இலங்கைக்கு எதிரான T20 தொடரிலிருந்து அன்ட்ரூ டை வெளியேற்றம்

72
(Photo by Chris Hyde/Getty Images)

அவுஸ்திரேலிய (ஆஸி.) கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அன்ட்ரூ டை, இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரிலிருந்து முழுமையாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழங்கை உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருக்கும் அன்ட்ரூ டை குறித்த உபாதையிலிருந்து பூரணமாக குணமடையாத நிலையிலேயே இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரிலிருந்து வெளியேறுகின்றார். அதேநேரம் அன்ட்ரூ டை, இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரின் பின்னர் பாகிஸ்தானுடன் அவுஸ்திரேலிய அணி விளையாடவுள்ள T20 தொடரில் விளையாடுவதிலும் சந்தேகம் நிலவுகின்றது.

அவுஸ்திரேலியாவில் இலங்கை அணியின் ஆதிக்கம் எவ்வாறு இருக்கும்?

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய…

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான சோன் அப்போட், அன்ட்ரூ டை இன் இடத்தினை பிரதியீடு செய்கின்றார். 

ஆஸி. அணியின் தலைவரான ஆரோன் பின்ச், அன்ட்ரூ டை இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே உபாதைக்கு உள்ளாகியதாக தெரிவித்திருந்தார்.

அன்ட்ரூ டை இல்லாத போதும் ஆஸி. கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான T20 தொடரில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள சோன் அப்போட்டுடன் சேர்த்து மிச்செல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் பில்லி ஸ்டேன்லக் போன்ற சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. அணியின் தலைவரான ஆரோன் பின்ச், இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடுவது முதலில் சந்தேகமாக இருந்த போதிலும் அவர் பூரண உடற்தகுதியுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இலங்கை அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர ஆஸி. அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான அஸ்டன் டேர்னர், போதிய உடற்தகுதியினை நிரூபித்து இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை தக்கவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை – ஆஸி. அணிகள் இடையிலான T20 தொடர், ஞாயிற்றுக்கிழமை (27) அடிலைட் நகரில் தொடங்கும் T20 போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<