எவரெடி கிண்ணம் ஒலிம்பிக் அணி வசம்

207
Eveready cup football

கிழக்கின் மற்றொரு பெரும் கால்பந்து தொடராக இடம்பெற்ற ”எவரெடி கிண்ணம் 2017” பகலிரவு கால்பந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் யங் ஸ்டார் அணியை 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்ட மருதமுனை ஒலிம்பிக் அணி தொடரின் சம்பியனாக முடிசூடியுள்ளது.

பல கட்டங்களாக இடம்பெற்ற இந்த சுற்றுப் போட்டியின் வெற்றியாளரைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 8.40 மணிக்கு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அரையிறுதி முடிவுகள் – எவரெடி கிண்ண இறுதிப்போட்டிக்கு ஒலிம்பிக், வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகங்கள்

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த அரையிறுதியில் டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தை 2-0 என வீழ்த்திய மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகமும், மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தை பெனால்டி முறையில் வீழ்த்திய ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகமும் சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதி மோதலில் பங்கு கொண்டன.

போட்டி ஆரம்பமாகி 10ஆவது நிமிடத்தில் வை.எஸ்.எஸ்.சி வீரா் அனஸ் வலது பக்கத்திலிருந்து  பந்தை உதைந்தபோது பெனால்டி எல்லைக்குள் நின்றிருந்த முஸ்தாக் தலையினால் முட்ட பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்றது

மேலும் 7 நிமிடங்கள் கடந்த நிலையில், ஒலிம்பிக் வீரா் சப்னி இரண்டு வீரர்களைத் தாண்டி கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடித்த வேளை, பந்து கம்பத்திற்கு அருகினால் வெளியே சென்றது

போட்டியின் 24ஆவது நிமிடத்தில் ஒலிம்பிக் நட்சத்திர வீரா் அயாஸ் அஹமட் பரிமாற்றிய பந்தைப் பெற்றுக்கொண்ட ஹஜீர் ஹனான், வலது பக்கத்திலிருந்து வேகமாக கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடிக்க, பந்து கோல் காப்பாளரையும் தாண்டி கம்பங்களினுள் சென்றது. எனவே, முதலாவது கோலை ஒலிம்பிக் அணி பெற்று ஆட்டத்தில் முன்னிலை அடைந்தது.

பின்னர் 35ஆவது நிமிடத்தில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியின் அஹ்சான் மைதானத்தின் மத்திய பகுதியிலிருந்து கொடுத்த பந்தைப் பெற்றுக்கொண்ட ஆதீல், எதிரணியின் மூவரைத் தாண்டி ஒலிம்பிக் கோல் கம்பத்தை நோக்கி உதைந்தார். அவரது இறுதி முயற்சியின்போது பந்து கம்பத்திற்கு வெளியில் சென்றமையால் இலகுவாக கோல் போடும் வாய்ப்பு வீணானது.

போட்டியின் முதலாவது பாதி ஆட்டம் நிறைவுக்கு வருகின்றபோது ஹஜீர் ஹனானின் கோலுடன் ஒலிம்பிக் அணி முன்னிலை பெற்றது.

முதல் பாதி: ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 1 – 0 வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமாகியதும் வை.எஸ்.எஸ்.சி அணி தனது வேகத்தை அதிகரித்து விளையாட ஆரம்பித்தது. ஒலிம்பிக் கோல் எல்லையை பல தடவைகள் வை.எஸ்.எஸ்.சி வீரா்கள் ஆக்கிரமித்தனர். ஒலிம்பிக் பின்கள வீரா்களின் சிறப்பான ஆட்டம் எதிரணிக்கான கோல் வாய்ப்பை இல்லாமல் செய்தது.

எனினும் 51ஆவது நிமிடத்தில் வை.எஸ்.எஸ்.சி வீரா் முஸ்தாக் கொடுத்த பந்தை தனது கால்களுக்குள் எடுத்துக் கொண்ட எம்.ஜே.இக்ராம் இடது பக்கமாக இருந்து பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைந்தார். அதன்போது கம்பத்திற்குள் பந்து செல்ல முதலாவது கோலை வை.எஸ்.எஸ்.சி.அணி பெற்றதுடன் போட்டி மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்ததால் ரசிகர்களின் கரகோசத்திற்கு மத்தியில் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில் 67ஆவது நிமிடத்தில் ஒலிம்பிக் அணியின் நட்சத்திர வீரா் அயாஸ் அஹமட் வலது பக்கத்திலிருந்து வேகமாக கொண்டு வந்த பந்தை மூவரைத் தாண்டி கோல் கம்பத்தை நோக்கி உதைத்தபோது வை.எஸ்.எஸ்.சி கோல் காப்பாளர் அக்ரம் அதனைத் தடுத்தபோதும் அதையும் மீறி பந்து கோலானது. இதனால் ஒலிம்பிக் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

மேலும் மூன்று நிமிடங்கள் கழித்து முகம்மட் ஹாதீன் கொடுத்த பந்தைப் பெற்ற ஹஜீர் ஹனான் மேற்கொண்ட சிறந்த முயற்சியும் கோலானது. இதனால் 3 -1 என்ற கணக்கில் ஒலிம்பிக் முன்னிலை பெற்றது.

பின்னர் 85ஆவது நிமிடத்தில் வை.எஸ்.எஸ்.சி வீரா் அனஸ் கொடுத்த பந்தைப் பெற்ற றிபாயிஸ் வேகமாக கொண்டு சென்று பெனால்டி எல்லைக்குள் உதைத்தபோது பந்து கோல் கம்பத்திற்குள் சென்றது. இதனால் வை.எஸ்.எஸ்.சி அணி தமது இரண்டாவது கோலையும் பெற்றது.

போட்டியின் முடிவில் 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் மருதமுனை ஒலிம்பிக் அணி வெற்றி பெற்று சம்பியனாகவும் தெரிவானது.

முழு நேரம்: ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 3 – 2 வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் – ஹஜீர் ஹனான் 24’ & 70’, அயாஸ் அஹமட் 67’
வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் – எம்.ஜே.இக்றாம் 51’, ஏ.எம்.எம்.றிபாயிஸ் 85’

மஞ்சள் அட்டை
வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் எம்.ஆக்கீல் 25

போட்டியின் பின்னர் வெற்றி பெற்ற ஒலிம்பிக் அணியின் பயிற்றுவிப்பாளர் யு.எஸ்.சபீல் ThePapare.com இற்கு கருத்துத் தெரிவிக்கும்போதுஇவ்வெற்றி நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் சில கோல்கள் அடிக்கும் வாய்ப்பும் இருந்தன. வீரா்கள் தவறவிட்டுள்ளனர். அத்தோடு வை.எஸ்.எஸ்.சி அணியினரும் சிறப்பாக விளையாடினர்கடந்த சில வருடங்களில் வை.எஸ்.எஸ்.சி அணியுடன் 7 போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளொம். கிண்ணத்தை வென்றமை மிகுந்த மகிழ்ச்சியாகும்” என்றார்.

தோல்வியடைந்த வை.எஸ்.எஸ்.சி அணியின் பயிற்றுவிப்பாளர் எம்.முகைதீன் கருத்துத் தெரிவிக்கும்போது இளம் வீரா்களைக் கொண்ட எமது அணி சிறப்பாக விளையாடிய போதிலும் நீண்ட நேரம் மைதானத்தில் நின்று விளையாடுக்கின்ற உடற்தகுதி முக்கிய வீரா்களிடத்தில் இல்லாதது எமக்கு பெரும் பின்னடைவாகும். அத்தோடு பின்கள வீரர்கள் உபாதைக்குள்ளானதும் தோல்விக்கு காரணமாகும் என்றார்.

சம்பியனாக தெரிவாகிய மருதமுனை ஒலிம்பிக் அணி 40,000 ரூபா பணத்துடன் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. இரண்டாமிடத்தைப் பெற்ற ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியினர் 25,000 ரூபா பணத்தையும் வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக்கொண்டனர்.

விருதுகள்

சுற்றுப் போட்டியின் சிறந்த வீரர் – ஏ.ரஜீவன் (மட்டக்களப்பு டிஸ்கோ அணி)
இறுதிப் போட்டியின் சிறந்த வீரர் – எம்.ஏ.ஹஜீர் ஹனான் (ஒலிம்பிக் அணி)
சிறந்த கோல் காப்பாளர் – எம்.அக்ரம் (ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி)
சிறந்த இளம் வீரராக – எம்.ரொசான் (கோல்ட் மைன்ட் அணி)