாய்ப்பை 4 ஓட்டங்களினால் அவர் தவறவிட்டார்.

இதனைவிட நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கெதிராக 88 ஓட்டங்களையும், கல்கிசை புனித தோமஸ் அணிக்கெதிராக 75 ஓட்டங்களையும், மொரட்டுவ வித்தியாலயத்திற்கு எதிராக 64 ஓட்டங்களையும், ஜனாதிபதிக் கல்லூரிக்கு எதிராக 61 ஓட்டங்களையும் பெற்ற நிக்ஸி தனது அணிக்கு மிகப்பாரிய கங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.

நிக்ஸி அஹமட் பாடசாலை கிரிக்கெட் போட்டிகளுக்கு மேலதிகமாக, இலங்கையின் முதல்தர பிரீமியர் லீக்கில் மூன்றுநாள் போட்டி ஒன்றிலும் ஒருநாள் போட்டியொன்றிலும் விளையாடியுள்ளார்

நிக்ஸி அஹமடின் ஆரம்ப காலம்

அம்பாரை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்சை் சேர்ந்த நிக்ஸி அஹமட் நிந்தவூர் அல்அஸ்ரக் தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவராவார். 2012ஆம் ஆண்டு இப்பாடசாலையிலிருந்து வெளியேறி கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நிக்ஸி இணைந்து கொண்டார்.

நிந்தவூர் அல்அஸ்ரக் தேசிய பாடசாலையின் 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இடம்பெற்ற நிக்ஸி, உள்ளூர் பாடசாலைகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அம்பாரை மாவட்ட அணிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

Zahira Collage Cricket
நிக்ஸி விளையாடிய கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி

அதன் பின்னர் அம்பாரை மாவட்ட அணிக்கும், பதுளை மாவட்ட அணிக்குமிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் 144 ஓட்டங்களை பெற்று அம்பாரை மாவட்ட அணியை வெற்றி பெறச் செய்வதில் இவர் முக்கிய பங்காற்றினார். தனது அபார திறமையினால் நிக்ஸி ஊவா மாகாண கிரிக்கெட் அணிக்கு இலகுவாக தெரிவானார்.

15 வயது வீரராக 17 வயதுக்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் ஊவா மாகாண அணியில் விளையாடிய நிக்ஸி, மத்திய மாகாணத்திற்கு எதிராக பள்ளேகலை சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடி சதத்தினைப் (107) பெற்றார்

இதில் ஊவா மாகாண அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மத்திய மாகாண அணி 257 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. நிக்ஸியின் அதிரடி ஆட்டம் ஊவா மாகாண அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது.

அத்துடன் வடமேல் மாகாண அணிக்கு எதிராக 90 ஓட்டங்களையும், கிழக்கு மாகாண அணிக்கு எதிராக 78 ஓட்டங்களையும், மேல் மாகாண அணிக்கு எதிராக 58 ஓட்டங்களையும் பெற்றதுடன் மொத்தமாக 47 சிக்ஸர்களை விளாசி தனது அதிரடித் துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்தினார்.

அஸ் – அஸ்ரக் தேசிய பாடசாலையில் பிரதான கிரிக்கெட் அணி இல்லாத நிலையிலேயே நிக்ஸி மாவட்ட, மாகாண அணிகளில் தனது திறமையை வெளிக்காட்டி வந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.  

அஸ் – அஸ்ரக் தேசிய பாடசாலையில் நீண்ட காலம் விளையாட்டுத்துறை ஆசிரியராக கடமையாற்றிய இப்றாஹீம் அவர்களின் முயற்சியும், கடின உழைப்பும்தான் குறைந்த வசதிகளைக் கொண்டிருந்த வேளையிலும் இப்பாடசாலையில் கடின பந்து கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கு காரணமாக இருந்தது. அந்த வகையில்தான் நிக்ஸி போன்ற பல சிறந்த வீரா்களை இப்றாஹீம் ஆசிரியர் வெளி உலகத்திற்கு அறிமுப்படுத்தினார்.  

அந்த வகையில் பல திறமைகளைக் கொண்ட நிக்ஸியை சிறந்த முறையில் பயன்படுத்தி, அதன்மூலம் தமது பாடசாலைக்கு பயனைப் பெற நினைத்த கொழும்பு ஸாஹிரா கல்லூரி நிக்ஸியை 2012ஆம் ஆண்டு தமது கல்லூரிக்கு இணைத்துக்கொண்டது.

Awards
சிறந்த வீரருக்கான விருதுகள்

அதனைத் தொடர்ந்து, ஸாஹிரா கல்லூரியின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த மஹேஷ் வீரசிங்கவின் பயிற்சி மற்றும் மேற்பார்வையில் தனது துடுப்பாட்டத்தை வலுப்படுத்திய நிக்ஸி அஹமட், மிக விரைவில் அதிரடித் துடுப்பாட்ட வீரா் என்ற பெயரைப் பதித்தார்.

கொழும்பு ஸஹிரா கல்லூரி கால்பந்தாட்டத்தில் தேசிய ரீதியில் முன்னணி வகித்தபோதிலும், அக்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் பெரிய முன்னேற்றத்தை அடையவில்லை. இருந்த போதும் அக்கல்லூரி கிரிக்கெட்டில் கடந்த 5 வருடங்களாக மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைந்து வருகின்றது.

அந்த வகையில் 2012/2013 பருவ காலத்திலும், 2013/2014 பருவ காலத்திலும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி இலங்கையின் மிகவும் பலம் வாய்ந்த பாடசாலை அணிகளை தோற்கடித்துள்ளது. குறித்த காலப்பகுதிகளில் ஸாஹிரா கல்லூரியின் வெற்றியில் நிக்ஸியின் துடுப்பாட்டம் பிரதான பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

ஸாஹிரா கல்லூரியின் ”80 குழு” ஏற்பாடு செய்த அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர்கள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஸாஹிரா கல்லூரி சம்பியனாகியது. பல முன்னணி பாடசாலை கிரிக்கெட் அணிகளைத் தோற்கடித்தே ஸாஹிரா சம்பியனானது. ஸாஹிரா கல்லூரியின் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாகும்.

அது போன்றே, நிக்ஸி அஹமட் தனது அதிரடி ஆட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்திய சுற்றுப்போட்டியாகவும் அது அமைந்தது. இதன் அரையிறுதிப் போட்டியில் ஸாஹிரா கல்லூரி ஜனாதிபதிக் கல்லூரியுடன் மோதியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸாஹிரா கல்லூரி 4 விக்கட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றதுஇதில் நிக்ஸி 6 சிக்ஸர்கள் அடங்களாக 45 ஓட்டங்களைப் பெற்றார். ஜனாதிபதிக் கல்லூரி அணி 45 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

வெஸ்லி கல்லூரியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸாஹிரா கல்லூரி 2 விக்கட்டினை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அதிரடியாக ஆடிய நிக்ஸி 15 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 7 சிக்ஸர்களும் அடங்கும். இப்போட்டியில், வெஸ்லிக் கல்லூரி 48 ஓட்டங்களைப் பெற்று 22 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

Awarding Ceremony
கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வின்போது (Photo Credit: Zahira College Media Unit)

இச்சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் நிக்ஸி அஹமட் தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டியைக் கண்டு களித்த ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களும் நிக்ஸியைப் பாராட்டியதுடன் அவருக்கு பரிசுகளையும் வழங்கியமை சிறப்பம்சமாகும்

அதேபோன்று, தமது திறமைக்கு மற்றொரு சான்றாக அவருக்கு, பெட்ஸ்மன்.கொம் இணையதளத்தின் 2012/13 பருவகாலத்திற்கான பிரபல்யமான வீரருக்கான விருதும் கிடைக்கப்பெற்றது. அதுபோல் ஸாஹிரா கல்லூரியின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவர் அக்காலத்தில் போற்றப்பட்டார்.

ஸாஹிரா கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் மஹேஷ் வீரசிங்க, கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழகத்திற்கும் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியதால் நிக்ஸி அஹமடை அந்தக் கழகத்தில் இணைவதற்கு மஹேஷ் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

சோனகர் கழகத்திற்காக இரண்டாம் மட்டப் போட்டிகள் சிலவற்றில் பங்குபற்றிய நிக்ஸி, குறிப்பிடத்தக்க ஓட்டங்களையும் பெற்றார். நிக்ஸின் திறமையை அறிந்த கஸ்டம்ஸ் அணி பிற்காலத்தில் நிக்ஸியை தமது அணிக்கு உள்வாங்கியது. இலங்கையின் இரண்டாம் தர அணியான கஸ்டம்ஸ் அணிக்காக இவர் மிகச்சிறப்பாக விளையாடி பல அரைச் சதங்களைப் பெற்றார். இதன்போது, தனது அதி கூடிய ஓட்டங்களாக 75 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொடுத்தார்.

கஸ்டம்ஸ் இரண்டாம் தர அணி என்பதால் முதல்தர கழகம் ஒன்றில் விளையாடும் நோக்கில் நிக்ஸி பிற்காலத்தில் சிலாபம் புனித.மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தில் இணைந்து கொண்டார்.

சென்.மேரியன்ஸ் கழகம் மலேசியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்டது. இச்சுற்றுப் போட்டியில் சகல துறைகளிலும் நிக்ஸி பிரகாசித்து தனது அணியின் வெற்றிக்கும் பங்களிப்புச் செய்தார்.

அதன் பின்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்திய 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் நிக்ஸி அஹமட் சில போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியதன் காரணத்தினால், அவருக்கு பிரிமியர் லீக் போட்டிகளில் கூடுதலான வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. அதன் பின்னர் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஒரு இருளை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

Winஅதன் பின்னர் ஸாஹிரா கல்லூரியில் கல்வியை முடித்துக் கொண்ட நிக்ஸி தனது சொந்த இடமான அம்பாரைக்குத் திரும்பினார். தொழில் ரீதியான மேலதிக கல்வியைத் தொடர்வதற்காகவே அம்பாரை வந்ததாக நிக்ஸி தெரிவிக்கின்றார்.

எனினும் குறித்த காலப்பகுதியில் தனது சொந்த ஊரில் கடினப் பந்து கிரிக்கெட்டிற்கான வசதிகள் இல்லாத நிலைமையிலும் நிக்ஸி இருக்கும் வளங்களை வைத்து தனது பயிற்சிகளை மேற்கொண்டார்.

இக்கால கட்டத்தில், நிக்ஸி கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விலகி தனது சொந்த இடம் திரும்பியதை அறிந்து கொண்ட நிக்ஸியின் முன்னாள் பயிட்சியாளர் மஹேஷ் வீரசிங்க மீண்டும் சோனகர் விளையாட்டுக் கழகத்தில் இணைந்து விளையாடுமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அதற்கு உடன்படவில்லை.

நிக்ஸியுடன் பாடசாலை மட்டத்தில் விளையாடிய குஷல் மென்டிஸ் இன்று தனது இளம் வயதில் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றார். எனவே, தானும் அவரைப் போன்று இளம் வயதில் பிரகாசித்த ஒருவர் என்பதை உணர்ந்தள்ள நிக்ஸி மீண்டும் தனது கிரிக்கெட் பயணத்தை தொடர முடிவு செய்துள்ளார்.

அதனால் மீண்டும் கொழும்பு கழகம் ஒன்றில் இணைந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் நோக்கில் உள்ள அவருக்கு தனது பழைய நிலைக்கு மீண்டு, சிறந்த துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்துவது என்பது இலகுவான ஒரு காரியமல்ல.

பலவிதமான சவால்களை முகம்கொடுத்து, போராட்டம் மிக்க முயற்சிகளை செய்து, தொடர் பயிற்சியில் ஈடுபட்டு உழைப்பதன் மூலமே அவருக்கு தனது திறமையை மீண்டும் காண்பிக்க வாய்ப்பு ஏற்படும்.

எவ்வாறிருப்பினும் கிழக்கில் இருந்து வளர்ந்து, இவ்வளவு சாதனைகளை படைத்திருக்கும் நிக்ஸி அஹமட் எதிர்காலத்தில் கிழக்கிற்கு கிரிக்கெட் முன்னுதாரணமாக மாற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.