கோஹ்லியின் சாதனை, ராஹுலின் சதத்துடன் இந்தியாவிற்கு இலகு வெற்றி

316

இங்கிலாந்தின் மென்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் 160 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, எந்தவித பரபரப்பும் இன்றி நிதானமாக வெற்றியை சுவைத்தது என்றுதான் கூறவேண்டும்.

டிராவிட், பொண்டிங் மற்றும் டெய்லருக்கு ஐ.சி.சி. கௌரவம்

இந்திய அணியில் ஒரு இடத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என எண்ணிய கே.எல்.ராஹுல் மிகவும் நேர்த்தியான துடுப்பாட்டத்துடன் சர்வதேசத்தில் இரண்டாவது சதமடித்து அணியின் வெற்றிக்கு முழு பங்களிப்பையும் வழங்கினார்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. இதன்படி தங்களது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் ஆரம்பம் வலுவாகவே அமைந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ரோய் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி 5 ஓவர்களில் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்தனர். இதில் ஜேசன் ரோய் 20 ஓட்டங்களை பெற்றிருந்த போது, உமேஷ் யாதவ் வீசிய பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களில் டேவிட் வில்லி மாத்திரம் இரட்டை இலக்க ஓட்டங்களை எட்டிப்பிடிக்க, ஜோஸ் பட்லர் அணிக்காக போராடி  ஓட்டங்களை குவித்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரமாரியாக வீ்ழ்ந்துக்கொண்டிருக்க, ஜோஸ் பட்லர் நிதானமாக களத்தில் நின்று ஓட்டங்களை குவித்தார். இவர்  46 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

மறுமுனையில் சற்று தாக்குப்பிடித்த டேவிட் வில்லி 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களை பெற்றார்.

சசெக்ஸ் அணியில் இணையும் ரஷித் கான்

இங்கிலாந்து அணியின் ஏனைய வீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் 8 ஓட்டங்களையும், இயன் மோர்கன் 7 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்த நிலையில், பெயார்ஸ்டோவ், ரூட் மற்றும் ஜோர்டன் ஆகியோர் டக்கவுட் ஆகி வெளியேறியனர்.

இதன்படி, தடுமாறி ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

முக்கியமாக, இந்திய அணியின் சுழல் இரட்டையர்களில் ஒருவரான குல்டீப் யாதவ் தனது சுழல் திறமையால் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களுக்கு சவால் கொடுத்தார். 4 ஓவர்கள் பந்து வீசிய இவர் 24 ஓட்டங்களை வழங்கி சர்வதேச T20 போட்டிகளில் தனது முதலாவது 5 விக்கெட்டினை கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார் மற்றும் யுஸ்வேந்திர சஹாலுக்கு பின்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் குல்டீப் யாதவ் பெற்றார்.

இதேவேளை, சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட இங்கிலாந்து அணி தங்களது சொந்த மைதானத்தில் இந்த ஓட்ட இலக்கை கட்டுப்படுத்த முடியும் என்ற தன்நம்பிக்கையுடன் களமிறங்கியது.

இங்கிலாந்து அணியின் தன்நம்பிக்கை போன்றே பந்து வீச்சில் சிறப்பான ஆரம்பம் பெறப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி ஓட்டங்களை குவித்து, சிறந்த துடுப்பாட்ட பலத்தை பெற்றிருந்த சிக்கர் தவான் 4 ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை சற்று பலப்படுத்திய டேவிட் வில்லி, சிக்கர் தவானை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து, தனது பந்து வீச்சிலும் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கைக் கொடுத்தார்.

முதல் விக்கட்டை வீழ்த்திய உத்வேகத்துடன் பந்து வீசிய இங்கிலாந்து அணிக்கு, கே.எல்.ராஹுல் மற்றும் ரோஹித் சர்மாவின் துடுப்பாட்டம் பின்னடைவை ஏற்படுத்தியது. எதிரணியின் வேகத்தை மிகவும் நுணுக்கமான முறையில் இவ்விருவரும் ஓட்ட எண்ணிக்கையை இலகுவாக உயர்த்தத் தொடங்கினர்.

இதன்படி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு சவால் கொடுத்த இருவரும் இரண்டாவது விக்கட்டுக்காக 123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக குவித்தனர்.

ஒரு பக்கம் கே.எல். ராஹுல் தனது இரண்டாவது T20 சதத்தை நெருங்கிக்கொண்டிருக்க, 31 ஓட்டங்களை பெற்றிருந்த ரோஹித் சர்மா ஆதில் ரஷிட்டின் சுழற்பந்து வீச்சில், இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 131 ஓட்டத்துக்கு தங்களது இரண்டாவது விக்கட்டை பறிகொடுத்தது. தொடர்ந்து ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி களம் நுழைந்தார்.

ரத்து செய்யப்பட்டுள்ள சந்திக்க ஹத்துருசிங்கவின் இங்கிலாந்து பயணம்

பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராஹுல் நேர்த்தியாக ஓட்டங்களை பெற்று, வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தனர். இதில் டேவிட் வில்லி விசிய 16ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு ஓட்டத்தை பெற்றுக்கொண்ட கோஹ்லி, சர்வதேச T20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டதுடன், வேகமாக 2000 ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் (56 இன்னிங்ஸ்) இடத்தையும் பெற்றுக்கொண்டார். நியூஸிலாந்து அணியின் மார்டின் குப்டில் (2271 ஓட்டங்கள்), பிரெண்டன் மெக்கலம் (2140 ஓட்டங்கள்), பாகிஸ்தான் அணியின் சொஹைப் மலிக் (2039 ஓட்டங்கள்) ஆகியோரை அடுத்து சர்வதேச T20 போட்டிகளில் கோஹ்லி 2000 ஓட்டங்களை கடந்து, அணி வெற்றிபெறும் வரை களத்தில் நின்றார்.

கோஹ்லி 2000 ஓட்டங்களை கடந்த நிலையில், தனது இரண்டாவது T20 சதத்தை நெருங்கிய கே.எல்.ராஹுல் 18ஆவது ஓவர் நிறைவில் சதத்தை எட்டினார். இவர் மொத்தமாக 54 பந்துகளை எதிர்கொண்டு, 5 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, இந்திய T20  அணியில் தனக்கென ஒரு இடத்தையும் தக்கவைத்துக்கொண்டார்.

பின்னர் போட்டியின் வெற்றியை இந்திய அணி இலக்குவைக்க, விராட் கோஹ்லி 18 ஓவரை வீசிய மொயீன் அலியின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலைப்பெற்று, இங்கிலாந்து வருகையை வெற்றியுடன் ஆரம்பித்தது. போட்டியின் ஆட்ட நாயகன் விருது குல்டீப் யாதவ்விற்கு வழங்கப்பட்டது.

எவ்வாறயினும் இந்த போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தோல்வியடைந்த இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் ஐசிசி தரவரிசையில் பின்னடையக்கூடிய சாத்தியத்தை நெருங்கியுள்ளன.

குளோபல் டி-20 தொடரிலிருந்து திசர, தசுன் மற்றும் இசுரு உதான விலகல்

இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கெதிரான அடுத்தப் போட்டியில் தோல்வியடையுமாயின் T20 தரவரிசையில்  நான்காவது இடத்திலிருந்து ஏழாவது இடத்துக்கு பின்தள்ளப்படும். எனினும், குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுமாயின் இந்திய அணி இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு T20 தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெறுமாயின், அவுஸ்திரேலிய அணி 126 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும். அத்துடன், இந்திய அணி 123 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்படும்.

இதனால் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் தங்களது தரவரிசையின் நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கு அடுத்த போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கவேண்டும்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி கேர்டிப் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…