ஆண்டர்சனின் அபார பந்து வீச்சினால் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

147
Image Source - Getty

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இன்வெஸ்டக் டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்று தொடர் 1-1 என சமநிலையில் காணப்பட்ட நிலையில் 3ஆவது போட்டி வெற்றியாளர்களை தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டியாக அமைந்திருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தடாத் தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இங்கிலாந்து  ஆரம்பம் முதலே அதிர்ச்சியளிக்கத் தவறவில்லை. சிறப்பான பந்து வீச்சில் தொடர்ந்து  முத்திரை பதிதுக்கொண்டிருக்கும் ஆண்டர்சன் முதலாவது விக்கெட்டை மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஓட்டங்கள் பெற்றிருந்தவேளை வீழ்த்த மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.

2ஆவது போட்டியின் ஆட்ட நாயகனான ஷாய் ஹோப் உடன் இணைந்து  கிரோன் பவல் சற்று நிதானமாக ஆட ஆரம்பிக்க போட்டியின் போக்கு சற்று மேற்கிந்திய தீவுகள் அணியின் பக்கம் சார்ந்ததாகவே காணப்பட்டது. எனினும் ரோலன்ட் ஜோன்சின் பந்து வீச்சில் ஷாய் ஹோப் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஆண்டர்சனின் பணியை பென் ஸ்டோக் கையில் எடுக்க களத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரன் பவல் ஓய்வறை திரும்பினார். பவல் 98 பந்துகளுக்கு முகம் கொடுத்து 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும். அடுத்து வந்த வீரர்கள் ஸ்டோக்கின் அபாரமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழக்க மேற்கிந்திய தீவுகள்அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஏனைய வீரர்கள் ஒற்றை மற்றும் சொற்ப இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் ஸ்டோக் 22 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் மற்றும் ரோலன்ட் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக களம் இறங்கிய இங்கிலாந்து அணியை கெமர் ரோச் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஜோடி தடுமாற வைக்க ஆரம்பித்தது. முதல் 4 விக்கெட்டுகளையும் 24 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்து இக்கட்டான நிலையில் இருந்த இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்ட்ரோக் பெற்ற 60 ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்ட எண்ணிக்கையை தாண்டியது. பின்வரிசையில் வந்து ஸ்டூவர்ட் ப்ரோட் பெற்ற 38 ஓட்டங்களுடன் இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணியின் அதிகமான துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் அரங்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ரோச் 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் ஹோல்டர் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கப்ரியல் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி  71 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ள நிலையில் தமது 2ஆவது இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி ஆண்டர்சனின் 500ஆவது விக்கெட்டாக கார்லோஸ் பரத்வேய்ட் விழ, மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை ஆண்டர்சனிடம் தாரைவார்க்க ஆரம்பித்தது. முதல் இன்னிங்சைப் போன்றே பவல் மற்றும் ஹோப்  நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் ஏனைய வீரர்களின் தொடர்ச்சியான ஆட்டமிழப்பு மேற்கிந்திய தீவுகள் அணியை 177 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிகபட்சமாக ஷாய் ஹோப் 62 ஓட்டங்களையும் பவல் 45 ஓட்டங்களையும் இறுதி நேரத்தில் சற்று நிதானமாக ஆடிய ஹோல்டர் 23 ஒட்ட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்

மிகச்சிறப்பான பந்து வீச்சை வெளிக்காட்டிய ஆண்டர்சன் இங்கிலாந்து சார்பாக டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது வீரராக வரலாற்றில் பதிவானார். ஆண்டர்சன் 42 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டூவர்ட் ப்ரோட் 2 விக்கெட்டுகளையும் ரோலன்ட் ஜோன்ஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

107 என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடத் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அலஸ்டையர் குக் 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க ஸ்டோன்மென் மற்றும் வெஸ்ட்லி ஜோடி வெற்றி இலக்கை தொட்டது.  

போட்டியின் ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக் தெரிவு செய்யப்பட தொடரின் சிறப்பாட்டக்காரர்களாக மேற்கிந்தியத் தீவுகளின் அணியின் ஷாய் ஹோப் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜிம்மி ஆண்டர்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இரு அணிகளுக்குமிடையிலான ஒரே ஒரு T20 போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி  சனிக்கிழமை நடைபெறவுள்ளதுடன் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.