கான்ரிச் பினான்ஸ் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற ஜோன் கீல்ஸ்

83

ரொஸ்கோ தட்டில் மற்றும் அஷேன் சில்வாவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான B பிரிவு ஒருநாள் தொடரில் கான்ரிச் பினான்ஸ் அணியை ஜோன் கீல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது.

பெயார் அன்ட் லவ்லி மென் அனுசரணையில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு,  MCA மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜோன் கீல்ஸ் அணித்தலைவர் அஷான் பீரிஸ் நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட வந்த கான்ரிச் பினான்ஸ் அணி முக்கிய நேரங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முடியாமல் போனது. மத்திய வரிசையில் வந்த நவிந்து நிர்மால் 99 பந்துகளில் 5 பௌண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை தொடர்பில் ரொஷேன் சில்வா

இதன் மூலம் கான்ரிச் பினான்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது. இதன்போது ஜோன் கீல்ஸ் அணி சார்பில் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்த ஜயதிலக்க 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட வந்த ஜோன் கீல்ஸ் அணி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரொஸ்கோ தட்டில் மற்றும் அஷேன் சில்வா அந்த அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றனர்.

இருவரும் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 186 ஓட்டங்களை பெற ஜோன் கீல்ஸ் அணி 41.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் போது ரொஸ்கோ தட்டில் 121 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 103 ஓட்டகளை பெற்றதோடு அஷேன் சில்வா 97 பந்துகளில் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை பெற்றார். ரொஸ்கோ தட்டில் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

போட்டியின் சுருக்கம்

கான்ரிச் பினான்ஸ் – 213/7 (50) – நவிந்து நிர்மால் 79*, தரூஷன் இத்தமல்கொட 43, ஷஷிக திவன்க 29, சச்சித்த ஜயதிலக்க 3/38

ஜோன் கீல்ஸ் – 217/3 (41.5) – ரொஸ்கோ தட்டில் 103*, அஷேன் சில்வா 86*, பூர்ன சாருக்க 2/43

முடிவு – ஜோன் கீல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க