சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தும் நோக்கில் இலங்கை!

1407

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய 6வது லீக் போட்டியில் இலங்கை அணி, இந்த உலகக் கிண்ணத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றான இங்கிலாந்து அணியை நாளைய தினம் (21) லீட்ஸ் – ஹெடிங்லேவ் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு இதுவரையில் 5 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு வெற்றியினை பெற்றுள்ளதுடன், இறுதியாக நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் ஆரம்பத்தில் நம்பிக்கை கொடுத்த போதும், துரதிஷ்டவசமாக மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் விட்ட தவறுகளால் தோல்வியை தழுவியிருந்தது. மேலும் இரண்டு போட்டிகள் மழை காரணமாக நாணய சுழற்சியின்றியே கைவிடப்பட்டன.

இங்கிலாந்து அணியின் பலவீனங்களை அறிந்து வைத்துள்ளோம் – ருமேஷ் ரத்னாயக்க

இலங்கை கிரிக்கெட் அணி, தம்முடைய ………

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை மாத்திரம் வீழ்த்தியுள்ள இலங்கை அணி, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிளுடன் தங்களுடைய தோல்வியினை சந்தித்திருந்தது. இதில், இறுதியாக நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி நம்பிக்கை அளிக்கக்கூடிய ஆரம்பத்தை பெற்றிருந்தது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது ஆரம்பத்தில் மோசமாக பந்துவீசியிருந்தாலும் இறுதி ஓவர்களில் அந்த அணியை இலங்கை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தியிருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது. அதேபோன்று, துடுப்பாட்டத்தை எடுத்துக்கொண்டால் மிச்சல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகிய முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களை இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்தனர். இவ்வாறு முதல் இரண்டு போட்டிகளையும் விட, இலங்கை அணி கடைசி போட்டியில் பல முன்னேற்றங்களை கண்டிருந்தது.

இருப்பினும், அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் கவனக்குறைவான துடுப்பாட்டங்கள் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக முன்னணி துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா மற்றும் திசர பெரேரா ஆகியோர் அதிக ஓட்டங்களை குவிக்க தவறுவது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், பந்துவீச்சில் முதல் ஓவர்களில் இலங்கை அணி விக்கெட்டுகளை வீழ்த்த தவறுவதும் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்து வருகின்றது.

இவ்வாறு, அணியில் முக்கிய விடயங்களின் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது இலங்கை அணிக்கு முன் இருக்கும் மிகப்பெரிய சவால். இங்கிலாந்து அணியை பொருத்தவரை, இந்த உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது.

இதற்கு பின்னர் நடைபெற்ற போட்டிகளில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் தங்களை மிகச்சிறப்பாக இங்கிலாந்து அணி தயார்செய்து வைத்துள்ளது. குறிப்பாக, இறுதியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம், அவர்களுக்கு மேலதிக நம்பிக்கையை கொடுத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

ஜோ ரூட், இயன் மோர்கன், ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் ஜோஸ் பட்லர் என உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களையும் ஜொப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் மற்றும் கிரிஸ் வோர்க்ஸ் என சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களையும் கொண்டுள்ள இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு இலங்கை அணி வலுவான திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

Photo Album : CWC19 – Sri Lanka participate in UNICEF’s ‘One Day For Children’ program

இங்கிலாந்து அணியானது இதுவரை நான்கு வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை, இலங்கை அணி வெற்றிக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுடன், பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்தில் தங்களை வலுப்படுத்திக்கொண்டால் பாகிஸ்தான் போன்று அந்த அணிக்கு சவால் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளதும் ஒருநாள் போட்டி மோதல்கள்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஒருநாள் போட்டி மோதல்களை பொருத்தவரை இரண்டு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாகவே உள்ளன. இதுவரையில் 74 போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதியுள்ளதுடன், அதில் இங்கிலாந்து 36 வெற்றிகளையும், இலங்கை அணி 35 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

அதேநேரம், உலகக் கிண்ணத்தில் இரண்டு அணிகளதும் மோதல்களை பார்க்கும் போது, 10 போட்டிகளில் இலங்கை 6 போட்டிகளிலும், இங்கிலாந்து 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதில், கடைசி 3 உலகக் கிண்ணங்களிலும் (2007, 2011, 2015) இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாக மாறியுள்ளது.

ஆனால், தற்போதைய இங்கிலாந்து அணியை பார்க்கும் போது, இலங்கை அணி சற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது. குறிப்பாக, கடைசியாக இரண்டு அணிகளும் மோதிய ஒருநாள் தொடரில் தங்களுடைய சொந்த மண்ணில் இலங்கை அணி, இங்கிலாந்திடம் 1-3 என தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Photos: CWC19 – Sri Lanka training session ahead of England match

எதிர்பார்ப்பு வீரர்கள்

திமுத் கருணாரத்ன

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார். இவர் 2015ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை ஒருநாள் குழாத்துக்குள் இணைக்கப்படாவிட்டாலும், கடைசியாக இவர் விளையாடிய போட்டிகளில் சிறந்த ஓட்ட எண்ணிக்கைகளை பதிவுசெய்துள்ளார்.

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரைச்சதம் கடந்த இவர், உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் சதம் கடந்ததுடன், இறுதியாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 97 ஓட்டங்களை பெற்றிருந்தார். இவரது ஓட்ட சராசரி மற்றும் ஒருநாள் ஓட்டங்களை விடவும், இவர் தற்போது துடுப்பெடுத்தாடி வரும் விதம் இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்டத்தில் பலம் சேர்த்துள்ளமையை காண முடிகின்றது.

ஜோ ரூட்

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை தரக்கூடிய துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட். இவர் தனது நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்துக்கு பலம் சேர்த்து வருகின்றார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு சதங்களை விளாசியுள்ள இவர், இறுதியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதத்தை தவறவிட்டார்.

அத்துடன், ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை, 136 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 5,579 ஓட்டங்களை குவித்துள்ளார். அதுமாத்திரமின்றி இவரது ஓட்ட சராசரி 51.65 என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உத்தேச பதினொருவர்

இலங்கை அணியை பொருத்தவரை மத்தியவரிசையில் வேகமாக ஓட்டங்களை குவிக்க தவறிவரும் லஹிரு திரிமான்னேவுக்கு பதிலாக அவிஷ்க பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், கடந்த போட்டியில் சோபிக்கத் தவறிய மிலிந்த சிறிவர்தனவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ/ லஹிரு திரிமான்னெ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, மிலிந்த சிறிவர்தன, இசுரு உதான, லசித் மாலிங்க, நுவான் பிரதீப்

Photo Album : Sri Lanka vs Australia | ICC Cricket World Cup 2019 – Match 20

இங்கிலாந்து அணியை பொருத்தவரை உபாதைக்கு முகங்கொடுத்திருக்கும் ஜேசன் ரோய், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக இணைக்கப்பட்ட ஜேம்ஸ் வின்ஸ் இந்த போட்டியிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக செயற்படுவார் என்பதுடன், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அணியில் எவ்வித மாற்றங்களும் ஏற்பட வாய்ப்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து

ஜொனி பெயார்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட், இயன் மோர்கன் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, க்ரிஸ் வோர்க்ஸ், ஆதில் ரஷீட், மார்க் வூட், ஜொப்ரா ஆர்ச்சர்

ஆடுகளம் மற்றும் காலநிலை

ஹெடிங்வேலவ் மைதானத்தின் ஆடுகளத்தை பொருத்தவரை துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிகம் சாதகம் கொண்ட மைதானமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நாளைய போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<