FA கிண்ண மாவனல்லை லீக் சம்பியனாக முடிசூடிய யுனைடட் அணி

426
United SC vs Riverside SC

நடப்பு FA கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின் மாவனல்லை கால்பந்து லீக்கிற்கான இறுதிப் போட்டியில் ரிவர் ஸைட் விளையாட்டுக் கழகத்தை 6-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றி கொண்ட மாவனல்லை யுனைடட் விளையாட்டுக் கழகம், லீக் சம்பியனாக முடிசூடி, அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளில் எந்தவிதத் தோல்விகளையும் சந்திக்காத இவ்விரு அணிகளும் மோதிய லீக் வெற்றியாளரைத் தெரிவு செய்வதற்கான இந்த மோதல் ஞாயிற்றுக்கிழமை (01) கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

FA கிண்ண புத்தளம் மாவட்ட சம்பியனாக மகுடம் சூடிய லிவர்பூல் அணி

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு…

இந்தப் போட்டியின்போது, இலங்கை தேசிய கால்பந்து அணியின் பி அணிக்கு தெரியாகியுள்ள மொஹமட் சல்மான் யுனைடட் அணிக்காக தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்து மொத்தமாக 4 கோல்களைப் பெற்றுக் கொடுத்தார்.

போட்டி ஆரம்பித்த முதல் 8ஆம் நிமிடத்திலே ரிவர் ஸைட் அணி முதல் வாய்ப்பை பெற்றது. அவ்வணியின் பின்களத்திலிருந்து நீண்டதூரப் பந்துப்பரிமாற்றம் மூலம் உள்ளனுப்பட்ட பந்தை இளம் வீரர் சபான் சிறப்பாகப் பெற்று கோலை நோக்கி முன்னகர்த்தி வலைக்குள் உதைந்தார். இதன்போது சிறப்பாக செயற்பட்ட யுனைடட் கோல்காப்பாளர் அஹமட் முனவ்வர் பெனால்டி பெட்டியின் எல்லை வரை வந்து பந்தை தடுத்தார். எனினும், அவரது கையில் பட்டு முன்னேறிய பந்து கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

அடுத்த 2 நிமிடங்களில் யுனைடட் அணி வீரர்களுக்கு மத்தியில் நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின்னர் அவ்வணியின் நட்சத்திர வீரர் மொஹமட் சிபான் மூலம் பெனால்டி பெட்டியின் இடது பக்க மூலையிலிருந்து சிறப்பாக உள்ளனுப்பப்பட்ட பந்தை சல்மான் தனது தலையால் முட்டி கோலாக்கினார்.

அதேபோல், மீண்டும் போட்டியின் 27ஆம் நிமிடத்தில் பெனால்டி பெட்டியின் இடது பக்க மூலையிலிருந்து சிபான் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை பெற்ற சல்மான் தனது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

Photo Album: United SC vs Riverside SC

போட்டியின் முதல் பாதி நிறைவடைவதற்கு மூன்று நிமிடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் ரிவர் ஸைட் கோல் காப்பாளர் சியாம் யுனைடட் வீரர் சிபானை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக அவ்வணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பெற்ற சல்மான் பந்தை இலகுவாக கோலுக்குள் செலுத்தி தனது  ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

எனவே, சல்மானின் 3 கோல்களோடு, யுனைடட் அணியின் முன்னிலையுடன் ஆட்டத்தின் முதல் பாதி நிறைவுக்கு வந்தது.

முதல் பாதி: யுனைடட் விளையாட்டுக் கழகம் 3 – 0 ரிவர் ஸைட் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பித்து 3 நிமிடங்களிலேயே யுனைடட் அணியின் பின்கள வீரர் ரமீஸ் மத்திய களத்தின் இடது பக்கத்திலிருந்து எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் வழங்கிய பந்தைப் பெற்ற ரஸ்மான் அஹமட், மிக வேகமாக எதிரணி வீரர்களைக் கடந்து சென்று பந்தை கோல் கம்பங்களுக்குள் புகுத்தினார்.  

போட்டியின் 55ஆம் நிமிடத்தில் யுனைடட் கோல் திசையின் இடதுபக்க மூலையில் ரிவர் ஸைட் அணிக்கு கிடைக்கப்பெற்ற சிறந்த வாய்ப்பின் போது மொஹமட் சுஹைல் எடுத்த கோலுக்கான முயற்சி பலனளிக்கவில்லை.   

ரிவர் ஸைட் அணியின் முன்னணி வீரர்கள் சிலர் இந்தப் போட்டியில் விளையாடாமை அவர்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்புக்களை நிறைவு செய்ய முடியாமைக்கு முக்கிய காரணமாய் இருந்தது.  

அதேபோல், போட்டியின் 60ஆம் நிமிடத்தில் மொஹமட் சிபான் யுனைடட் அணிக்காக கோலை பெறுவதற்கு எடுத்த முயற்சியும் எதிரணியின் கோல் காப்பாளர் சியாம் மூலம் சிறப்பாக தடுக்கப்பட்டது.   

தெருவில் வாழ்ந்து உலகக் கிண்ண வீரராக வந்தவரின் கதை

நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில்…

அதனைத் தொடர்ந்து, நீண்ட நேரமாக பந்துப் பரிமாற்றத்தில் மாத்திரம் ஈடுபட்டிருந்த இரு அணிகளும் போட்டியின் இறுதித் தருவாயில் மீண்டும் போட்டியில் வேகத்தை காட்டின. அதன் பலனாக போட்டியின் 76ஆம் நிமிடத்தில் சல்மான் மூலம் யுனைடட் அணிக்கான 5ஆவது கோல் பெறப்பட்டது.

ஜந்தாம் கோல் பெறப்பட்டு வெறும் ஜந்து நிமிடங்களின் பின்னர் ரஸ்மானின் சிறந்த ஆட்டத்தின் மூலம் யுனைடட் அணி தமக்கான 6ஆம் கோலையும் பதிவு செய்தது.  

எனவே, யுனைடட் அணியின் இளம் அனுபவ வீரர்களின் சிறப்பாட்டத்தின் முன் தனது அணிக்கான எந்தவொரு கோலையும் ரிவர் ஸைட் அணியினரால் பெற முடியாத நிலைமையில் போட்டி நிறைவுற்றது.  

இந்த வெற்றியின் மூலம் யுனைடட் விளையாட்டுக் கழகம் இம்முறை FA கிண்ண தொடரில் அடுத்த சுற்றில் ஆடும் வாய்ப்பைப் பெறும் இரண்டாவது மாவனல்லை லீக் அணியாக பதிவாகியது. மாவனல்லை லீக்கின் மற்றொரு அணியான செரண்டிப் கால்பந்துக் கழகம் இத்தொடரில் 32 அணிகள் மோதும் சுற்றில் இருந்து தமக்கான மோதலை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முழு நேரம்: யுனைடட் விளையாட்டுக் கழகம் 6 – 0 ரிவர் ஸைட் விளையாட்டுக் கழகம்

ThePapare இன் ஆட்ட நாயகன் – மொஹமட் சல்மான் (யுனைடட் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

யுனைடட்: மொஹமட் சல்மான் 10′, 27′, 42’ & 76’, ரஸ்மான் அஹமட் 48′, 80′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<