28 வருடங்களின் பின் FIFA உலகக் கிண்ணத்தில் எகிப்து

327

2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு அரபு உலகில் அதிகளவு மக்களைக் கொண்ட நாடாக விளங்குகின்ற எகிப்து தகுதி பெற்றுக்கொண்டது.

ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பு நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் 3 ஆவது சுற்றில் 20 அணிகள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தங்களது குழுக்களில் உள்ள மற்றைய அணிகளுடன் மோதிக்கொள்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இடம் பெறும் அணி 2018 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும் நிலையில், E குழுவில் நேற்று கொங்கோ அணியுடன் இடம்பெற்ற போட்டியில் லிவர்பூல் கழகத்துக்காக விளையாடி வருகின்ற எகிப்து அணியின் 25 வயதுடைய இளம் நட்சத்திர வீரரான மொஹமட் சலாஹ்வின் அபார கோலினால் 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் எகிப்து அணி 2018 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுக்கொண்டது.

எகிப்தின் அலெக்ஸான்ட்ரியாவில் உள்ள பேர்ஜ் அல் அராப் மைதானத்தில் (Borg El Arab Stadium) 30 ஆயிரம் இராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் 80 ஆயிரம் ரசிகர்ளுக்கு முன்னிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை. எனினும் இரண்டாவது பாதி ஆட்டத்தின் 63 ஆவது நிமிடத்தில் எகிப்து வீரர் மொஹமட் சலாஹ் முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து கடுமையாகப் போராடிய கொங்கோ அணி சார்பாக போட்டி நிறைவடைய 3 நிமிடங்களுக்கு முன் அதாவது 88 ஆவது நிமிடத்தில் ஆர்னோல்ட் பவுகா (Arnold Bouka) கோலொன்றைப் பெற்றுக்கொள்ள போட்டி 1- 1 என சமநிலை பெற்றது.

எனினும் மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்தில், அதாவது போட்டியின் 95 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட எகிப்து அணி மற்றுமொரு கோலைப் பெற்றுக்கொண்டு வெற்றியைப் பதிவுசெய்தது. அவ்வணிக்கான இறுதி கோலையும் மொஹமட் சலாஹ் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறுமா ஆர்ஜன்டீனா?

இதன்படி இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் அவ்வணி 4 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து 12 புள்ளிகளுடன் அக்குழுவில் முதலிடத்தைப் பெற்று 3 ஆவது தடவையாகவும் உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்கு தகுதிபெற்றுள்ளது. முன்னதாக 1934 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் அவ்வணி உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வெற்றியினூடாக உலகக் கிண்ண கால்பந்து தொடர் வரலாற்றில் எகிப்து அணியானது 28 வருடங்களுக்குப் பிறகு தகுதி பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனினும், ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் பிரபலமான அணியாக வலம்வந்த எகிப்து அணியானது முன்னதாக 1990, 1998, 2006 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் ஆபிரிக்க கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமானது எகிப்து நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சிவப்பு, வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்து கொண்டு எகிப்து நாட்டின் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி, தேசிய கீதத்தை பாடிக்கொண்டு வீதிகளில் கூடி பட்டாசுகளை கொழுத்தியவாறு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமை சர்வதேச ஊடகங்களில் வெளியாகியிருந்தன. அதிலும் குறிப்பாக 2011ஆம் ஆண்டு எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்குப் பிறகு அந்நாட்டு மக்கள் வெற்றிக்காக கய்ரோவிலுள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் ஒன்றுகூடிய முதல் சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது. அத்துடன் எகிப்து எல்லைப் பகுதியில் உள்ள காஸா மக்களும் எகிப்து கால்பந்து அணியின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஒன்று கூடியிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எகிப்தின் இந்த வெற்றி மற்றும் உலகக் கிண்ண கால்பந்து தொடருக்காக தகுதி பெற்றது தொடர்பிலும் எகிப்திய ஜனாதிபதி அப்டெல் பட்டாஹ் அல் சிசி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளதோடு, நாட்டு மக்களுக்கும் கால்பந்து வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதன்படி 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு தகுதிபெற்ற 2 ஆவது அரபு நாடாக எகிப்து இடம்பிடித்துள்ளது. முன்னதாக ஆசிய கண்டத்திலிருந்து சவூதி அரேபியா உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.