2016/17 பருவகாலத்திற்கான FA கிண்ண சுற்றுப் போட்டியின் இறுதி 32 அணிகளுக்கிடையிலான போட்டியில், புத்தளம் விம்பிள்டன் அணியை 12-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி கொண்ட சென்.மேரிஸ் அணி தமது ஆரதவாளர்களின் பெரும் மகிழ்ச்சிக்கு மத்தியில் தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.  

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் தமது கடந்த போட்டியில் மன்னார் ஹில்லரி அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட புத்தளம் விம்பிள்டன் அணியும் அதனை எதிர்த்து, விறுவிறுப்பான போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணியை 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட சென்.மேரிஸ் அணியும் மோதின.  

சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள்

பெருந்திரளான யாழ் ரசிகர்களின் முன்னிலையில் ஆரம்பமான இப்போட்டியின் ஆரம்பத்தில் லாவகமான பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு, போட்டியினை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விம்மிள்டன் அணி, சென். மேரிஸின் கோல் பரப்பை ஆக்கிரமித்தனர்.

அவர்களுடைய முன்கள விரர்களான ஷனீர், ஷரீக் ஆகியோர் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட போதும் மேரிஸின் கோல்காப்பாளர் சுதர்சன் அவற்றைத் தடுத்தார்.

16ஆவது நிமிடத்தில் மேரிஸின் பிரபல வீரர் நிதர்சன் பந்தை நேர்த்தியாக உதைந்து இலகுவாக கோல் பெற, அதுவரை ஆதிக்கம் செலுத்திய விம்பிள்டனிடமிருந்து போட்டியை மீட்டது சென். மேரிஸ்.

பின் 20ஆவது நிமிடத்தில் கோல்காப்பாளர் முன்னேறிவர மறுமுனைக்கு லாவகமாகப் பந்தைத் தட்டி விட்டு கோலாக்கினார் எபிரோன். அதே வேகத்தில் நிதர்சன் அடுத்த கோலையும் போட முன்னிலையை அதிகரித்தது சென். மேரிஸ்.

ஜெக்சன் மேலும் ஒரு கோலினைப் போட்டு யாழ் ரசிகர்களை மேலும் மகிழ்வூட்டினார்.

உபாதையடைந்து எபிரோன் வெளியேற, சென். மேரிஸிற்காக உள்நுழைந்த யாழ் மத்திய கல்லூரியின் தலைவர் றெக்னோ தனது பங்கிற்கு ஒரு கோலினைப் போட, சென். மேரிஸின் ஐந்து கோல்களுடன் நிறைவிற்கு வந்தது முதல் பாதி.

முதல் பாதி : சென் மேரிஸ் விளையாடுக் கழகம் 5 – 0 விம்பிள்டன் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் தடுப்பாட்டத்தில் விம்பிள்டன் அணியினர் கவனஞ்செலுத்திய போதும், அவர்களது தடுப்பு 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

ஜெக்சன் 55ஆவது நிமிடத்தில் பெற்ற கோலுடன் இரண்டாவது பாதியிலும் தமது கோல் கணக்கை ஆரம்பித்தது சென். மேரிஸ்.

அன்ரன் சார்ள்ஸ், அன்ரனி ஆகியோரும் முறையே 59 மற்றும் 62ஆவது நிமிடங்களில் தமது முதல் கோலினைப் பதிவு செய்தனர்.

போட்டி ஓர் பக்கத்திற்குச் சாய்ந்து செல்ல எதிர்பார்ப்புடன் வந்திருந்த ரசிகர்களின் ஆவலும் குறைவடைந்தது.  

23 வயதுக்கு உட்பட்ட இலங்கை கால்பந்து குழாமிற்கு வீரர்கள் தெரிவு ஆரம்பம்

அடுத்தடுத்து றெக்னோ, டூனட் ஆகியோர் கோல் பெற 10 கோல்களை எட்டிப்பிடித்தது சென். மேரிஸ். தொடர்ந்து 77ஆவது நிமிடத்தில் நிதர்சனும், 80ஆவது நிமிடத்தில் றெக்னோவும் ஹட்ரிக் கோல்களைப் பூர்த்தி செய்ய, முழுநேர நிறைவில் 12-0 என்ற கோல்கள் கணக்கின் அபார வெற்றியைப் பெற்றது சென். மேரிஸ்.

எனினும் இந்தப் போட்டியின்போது விம்பிள்டன் வீரர்கள் விதிகளை மதித்து, விளையாட்டுணர்வுடன் மிக அழகான விதத்தில்  ஆடியமை அவர்கள் பக்கம் யாழ் ரசிகர்களை ஈர்த்திருந்த முக்கிய விடயமாகக் கருதப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.  

முழு நேரம் : சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் 12 – 00 விம்பிள்டன் விளையாட்டுக் கழகம்

Thepapare.com இன் ஆட்ட நாயகன் – நிதர்சன் (சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம்

நிதர்சன் 16’, 26’ ,77, அன்ரனி எபிரோன் 21’, அன்ரனி றெக்னோ 35′, 64′, 80′, ஜெக்சன் 34′,55′, அன்ரனி 62′, அன்ரன் சார்ள்ஸ் 59′, டூனட் 75′

போட்டியின் நிறைவில் Thepapare.com இற்கு விம்பிள்டன் அணியின் பயிற்றுவிப்பாளர் M.I.M ஹுமாயூன் கருத்துத் தெரிவிக்கையில் “நாங்கள்  FA கிண்ணச் சுற்றுப் போட்டியில் முதன்முறையாக 32 அணிகளுக்குள் நுழைந்திருக்கின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் இது மிகப்பெரிய அடைவு. தொடர் பயிற்சியிலுள்ள அணிகளுடன் போட்டியிட்டது மிகச்சிறந்த அனுபவங்களைத் தந்துள்ளது.

அடுத்த வருடமும் இதே இடத்திலிருந்து இத்தொடரை ஆரம்பிக்க இருப்பதனால், நாம் அடுத்த வருடம் ஏனைய அணிகளுக்கு சவாலான அணியாகத் திகழ்வோம்.” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து சென். மேரிஸ் அணியின் முகாமையாளர் சதீஸ்ராஜ் கருத்துத் தெரிவிக்கையில் இன்றைய போட்டியின் முடிவு எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. சிறந்த பயிற்சியுடன் அடுத்த போட்டியில் வெற்றி பெற்று காலிறுதியை எட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து வரும் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரின் இறுதிவரை பயணிப்பதே எமது இலக்குஎன்றார்.