இந்த பருவகால FA கிண்ணத்திற்கான 64 அணிகள் பங்குகொள்ளும் சுற்றுப் போட்டியில் மன்னார் சென் ஜோசப் (புனித சூசையப்பர்) விளையாட்டுக் கழகத்தை பெனால்டி முறையில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய மாவனல்லை செரண்டிப் கால்பந்து கழகம் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

ஏற்கனவே இதற்கு முன்னர் இடம்பெற்ற சுற்றுப் போட்டியில் செரண்டிப் கால்பந்துக் கழகம், பெனால்டி முறையில் ரெட் சன் அணியை வெற்றி கொண்டிருந்தது. எனினும் சென் ஜோசப் விளையாட்டுக் கழகம், கடந்த வருட FA கிண்ண சுற்றுப் போட்டியில் இறுதி 32 அணிகள் வரை முன்னேறி இருந்தமையினால், இவ்வருடத்தின் தமது முதல் போட்டியாக இந்தப் போட்டியை எதிர்கொண்டது.  

மொரட்டுவ அணியை துவம்சம் செய்த நிவ் யங்ஸ் அடுத்த சுற்றுக்குத் தெரிவு

இந்நிலையில் 64 அணிகளைக் கொண்ட சுற்றுத் தொடருக்கான இப்போட்டி செரண்டிப் அணியின் சொந்த மைதானமான மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டி ஆரம்பமாகி முதல் சில நிமிடங்களில் சென் ஜோசப் அணி வீரர்கள் எதிரணியின் எல்லையில் பந்தை வைத்திருந்த நிலையில், 08ஆவது நிமிடத்தில் அவ்வணியின் முன்கள வீரர் லெமன்டன், தானக்கு கிடைத்த பந்தை மிக இலகுவாக கோலாக்கினார்.

அதற்கு அடுத்த நிமிடத்திலும் அவர்களுக்கு கோலுக்கான இலகுவான வாய்ப்பொன்று கிடைத்தும், அது செரண்டிப் அணியின் பின்கள வீரர்களினால் தடுக்கப்பட்டது.

போட்டியின் 15ஆவது நிமிடத்தில் செரண்டிப் அணியின் மத்திய கள வீரர்கள் பலருக்கிடையே சிறந்த முறையில் பந்துப் பரிமாற்றம் நிகழ்த்தப்பட்டு, இறுதியில் தன்னிடம் வந்த பந்தை அவ்வணியின் ஷெரோன் மிக வேகமாக கோலை நேக்கி உதைந்தார். எனினும் சென் ஜோசப் அணியின் கோல் காப்பாளர் தீபக் பாய்ந்து தட்டி, பந்தை வெளியேற்றினார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் செரண்டிப் வீரர் ஆசிர் தனக்கு கிடைத்த பந்தை மிக வேகமாக உதைய, பந்து கோல் கம்பங்களுக்கு வெளியால் சென்றது.

நீண்ட நேரத்திற்கு செரண்டிப் வீரர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகக் காணப்பட்டது. எனினும் அவர்கள் தமக்கிடையேயான பந்துப் பரிமாற்றத்தில் செய்த தொடர்ச்சியான தவறுகளினால், அவர்களால் தமக்கான முதலாவது கோலைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனது.

எனினும், 35ஆவது நிமிடத்தில் முன்களத்தில் தனியே இருந்த ஆசிருக்கு கிடைத்த பந்தை அவர் லாவகமாக கோலுக்குள் செலுத்த, ஆட்டம் சமநிலையடைந்தது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தமக்கிடையிலான முயற்சிகளை தொடர்ச்சியாகப் பெற்ற பொழுதும் அவற்றின்மூலம் கோல்களுக்கான நிறைவுகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படவில்லை.

முதல் பாதி : செரண்டிப் கால்பந்து கழகம் 01 – 01 சென் ஜோசப் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்திலேயே பெனால்டி எல்லையின் ஒரு திசையில் இருந்து ரியாஸ் கோலுக்குள் உதைந்த பந்தை கோல் காப்பாளர் தீபக் கம்பங்களுக்கு அண்மையில் இருந்து மறைத்தார்.

52ஆவது நிமிடத்தில் முன்சிப் மூலம் மிக நீண்ட தூரப் பரிமாற்றமாக ஷெரோனுக்கு வழங்கப்பட்ட பந்தை, அவர் வேகமாக கோலுக்குள் செலுத்த முயற்சிக்கையில், எதிரணியின் பின்கள வீரரின் தடுப்பினால் அந்தப் பந்து கோணர் வாய்ப்பிற்கு சென்றது.

அந்தக் கோணர் உதையின்போதும் செரண்டிப் அணியினருக்கு கோலுக்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதனை, முதல் கோலைப் பெற்ற ஆசிர் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

63ஆவது நிமிடத்தில் சென் ஜோசப் வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது, அவர்களால் சிறந்த முறையில் பந்து உட்செலுத்தப்படாமையினால், செரண்டிப் பின்கள வீரர்களால் அது தடுக்கப்பட்டது.

அதற்கு அடுத்த நிமிடத்தில், மத்திய களத்தில் இருந்த பல வீரர்களை தாண்டி சிறந்த முறையில் பந்தைக் கொண்டு சென்ற ரியாஸ், இறுதியாக மிக வேகமாக கோலை நோக்கி பந்தை உதைந்தார். எனினும் போட்டியில் சிறந்த தடுப்புக்களை மேற்கொண்டு வந்த தீபக், ரியாசின் அபார உதையை பாய்ந்து தடுத்தார்.

அதனைத் தொடர்ந்தும் செரண்டிப் வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் கோல் காப்பாளர் தீபக் மூலம் தடுக்கப்பட்டன.  

2018ஆம் ஆண்டிற்கான 23 வயதிற்கு உட்பட்ட ஆசிய கால்பந்து தகுதிகாண் போட்டித் தொடரிற்கு இலங்கை தகுதி

பின்னர் அஸ்வரை முறையற்ற விதத்தில் மோதிய சென் ஜோசப் வீரர் பிரிட்டோவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட, செரண்டிப் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

75 நிமிடங்கள் கடந்த நிலையில் குரோஸ் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை செரண்டிப் கோல் காப்பாளர் நஜான் கம்பங்களுக்கு மேலால் தட்டி விட்டார். இறுதி நிமிடங்களில் இரு அணி வீரர்களும் தமது வேகத்தை அதிகரித்திருந்த நிலையில் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பானது.

எனினும் இரு தரப்பினராலும் முதல் பாதியில் பெறப்பட்ட கோல்கள் தவிர்ந்த வேறு எந்த ஒரு கோலும் பெறப்படவில்லை. எனவே வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

முழு நேரம் : செரண்டிப் கால்பந்து கழகம் 01 – 01 சென் ஜோசப் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

செரண்டிப் கால்பந்துக் கழகம் – மொஹமட் ஆசிர்

சென் ஜோசப் விளையாட்டுக் கழகம் – R. லெமன்டன்  

பெனால்டி

  • ஷெரோன் – ஷெரோனின் முதல் உதை வலது புறமாக கோலுக்குள் சென்றது.
  • குரூஸ் – இவரது உதை இடது புறமாக கோலுக்குல் சென்றது.
  • ரியாஸ் – ரியாஸ் வேகமாக உருட்டி அடித்த பந்தும் கோலாக மாறியது.
  • டீன் ஜோன்ஸ் – ஜோன்ஸ் அடித்த பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது.
  • பாசித் – பாசித்தின் உதையும் வலது புற கம்பத்திற்கு வெளியே சென்றது
  • அன்டன் பெர்னான்டோ – இவர் உருட்டி அடித்த பந்து கோலுக்குள் சென்றது.
  • அஸ்வர் – அஸ்வர் உதைந்த திசைக்கு தீபக் சிறந்த முறையில் பாய்ந்த பொழுதும் அவரது கையை அண்மித்த வகையில் பந்து கோலாகியது.
  • R. பெர்னாண்டோ – பந்தை உருட்டி அடித்தாலும் அவரது உதை கம்பங்களுக்கு வேளியே சென்றது.
  • நஸ்ருல்லா – இந்த உதை செரண்டிப் அணியின் வெற்றி கோலாக மாறியது.

பெனால்டி முடிவு: செரண்டிப் கால்பந்து கழகம் 04 – 02 சென் ஜோசப் விளையாட்டுக் கழகம்

போட்டியின் பின்னர் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த செரண்டிப் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜியாபா சிமோன், ”இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாடினர். சம பலத்துடம் இரு தரப்பினரும் இருந்தாலும் பெனால்டியில் நாம் வெற்றியை பெற்றோம். அணியின் முழுமையான பங்களிப்பும், எமது ரசிகர்களின் சிறந்த ஆதரவுகளுமே எமது அனைத்து வெற்றிகளுக்கும் முக்கிய காரணியாகும்.

நாம் இறுதி 3 போட்டிகளையும் பெனால்டி முறையிலேயே வென்றோம். எனினும் இந்நிலை அடுத்த போட்டிகளில் நிகழ முடியாது. அடுத்த போட்டிகளில் ஆட்டம் முடிவடையும்பொழுது எமக்கு வெற்றி தேவை. அதற்கான அணியை தயார்படுத்தும் செயற்பாடுகளை இன்றிலிருந்து நாம் மேற்கொள்ள வேண்டும். அடுத்த போட்டிகளில் எம்மில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்” என்றார்.

ThePapare.com இடம் கருத்து தெரிவித்த சென் ஜோசப் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜெரால்ட், ”இன்று எமது வீரர்கள் தம்மால் முடியுமான சிறந்த விளையாட்டைக் காண்பித்தனர். எனினும், செரண்டிப் வீரர்களது விளையாட்டு எம்மை விட அழகாகவும், அபாரமாகவும் இருந்தது. அதன் பலனாக அவர்களுக்கு வெற்றி கடைத்தது” என்றார்.

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – ரியாஸ் மொஹமட் (செரண்டிப் கால்பந்து கழகம்)

மஞ்சள் அட்டைகள்

சென் ஜோசப் விளையாட்டுக் கழகம் –  ரொன்சன் குரூஸ்