ஒலிம்பிக்குடனான வெற்றியுடன் FA கிண்ணத்தை ஆரம்பித்த சுப்பர் சன்

1110
Super Sun SC

கல்முனை சன்தாங்கேனி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த FA கிண்ணத்திற்கான மூன்றாம் சுற்றுப் போட்டியொன்றில், இரண்டாம் பாதியில் அபாரம் காட்டியிருந்த சப்ராஸ் கைசின் சிறப்பாட்டத்துடன் பேருவளை சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இந்த பருவகாலத்தினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. 

பெனால்டி வெற்றியினால் FA கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது செரண்டிப்

இந்த பருவகால FA கிண்ணத்திற்கான 64 அணிகள் பங்குகொள்ளும் சுற்றுப் போட்டியில்..

டயலொக் சம்பியன்ஸ் லீக்கில், குழு B இல் விளையாடியிருந்த பேருவளை சுப்பர் சன் விளையாட்டுக் கழகமானது சிறப்பாக செயற்பட்டிருந்தும் ஒரு புள்ளியினால் சுப்பர் 8 வாய்ப்பினை தவறவிட்டிருந்தது. எனவே அவ்வணி பலம் பொருந்திய அணியாகவே கருத்தப்பட்டது.

அத்துடன் இப்போட்டியில் மோதியிருந்த மற்றைய அணியான மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகமானது, இதற்கு முன்னைய சுற்றில் கல்குடா லீக்கில் விளையாடும் செங்கலடியை சேர்ந்த வானவில் விளையாட்டுக் கழகத்தினை 10-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வீழ்த்தியிருந்தது.  

இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற இப்போட்டியின் ஆரம்பத்தில் பந்தினை திறமையான முறையில் கையாண்ட காரணத்தினால் ஆட்டத்தின் ஆதிக்கத்தினை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகமே தன்னகம் வைத்திருந்தது.  

தொடர்ச்சியாக, கவுண்டர் தாக்குதல்களை மேற்கொண்ட அவ்வணி எதிரணியின் எல்லைக்குள் பந்தினை தொடர்ந்து நிலைத்து வைத்திருந்தது. இவ்வாறானதொரு நிலையில் கோல் ஒன்றினைப் பெறும் சந்தர்ப்பம் ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணியின் சப்னி அஹமடிற்கு கிட்டியது. எனினும் அது அவருக்கு இறுதி நேரத்தில் கைகூடியிருக்கவில்லை.  

இதனையடுத்து மீண்டும் ஒரு முயற்சி அதே அணியின் மொஹமட் வஜ்ரீனினால் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அதுவும் வீணாகியிருந்தது.

எனினும் ஆரம்பத்தில் பந்தினை கையாள்வதில் சில சிக்கல்களுக்கு உள்ளாகியிருந்த சுப்பர் சன் அணியினர் பின்னர் போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

முதல் 30 நிமிடங்களுக்குள் கோல் எதுவும் பெறப்படாது போட்டி ஓரளவு மந்தமாக சென்றுகொண்டிருந்த நிலையில், 34ஆம் நிமிடத்தில் தேசிய அணியின் முன்னாள் வீரர் சப்ராஸ் கைஸ் பரிமாற்றிய பந்தினை தன் பாதத்திற்கு எடுத்துக்கொண்ட நுவன் பிரியங்கர இலகுவான முறையில் போட்டியின் முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.  

பிரியங்கரவின் கோலினை தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதியில் எஞ்சியிருந்த நிமிடங்களில் இரு அணியினரும் சமமான ஆதிக்கத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

முதல் பாதி: சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் 1 – 0 ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்

போட்டியின் இரண்டாம் பாதியின் முதல் பகுதியிலும், முன்னைய பாதி போன்று ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் ஆதிக்கமே காணப்பட்டிருந்தது.

சப்னி அஹமட் பந்தினை சுபர் சன் விளையாட்டுக் கழகத்தின் பெனால்டி எல்லைக்கு அருகாமையில் கொண்டு சென்று போட்டியினை விறுவிறுப்பாக்கியிருந்தார். எனினும், சிறந்த முறையில் செயற்பட்டிருந்த பேருவளை தரப்பின் பின்கள வீரர்கள் எதிரணிக்கு  ஆட்டத்தை சமப்படுத்துவதற்கான கோலுக்கான வாய்ப்பைக் கொடுக்கவில்லை.

பின்னர் ஒலிம்பிக் விளையாட்டுக் கழத்தின் மொஹமட் ஜெஷா கோல் ஒன்றினைப் பெற முயற்சித்திருந்தும் அது அவருக்கு பலனளித்திருக்கவில்லை.

மீண்டும் போட்டியின் 65ஆவது நிமிடத்தில் கோர்ணர் வாய்ப்பொன்றினைப் பெற்றுக்கொண்டிருந்த ஒலிம்பிக், அதனை சரிவர உபயோகித்திருந்த போதும், கோலுக்கான பெறும் வாய்ப்பினை தவறவிட்டிருந்தது.

13 கோல்களுடன் FA கிண்ணத்தை ஆரம்பித்த விமானப்படை அணி

இந்த பருவகால FA கிண்ணத்திற்காக தமது முதல் போட்டியை எதிர்கொண்ட விமானப்படை விளையாட்டுக் கழக அணியினர்….

பின்னர், சாமர்த்தியமாக ஆடத் தொடங்கிய சுபர் சன் அணி மீண்டும் போட்டியின் பிற்பகுதியினை தம்வசமாக்கியது.

இந்நிலையில் இலகுவாகக் கிடைத்த பந்து மூலம் சுப்பர் சன் அணிக்கான இரண்டாவது கோலாக, போட்டியில் தனது முதல் கோலினை பெற்றுக்கொடுத்தார் சப்ராஸ் கைஸ்.    

இதனையடுத்து போட்டி நிறைவுறும் தருணத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் பெனால்டி எல்லைக்குள் அடிக்கடி பந்து சென்றுகொண்டிந்தது. இந்நிலையில், தனது அடுத்த கோலினை போட்டியின் 86ஆவது நிமிடத்தில் பெற்ற சப்ராஸ், சுப்பர் சன்னின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இந்த வெற்றியின்மூலம் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ள சுப்பர் சன் விளையாட்டுக் கழகம், 32 அணிகள் பங்கு கொள்ளும் தொடரின் 4ஆவது சுற்றிவ் மாவனெல்லை செரண்டிப் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

முதல் பாதி: சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் 3 – 0 ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்  

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: சப்ராஸ் கைஸ் (சுப்பர் சன் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் – நுவன் பிரியங்கர 34’, சப்ராஸ் கைஸ் 77’, 86’

மஞ்சள் அட்டைகள்

ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் – சப்னி அஹமட்
சுபர் சன் விளையாட்டுக் கழகம் – அஹமட் ஜாவித்