பர்ஹான் பெஹர்டீனின் தலைமையில் இலங்கையுடன் மோதவுள்ள தென்னாபிரிக்க T-20 அணி

2178
Farhan Behardien
©Muzi Ntombela/BackpagePix

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் தற்போது நடக்கும் டெஸ்ட் போட்டித்தொடரை அடுத்து இடம்பெறவுள்ள T-20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கும் தென்னாபிரிக்க அணியை பர்ஹான் பெஹர்டீன் வழிநடாத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 13 பேர்கொண்ட குழாத்தில் ஆறு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, அணியின் சிரேஷ்ட வீரர்களில் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோன்ஜோன் ஸ்மட்ஸ், தியுனிஸ் டி பிருய்ன், மங்கலிசோ மோசெஹ்ல், அன்டைல் பெஹ்லுக்வாயோ, டேன் பீடர்சன், லுங்கி கிடி ஆகியோரே புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஆறு வீரர்களாவர். இவர்களில் பெஹ்லுக்வாயோ மாத்திரமே சர்வதேச போட்டிகளில் ஏற்கனவே விளையாடி அனுபவம் கொண்டவராவார்.

இதில் ஸ்மட்ஸ், தென்னாபிரிக்க உள்ளூர் கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஒன்றில் (CSA T20 Challenge 2016-17) வாரியர்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டு, 41.22 என்ற ஓட்ட சராசரியுடன் ஒரு சதம், ஒரு அரைச்சதம் உள்ளடங்களாக 371 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

அதே தொடரில், விக்கெட் காப்பாளராக லயன்ஸ் அணிக்காக ஆடியிருந்த மோசெஹ்ல், 277 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.  அதேபோன்று டி பிருய்ன், நைட்ஸ் அணி சார்பாக விளையாடி, இரண்டு அரைச்சதங்களுடன் 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்ததுடன், கிடி 9 விக்கெட்டுக்களையும், பீடர்சன் 6 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர். இந்த தொடரில், பெஹ்லுக்வாயோ ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடியிருந்தார்.  

இலங்கையுடனான இந்த T-20 தொடரினையடுத்து இடம்பெற இருக்கும் இலங்கையுடனான ஒரு நாள் தொடர், இவ்வருட நடுப்பகுதியில் இங்கிலாந்தில் ஆரம்பாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண தொடரிற்கு தென்னாபிரிக்க அணியை கட்டியெழுப்பவதற்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பமாகும்.

இதன் காரணமாக இந்த T-20 தொடரில் முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க தெரிவுக்குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான  லின்டா ஷொன்டி தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ”முக்கிய வீரர்கள் சிலர் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து தற்போது வரை ஓயாமல் தொடர்ச்சியாக போட்டிகளில் ஆடிக்கொண்டிருப்பதாலும், இலங்கை அணியுடனான தொடரை அடுத்து  இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து உடனான தொடர்களும் வருவதாலேயே இந்த ஓய்வு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பர்ஹான்  தென்னாபிரிக்காவின் T-20 போட்டிகளில் விளையாடும் முன்னுதாரணமான வீரர். ஜோன்ஜோன் ஸ்மட்ஸ் நல்ல ஓட்ட விகிதத்துடன் ஓட்டங்களை சேர்க்கும் ஒருவர்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, இத்தொடருக்கு இணைக்கப்பட இருந்த 31 வயது நிரம்பிய சகலதுறை ஆட்டக்காரரான டேவிட் வைஸ், வேறு அணி (Sussex) ஒன்றுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாக தேர்வாளர்களினால் அவர் நிராகரிக்கப்பட்டிருந்தார்.  

அதேபோன்று, காயம் காரணமாக ஓய்விலுள்ள தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான மொர்னே மோர்க்கல், பிடி வில்லியர்ஸ் ஆகியோர் தேறி வருவதால், அவர்களை மூன்றாவது T-20 போட்டியில் எதிர்பார்க்க முடியும் என்றும் ஷொன்டி மேலும் கருத்து தெரிவித்தார்.

இலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான T-20 தொடர்

முதல் போட்டி – ஜனவரி 20ஆம் திகதி – செஞ்சூரியன் மைதானம்

இரண்டாவது போட்டி – ஜனவரி 22ஆம் திகதி – ஜொகன்னஸ்பெர்க் மைதானம்

மூன்றாவது போட்டி – ஜனவரி 25ஆம் திகதி – கேப் டவுன்

தென்னாபிரிக்க அணியின் T-20  குழாம்  

பர்ஹான் பெஹர்டீன்(அணித்தலைவர்), தியுனிஸ் டி பிருய்ன், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், இம்ரான் தாஹீர், ஹெய்னோ குன், டேவிட் மில்லர், மங்கலிசோ மொசெஹ்ல், லுங்கி கிடி, வெய்ன் பர்னெல், டேன் பீடர்சன், ஆரோன் பங்கிசோ, அன்டைல் பெஹ்லுக்வாயோ,ஜோன்ஜோன் ஸ்மட்ஸ்