பாகிஸ்தானுடனான கடைசி போட்டியிலும் இங்கிலாந்துக்கு உறுதியான வெற்றி

152

பாகிஸ்தானுடனான ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி இமாலய ஓட்டங்களை குவித்து 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் உறுதியான வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் உலகக் கிண்ணத்திற்கு முன்னரான கடைசி ஒருநாள் தொடரில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து 4-0 என தொடர் வெற்றியை பெற்றது.

ஹெடிங்லியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இங்கிலாந்து அணிக்கு மத்திய வரிசையில் டெஸ்ட் அணித் தலைவர் ஜோ ரூட் 73 பந்துகளில் 83 ஓட்டங்களையும் ஒருநாள் அணித்தலைவர் இயன் மோர்கன் 64 பந்துகளில் 76 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 351 ஓட்டங்களை பெற்றது.

பாக். வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷாஹ் அப்ரிடி 84 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இமாத் வசீம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் தனது பத்து ஓவர்களுக்கும் 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பாகிஸ்தான் வீரர்கள் கிறிஸ் வோக்ஸின் புதிய பந்தில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து நெருக்கடிக்கு முகம்கொடுத்தது.

6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பாபர் அஸாம் (80) மற்றும் சர்ப்ராஸ் அஹமட் (97) 146 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு நம்பிக்கை தந்தனர். எனினும் இந்த இரு வீரர்களும் ரன் அவுட் ஆனதை அடுத்து நம்பிக்கை சிதைந்தது.

இறுதியில் பாகிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 297 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. வோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி வரும் செவ்வாய்க்கிழமை உலகக் கிண்ண அணியை அறிவிக்கவிருப்பதோடு அதனைத் தொடர்ந்து ஒருநாள் சர்வதேச அந்தஸ்து அற்ற இரு போட்டிகளில் அவுஸ்திரேலிய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.  

வரும் மே 30 ஆம் திகதி ஓவலில் நடைபெறும் உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.

போட்டியின் சுருக்கம்  

இங்கிலாந்து – 351/9 (50) – ஜோ ரூட் 84, இயன் மோர்கன் 76, ஷஹீன் அப்ரிடி 4/84, இமாத் வஸீம் 3/53

பாகிஸ்தான் – 297 (46.5) – சர்ப்ராஸ் அஹமட் 97, பாபர் அஸாம் 80, கிறிஸ் வோக்ஸ் 5/54

முடிவு – இங்கிலாந்து 54 ஓட்டங்களால் வெற்றி