ஒரு ஓட்டத்தால் த்ரில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா

70
South Africa beat England

வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி தனது கடைசி இரண்டு ஓவர்களிலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது. 

ஈஸ்ட் லண்டன், பபலோ பார்க் (Buffalo Park) மைதானத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சிறப்பாக துடுப்பாடி வெற்றியை நெருங்கியது. 

>> இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் மற்றும் அணித்தலைவர் ஒயின் மோர்கன் அரைச்சதங்கள் பெற்று வலுச்சேர்த்தனர்.   

எனினும் போட்டியின் கடைசி மூன்று ஓவர்களிலும் ஆட்டம் தலைகீழாக மாறியது. அப்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 18 பந்துகளில் 28 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தது. ஆனால் அந்த மூன்று ஓவர்களுக்குள் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  

இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்று ஒரு ஓட்டத்தால் வெற்றியை தவறவிட்டது. 

இதன்போது அபாரமாக பந்துவீசிய லுங்கி நிகிடி 4 ஓவர்களுக்கும் 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி பெற ஏழு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பந்துவீசிய லுங்கி நிகிடி, டொம் கர்ரன் மற்றும் மெயீன் அலியின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஐந்து ஓட்டங்களையே விட்டுக்கொடுத்தார்.  

கடைசி பந்துக்கு மூன்று ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில் போட்டியை சமன் செய்ய இரண்டாவது ஓட்டத்தை பெற முயன்றபோது ஆதில் ரஷீத் ரன் அவுட் ஆனார்.   

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தென்னாபிரிக்க அணிக்குத் திரும்பிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஒரு விக்கெட்டை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. 

போட்டியில் இரு அணிகளினதும் துடுப்பாட்டம் ஒரே பாணியில் அமைந்திருந்தது. முதல் ஆறு ஓவர்களிலும் இரு அணிகளும் தலா 68 ஓட்டங்களை பெற்றன. அதேபோன்று 12 ஓவர்கள் முடிவின்போது இரு அணிகளும் 113 ஓட்டங்களை பெற்றிருந்தன. கடைசி ஓவர்களில் ஓட்டம் பெறும் வேகம் மந்தமடைந்தன. 

இங்கிலாந்து அணி சார்பில் அதிரடியாக துடுப்பாடிய ஜேசன் ரோய் தனது அரைச்சதத்தை 22 பந்துகளில் எட்டினார். 38 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 7 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ஓட்டங்களை பெற்றார்.   

பின்னர் அபாரமாக துடுப்பாடிய மோர்கன் இங்கிலாந்து அணி 12 பந்துகளில் 23 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தபோது 19ஆவது ஓவரில் ஹென்ட்ரிக்ஸின் பந்துக்கு அடுத்தடுத்து இரண்டு பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசியமை குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த ஓவரின் கடைசி பந்தில் அவர் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றத்தை தந்தது.   

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு அதன் தலைவர் டி கொக் (31) மற்றும் டெம்பா பவுமா (43) வேகமான ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுத்தனர். இவர்கள் ஆரம்ப விக்கெட்டுக்கு 26 பந்துகளில் 48 ஓட்டங்களை குவித்தனர்.  

பின்னர் டெம்பா பவுமாவுடன் இணைந்த வன் டெர் டசன் (31) இரண்டாவது விக்கெட்டுக்கு 41 பந்துகளில் 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார். பென் ஸ்டொக்ஸின் பந்துக்கு டசன் ஆட்டமிழந்த பின் தென்னாபிரிக்காவின் ஓட்ட வேகம் குறைந்தது.  

இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் தென்னாபிரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றிருப்பதோடு, இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி டர்பனில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா – 177/8 (20) – டெம்பா பவுமா 43, குயின்டன் டி கொக் 31, வென்டர் டசன் 31, கிறிஸ் ஜோர்டன் 2/28

இங்கிலாந்து – 176/9 (20) – ஜேசன் ரோய் 70, ஒயின் மோர்கன் 52, லுங்கி நிகிடி 3/30

முடிவு – தென்னாபிரிக்க அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<