இலங்கையின் தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாண அஞ்சலோட்ட அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப் பதிவை மேற்கொண்டுள்ளது.

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளின் 2ஆவது நாளின் இறுதிப் போட்டியாக இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 4X100 அஞ்சலோட்டப் போட்டியில் மொஹமட் அஷ்ரப் லதீப் தலைமையிலான கிழக்கு மாகாண அணியினர், போட்டித் தூரத்தை 41.51 செக்கன்களில் நிறைவு செய்து கிழக்கு மாகாணத்திற்கு 2ஆவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தனர்.

கிழக்கு மாகாணம் சார்பாக முதலாவது தங்கப்பதக்கம் வென்ற ஆஷிக்

43ஆவது தேசிய விளையாட்டு விழாவில்…

வழமையைப் போன்று ஒவ்வொரு தேசிய விளையாட்டு விழாவிலும் ஏட்டுக்குப் போட்டியாக முதலிரண்டு இடங்களைப் பெற்று வருகின்ற மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண அணிகளுக்கு கடந்த சில வருடங்களாக நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் போட்டியாக இருந்து வருகின்ற தரப்பினராக கிழக்கு மாகாண அஞ்சலோட்ட அணி உள்ளது.

அந்த வகையில் இம்முறையும், தேசிய மட்டத்தில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கின்ற மொஹமட் அஷ்ரப், ராஜாஸ்கான், மொஹமட் பாஸில் உடயார் மற்றும் வொஷிம் இல்ஹாம் ஆகியோர் கிழக்கு மாகாண அணியில் இடம்பெற்றிருந்தனர்.

மிகவும் விறுவிறுப்பாகவும், போட்டித் தன்மைமிக்கதாகவும் ஆரம்பமாகிய இப்போட்டியில் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த வீரர்கள் முதல் அஞ்சல்கோல் (baton) பரிமாற்றத்தை மிக விரைவில் மேற்கொண்டாலும், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாண வீரர்கள் அதில் முன்னிலை பெற்றிருந்தமையை காணமுடிந்தது.

எனினும், கிழக்கு மாகாண அணிக்காக 3ஆவது கோல் பரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்ட மொஹமட் அஷ்ரப், மிக வேகமாகச் சென்று இறுதி 100 மீற்றருக்காக ஓடிய வொஷிம் இல்ஹாமிடம் கோலைப் பரிமாற்றினார். ஆனால், மறுபுறத்தில் இறுதி 100 மீற்றரில் மேல் மாகாண அணியின் கோல் பரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்ட தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான் இறுதி 60 மீற்றர் தூரத்தில் முன்னிலை பெற்று இல்ஹாமை முந்திச் சென்று 41.32 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வெல்ல, 41.51 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த கிழக்கு மாகாண அணி வெள்ளிப் பதக்கத்தையும், 41.54 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த தென் மாகாண அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

எனினும் யாரும் எதிர்பாராத வகையில், மேல் மாகாண அணி வீரரின் முதல் கோல் பரிமாற்றம் எல்லைக் கோட்டுக்கு முன் இடம்பெற்றதால் அது முறையற்றது என குறித்த இடத்தில் இருந்த போட்டி நடுவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டி நிறைவடையும் வரை குறித்த அறிவிப்பு போட்டியின் பிரதான நடுவருக்கு அறிவிக்கப்படாத காரணத்தால் மேல் மாகாண அணிதான் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது என அறிவிக்கப்பட்டது.

எனினும், போட்டி நிறைவடைந்து 5 நிமிடங்களில் வெளியிடப்பட்ட பிரதான நடுவரின் இறுதி அறிவிப்பின்படி தவறான கோல் பரிமாற்றத்தால் மேல் மாகாண அணி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண அணி முதலிடத்தையும், தென் மாகாண அணி 2ஆவது இடத்தையும், வடமேல் மாகாண அணி 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டதாக ஏகமனதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வறிப்பினை உறுதிப்படுத்திய பிறகு போட்டியில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண அஞ்சலோட்ட அணியினர் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டு அதிகாரிகள் தமது மகிழ்ச்சியை மைதானத்தில் வெளிப்படுத்தியிருந்தமையை காணமுடிந்தது.

தேசிய விளையாட்டு விழாவில் 2ஆவது முறையாகவும் அனித்தா தேசிய சாதனை

விளையாட்டுத்துறை அமைச்சுடன் …

போட்டியின் பிறகு கிழக்கு மாகாண அணி வீரரும், அஞ்சலோட்ட குழுத் தலைவருமான மொஹமட் அஷ்ரப் ThePapare.com இணையத்தயளத்துக்கு கருத்து வெளியிடுகையில், ”வரலாற்றில் முதற்தடவையாக அஞ்சலோட்டப் போட்டியில் கிழக்கு மாகாணத்துக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்க முடிந்தமை மகிழச்சியளிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருந்து கிழக்கு மாகாண விளையாட்டு அதிகாரிகள், எமது தனிப்பட்ட பயிற்சியாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்துடன் எமது வீரர்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்ள கிழக்கு மாகாணத்தில் இதுவரை எந்தவொரு சிறந்த மைதானமும் இல்லை. அவ்வாறான சூழ்நிலையிலும் வெற்றி பெற முடிந்தமை மகிழ்ச்சி தருகின்றது” என அவர் குறிப்பிட்டார்.