நேற்றைய வெற்றியால் திருப்தியடையும் மோர்கன்

104
© AFP

உலகக் கிண்ணத்தில் நேற்று (03) நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு பின்னர் அரையிறுதிக்கு தகுதிபெறும் மூன்றாவது அணியாக பதிவாகியிருந்தது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த இணைப்பாட்டம் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக வெற்றிபெற்றிருந்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பினை கடினமாக்கியுள்ளது.

நியூசிலாந்து வெற்றியுடன் உலகக் கிண்ண அரையிறுதிக்கு செல்லும் இங்கிலாந்து அணி

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 41………

இவ்வாறான நிலையில் தங்களுடைய வெற்றி குறித்து போட்டியின் பின்னர் கருத்து வெளியிட்டிருந்த இயன் மோர்கன்,

“இன்றைய போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து மிகவும் சந்தோஷமாக உணருகிறேன். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கூறியதை போன்று, அணியென்ற ரீதியில் நாம் வெற்றிபெறுவதை விட, குறித்த போட்டியில் எவ்வாறு விளையாடுகிறோம் என்பது அதிக திருப்தியை கொடுக்கும். இவ்வாறு திருப்திகரமாக விளையாடும் பட்சத்தில் அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் முழு நம்பிக்கையுடன் களமிறங்கி விளையாட முடியும்”

உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு முன்னரே இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் இரசிகர்களிடத்தில் இருந்தது. எவ்வாறாயினும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தோல்விகளானது அரையிறுதி வாய்ப்புக்கு தடையாக அமைந்திருந்தன. எவ்வாறாயினும், மீதமிருந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்திருக்கிறது.

“அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர், எதிரணிகளுக்கான சிறந்த திட்டங்களை வகுத்து விளையாடியிருந்தோம். அணியில் எவ்வித அழுத்தங்களும் இருக்கவில்லை. இன்றைய போட்டியில் தோல்வியடைந்திருந்தால், அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர், நாம் அரையிறுதிக்கு தகுதிபெறுவோமா? இல்லையா? என்பது தெரிந்திருக்கும். ஆனால், நாம் அரையிறுதியிலிருந்து வெளியேறுவது தொடர்பில் சிந்திக்கவில்லை. எமது அன்றைய நாளுக்கான வெற்றிக்காகவே பயிற்சிசெய்து வருகின்றோம்” என இயன் மோர்கன் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், அணியின் நேற்றைய வெற்றிக்கு கேன் வில்லியம்சனது ரன்-அவுட் முறையிலான ஆட்டமிழப்பு மிக முக்கியமாகவும், அதிர்ஷடமாகவும் அமைந்திருந்தது என குறிப்பிட்டிருந்த மோர்கன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜொன்னி பெயார்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோரது ஆட்ட முறைமைகள் அணியின் வெற்றிகளில் மிகப்பெரிய பங்கினை வகித்து வருகின்றது என சுட்டிக்காட்டியிருந்ததார்.

இங்கிலாந்து அணியின் அனைத்து லீக் போட்டிகளும் நிறைவுபெற்றுள்ள நிலையில், 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை தக்கவைத்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இன்னும் தலா ஒவ்வொரு போட்டிகள் எஞ்சியிருந்தாலும், இங்கிலாந்து அணி லீக் போட்டிகள் நிறைவிலும் மூன்றாவது இடத்தை தக்கவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<