இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

106

இலங்கை அணியுடன் மோதவுள்ள சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் இன்று (11) இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் எட். ஸ்மித்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்சமயம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இறுதி தொடரான டி20 சர்வதேச தொடர் மாத்திரம் எஞ்சியுள்ளது. குறித்த தொடர் நாளை (12) ஆரம்பமாகிறது.   

இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து ஜொப்ரா ஆர்ச்சர் விலகல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர்…

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அடுத்த சுற்றுப்பயணமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு தொடரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் காணப்படுகின்றது. அதன்படி மார்ச் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மோதவுள்ளது. 

அந்த அடிப்படையில் குறித்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து குழாம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தின்படி இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்தும் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் செயற்படவுள்ளார். இங்கிலாந்து அணி இறுதியாக விளையாடிய டெஸ்ட் குழாத்திலிருந்து 5 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

முக்கிய அனுபவ வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சனுக்கு அடுத்து நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் விளையாடும் அடிப்படையிலும், லங்கேஷியர் கழகத்தில் விளையாடும் அடிப்படையிலும் அவர் குழாத்தில் இடம்பெறவில்லை. இதேவேளை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள காரணத்தினால் அவரும் இலங்கை அணியுடன் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.  

மேலும் தென்னாபிரிக்க அணியுடனான தொடரின் முதல் போட்டியில் மாத்திரம் விளையாடிய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயர்ஸ்டோ இலங்கையுடனான குழாமில் தவறவிடப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய துடுப்பாட்ட வீரர் ரோரி பெர்ன்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

>>விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்ட பெரேரா, மாலிங்க

கடந்த 2018 ஆம் ஆண்டு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்று தனது முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்து அசத்திய 26 வயதுடைய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் பென் போக்ஸ் 5 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் இலங்கை அணியுன் விளையாடும் அடிப்படையில் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

இதுவரையில் 10 இன்னிங்சுகளில் விளையாடியுள்ள பென் போக்ஸ் ஒரு சதம், ஒரு அரைச்சதத்துடன் 332 ஓட்டங்களை குவித்துள்ளார். இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்று இதுவரையில் 17 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் காணப்பட்ட 27 வயதுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கீட்டன் ஜேனிங்ஸ் இறுதியாக 2019 பெப்ரவரியில் டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் அடிப்படையில் ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

இதேவேளை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 32 வயதுடைய சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான மொயின் அலி இறுதியாக ஆஷஷ் தொடரில் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய நிலையில், தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரிலும் தவறவிடப்பட்ட நிலையில் தற்போது இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கான குழாமிலும் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மொயின் அலி பந்துவீச்சில் 181 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்தில் 2,782 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் குழாமில் இடம்பெற்றும் உடல் நல குறைவினால் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த சுழல் பந்துவீச்சாளர் ஜெக் லீச் தொடர்ந்தும் இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் குழாமில் இடம்பெற்ற 23 வயதுடைய இளம் சுழல் பந்துவீச்சாளர் மெட் பார்கின்சன் இலங்கை அணியுடன் டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் தொடர்ந்தும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

உலகக் கிண்ணத்திற்கான பதினொருவர் அணியில் இலங்கையின் ரவிந்து ரசந்த

இந்த ஆண்டுக்கான (2020) ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட்…

இங்கிலாந்து அணி தென்னாபிரிக்க அணியுடன் இறுதியாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடன் மோதவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் குழாம்

ஜோ ரூட் (அணித்தலைவர்), பென் ஸ்டோக்ஸ் (உபதலைவர்), டொம் பேஸ், ஸ்டுவர்ட் ப்ரோட், ஜொஸ் பட்லர், ஷக் க்ரௌலி, சாம் கரண், ஜோ டென்லி, பென் போக்ஸ், கீட்டன் ஜேனிங்ஸ், ஜெக் லீச், மெட் பார்கின்சன், ஒல்லி பேப், டொம் சிப்லேய், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

டெஸ்ட் தொடர் அட்டவணை

  • 19 – 23 மார்ச் – முதலாவது டெஸ்ட் போட்டி – காலி சர்வதேச மைதானம் 
  • 27 – 31 மார்ச் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – SSC மைதானம், கொழும்பு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<