மூன்று மாற்றங்களுடன் இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

606
Cricket Australia Twitter

மூன்று மாற்றங்களுடன் இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறுகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 71 ஆவது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட 2019 ஆம் ஆண்டிற்குரிய ஆஷஸ் கிண்ண தொடர் டெஸ்ட் சம்பின்ஷிப் தொடரின் முதல் தொடராக இம்மாத ஆரம்பத்தில் ஆரம்பமாகியது.

கடந்த 1 ஆம் திகதி ஆரம்பமாகிய குறித்த தொடரின் முதல் போட்டியில் எதிர்பாராத விதமாக அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது எதிர்வரும் புதன்கிழமை (14) லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆஷஸ் 2ஆவது டெஸ்டில் இருந்து விலகிய அண்டர்சன், ஒல்லி ஸ்டோன்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையானது ஆஷஸ் கிண்ண தொடருக்கான ஐந்து போட்டிகளுக்கும் சேர்ந்து ஒரு குழாத்தினை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்கிலாந்து கிரிக்கெட் சபையானது முதலாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தினை மாத்திரம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள இரண்டாவது போட்டிக்கென தனியான அடுத்த குழாத்தினை இங்கிலாந்து கிரிக்கெட் சபை தற்போது வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் முதல் டெஸ்ட் போட்டிக்காக 14 பேர் கொண்ட குழாத்தினை வெளியிட்டிருந்தது. இதில் தற்போது மூன்று மாற்றங்களுடன் 12 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீரர்கள் உபாதை காரணமாக வெளியாகியுள்ள நிலையிலேயே தற்போது அடுத்த குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் உபாதையால் வெளியேறியிருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த ஒலி ஸ்டோன் போட்டியின் பின்னரான பயிற்சிகளில் ஈடுபடும் போது உபாதைக்குள்ளாகியிருந்தார். இதன் காரணமாக இவர்கள் இருவரும் நீக்கப்பட்டு ஒரு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அடுத்த போட்டிக்கான குழாம் வெளியிடப்பட்டுள்ளது.

சகலதுறை வீரரான மொயின் அலி முதலாவது டெஸ்ட் போட்டியின் போது பந்துவீச்சில் இரு இன்னிங்சுகளிலும் சேர்த்து மொத்தமாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். ஆனால் துடுப்பாட்டத்தில் அவரால் பிரகாசிக்க முடியாமால் போனது. இரு இன்னிங்சுகளிலும் சேர்த்து வெறும் 4 ஓட்டங்களையே அவர் பெற்றுக்கொண்டார். இதில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

இவ்வாறான நிலையில் மொயின் அலி தற்போது குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மொயின் அலியின் இடத்துக்காக சமர்செட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஜெக் லீச் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் (2018) நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற ஜெக் லீச் இதுவரையில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

ஆஷஸ் தொடருக்கு முன்னராக இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியுடன் மோதிய ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஜெக் லீச் துடுப்பாட்டத்தில் 92 ஓட்டங்களை குவித்து போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் நிறைவுக்குவந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இங்கிலாந்து அணிக்காக பந்துவீச்சில் அசத்திய ஜொப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் குழாமில் முதல் முறையாக இடம்பெற்றிருந்தாலும், டெஸ்ட் அறிமுகம் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது ஜேம்ஸ் அண்டர்சனின் உபாதை காரணமாக அடுத்த போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் அறிமுகம் பெறுவது உறுதியாகியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து குழாம் – ஜோ ரூட் (அணித்தலைவர்), ஒலி ஸ்டோன், ஜொப்ரா ஆர்ச்சர், ஜொனி பெயர்ஸ்டோ, ஸ்டுவர்ட் ப்ரோட், ரோரி பேன்ஸ், ஜொஸ் பட்லர், சாம் கரன், ஜோ டென்லி, ஜேசன் ரோய், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க