ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு டெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி டேவிட் வோர்னர் தலைமையிலான சண் ரயிசஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கவ்தம் கம்பீர் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தார்.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 30 பந்துகளில்  8 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 44 ஓட்டங்களைப் பெற்றார். அவர் தவிர ஹென்ரிகியூஸ் 31 ஓட்டங்களையும் வோர்னர் 28 ஓட்டங்களையும் பெற்றனர். கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கட்டுகளையும், மோர்கல் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

காலிறுதியில் ப்ளூ ஸ்டாரை வீழ்த்தியது சவுண்டர்ஸ்

இதனையடுத்து 163 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால் கொல்கத்தா அணியினால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இப்போட்டியில் சண் ரயிசஸ் ஹைதராபாத் அணி 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் துடுப்பாட்டத்தில்  மணிஷ் பாண்டே 36 ஓட்டங்களையும் கம்பீர் 28 ஓட்டங்களையும் பெற்றனர்ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 3 விக்கட்டுகளையும் ஹென்ரிகியூஸ் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணி சார்பாக 31 ஓட்டங்களைப் பெற்றதோடு 2 விக்கட்டுகளை வீழ்த்திய ஹென்ரிகியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தத் தோல்வியின் மூலம் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. ஹைதராபாத் அணி வெள்ளிக்கிழமை நடைபெறும் தகுதிகான் சுற்றின்  2ஆவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியுடன் மோதுகின்றது.

அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மே 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூர் ரொயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கும்.

 மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்