உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளை எதிர்வுகூறிய டு பிளேசிஸ்

1610
AFP

இந்த ஆண்டுக்கான (2019) கிரிக்கெட் உலகக் கிண்ணம், தென்னாபிரிக்க அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற தவறியிருக்கும் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (6) மன்செஸ்டர் நகரில் இடம்பெற்ற லீக் போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தமது உலகக் கிண்ண பயணத்தினை நிறைவு செய்திருந்தது. மேலும், குறித்த வெற்றியுடன் உலகக் கிண்ண அணிகள் நிரல்படுத்தலில் அவுஸ்திரேலியாவை இரண்டாம் இடத்திற்கும் தென்னாபிரிக்க அணி கொண்டு வந்திருந்தது.

ஆஸியுடனான வெற்றியுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்கா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…

இந்நிலையில் தென்னாபிரிக்க அணியின் வெற்றி தொடர்பில் நேற்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் பாப் டு பிளேசிஸ் கதைத்திருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் வீரர்களான  இம்ரான் தாஹிர் மற்றும் ஜே.பி. டுமினி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருக்கின்றனர். அவர்களின் வயதை ஒத்த பாப் டு பிளேசிஸ் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் சதம் ஒன்றினை பெற்று தனது தரப்பு வெற்றிக்கு முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

பாப் டு பிளேசிஸ் இந்த சதத்துடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிடுவரா எனக் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

”அது தொடர்பில் இப்போது ஒன்றும் தெரியாது. நான் தென்னாபிரிக்க அணிக்காக  (தொடர்ந்து) விளையாடுவதை விரும்புகின்றேன், ஆனால் பெரிய விடயம் என்னவெனில், எனக்கு அணித்தலைவராக ஒரு பொறுப்பு இருக்கின்றது.”

அதேநேரம் பாப் டு பிளேசிஸ் இந்த உலகக் கிண்ணத் தொடரில் கிடைத்த ஏமாற்றத்தினை ஒருபுறம் வைத்துவிட்டு தென்னாபிரிக்க அணி, 2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்காக இளம் வீரர்களை அனுபவம் கொண்ட வீரர்களுடன் இணைத்து இப்போதிருந்தே தயார்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், பாப் டு பிளேசிஸ் இந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் மற்றும் உலகக் கிண்ணத்தை வெல்லும் ஆற்றல் கொண்ட அணி எது என்பது தொடர்பிலும் கருத்துக்கள் வெளியிட்டிருந்தார்.

சதமடித்து இலங்கையின் துடுப்பாட்டத்துக்கு வலுச்சேர்த்த மெதிவ்ஸ்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு…

”நாம் இன்று வெற்றி பெற்றுக் கொண்டதால் இந்திய அணி மகிழ்ச்சியுடன் இருக்கும் என எண்ணுகின்றேன். என்னால், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மோதுவதை எதிர்பாரக்க கூடியதாக இருக்கின்றது. எனினும், நான் எண்ணுவதன்படி, பெரிய போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் சிறப்பாக விளையாடக் கூடிய அணிகள். எனவே, (உலகக் கிண்ணத்தை வெல்லும்) தருணம் ஒன்றில் நான் இந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்கு ஆதரவு தருவேன்” என டு பிளேசிஸ் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் உலகக் கிண்ண அணிகள் நிரல்படுத்தலில், முதல் இடத்தில் இருக்கும் இந்திய  அணியும், நான்காம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (9) மோதுகின்றன.

இதேநேரம் இரண்டாவது உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும், அவுஸ்திரேலிய அணியும் எதிர்வரும் வியாழக்கிழமை (11) பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<