புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாட்டில் இடம்பெறுகின்றட்ரகன்ஸ் லீக் -2017′ சுற்றுப் போட்டியின் 13வது லீக் ஆட்டத்தில் பலமும் அனுபவமும் மிக்க புத்தளம் யுனைடட் விளையாட்டுக் கழகம் வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்ட ஒடிடாஸ் விளையாட்டுக் கழகத்தினை இலகுவாக வீழ்த்தியது.

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பந்து இரு கழக வீரர்களினதும் கால்களில் மாறிமாறி அடிபட்டுக்கொண்டே இருந்தது. எனினும் பின்னர் பெரும்பாலான நேரம் பந்து யுனைடட் வீரர்களின் கால்களில் காணப்பட்டது.

முதல்பாதி அதிரடியில் ட்ரிபல்செவனிடம் வீழ்ந்தது போல்ட்டன்

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்தி வரும் ‘ட்ரகன்ஸ்…

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் யுனைடட் வீரர் இர்சாத் வழங்கிய சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை பெற்ற ருசான் கோல் கம்பத்திற்கு வேகமாக உதைந்தார்.  வேகமாக செயற்பட்ட ஒடிடாசின் கோல் காப்பாளர் முபாசிக் பந்தினைப் பிடிக்க முயற்சித்த போதும் பந்து கையிலிருந்து நலுவி ருசானின் கால்களுக்கு செல்ல மீண்டும் ருசான் கோலுக்கு பந்தை உதைந்தார். எனினும் பந்து கம்பத்திற்கு அருகாமையால் செல்ல அவரது முதல் முயற்சி வீணானது.

போட்டியின் 13ஆவது நிமிடத்தில் ஒடிடாஸ் கழக வீரர் சரன் மைதானத்தின் அரைப் பகுதியிலிருந்து கோல் கம்பம் நோக்கி அடிக்க அதை இலகுவாகப் பிடித்துக் கொண்டார் யுனைடட் கழக தலைவரும் கோல் காப்பாளருமாகிய ஹசான்.

போட்டியின் 20வது நிமிடத்தில் சம்ஹி வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை பெற்ற ரின்சான் கோல் கம்பத்திற்கு 40 யார் தொலைவிலிருந்து கம்பம் நோக்கி மிக வேகமாக உதைந்தார். அதனை முபாசிக் பிடிக்க முயற்சி செய்வதற்கு முன் பந்து கம்பத்தின் மூலைப் பகுதியினூடாக உள்நுழைய யுனைடட் கழகம் தமது முதல் கோலுடன் முன்னிலை பெற்றது.

யுனைடட் கழக வீரர்கள் எதிரணியின் பகுதியில் முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர். எனினும், ஒடிடாசின் முன்கள வீரர்கள் சற்று மந்தகதியில் செயற்பட்டமையால் யுனைடட் அணியின் பகுதி வெறுமையாகக் காணப்பட்டது.

போட்டியின் 35வது நிமிடத்தில் யுனைடடின் ருசான் வழங்கிய பந்தை இர்சாத் இலகுவாக கோல் கம்பத்திற்குள் அனுப்ப, நடுவர் அதனை ஓப்சைட் என அறிவித்தார்.

போட்டியின் 39வது நிமிடத்தில் ஒடிடாஸ் வீரர் தாசிம் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை சபான் கம்பம் நோக்கி உதைக்க, ஹசான் பந்தினை லாபகமாகப் பற்றிக்கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை வீரர்களை அதிர வைத்த ஜடேஜா மற்றும் யாதவ்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பணயம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மற்றும் இலங்கை…

மேலும், போட்டியின் 44வது நிமிடத்தில் ரம்சின் கம்பம் நோக்கி உயர்த்தி அடித்த பந்தை ருசான் உயரே எழுந்து தலையால் முட்டினார். இதன்போது, பந்து கோல் கம்பங்களுக்குள் செல்ல மீண்டும் நடுவர் ஓப்சைட் என அறிவித்தார். எனவே, யுனைடட் அணியின் அடுத்த கோலும் வீணானது.

முதல் பாதி: யுனைடட் விளையாட்டுக் கழகம் 1 – 0 ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம்.

இரண்டாவது பாதியில் யுனைடட் கழகத்தின் கோல் கணக்கை கட்டுப்படுத்துவதற்காக ஒடிடாஸ் கழகம் தமது தடுப்பு வீரர்களை அதிகப்படுத்தியது. அதனை முறியடிக்க யுனைடட், தமது முன்கள வீரர்களை சற்று அதிகரிக்க போட்டி மேலும் விறுவிறுப்பானது.

போட்டியின் 48வது நிமிடத்தில் யுனைடடின் நிசாமி தூரத்திலிருந்து கம்பம் நோக்கி அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.

மேலும் 5 நிமிடங்களின் பின்னர் ருசான் வழங்கிய சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை பெற்ற ஜர்க்கின் ஒடிடாசின் 3 தடுப்பு வீரர்களையும் கடந்து கம்பத்திற்குள் அடிக்க யுனைடடின் கோல் எண்ணிக்கை இரட்டிப்பானது.

முதற் பாதியைப் போலவே இரண்டாம் பாதியிலும் யுனைடடின் அரைப் பகுதி வெறுமையாகவே காணப்பட்டது. இதனால் யுனைடடின் தடுப்பு வீரர்களும் ஒடிடாசின் பகுதியினை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

போட்டியின் 59வது நிமிடத்தில் யுனைடடின் ஹுசைன் வழங்கிய பந்தினை ருசான் கோல் நோக்கி உதைக்க, ஒடிடாசின் தடுப்பு வீரர் முர்சித் தலையால் முட்டி அதனை வெளியேற்றினார்.

பின்னர் 63வது நிமிடத்தில் ருசான் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை சிறப்பாகப் பெற்றுக் கொண்ட ஜர்க்கின் கம்பம் நோக்கி வேகமாக அடிக்க ஒடிடாஸ் கோல் காப்பாளரின் கையில் பட்டவாரே பந்து உள்நுழைய ஜர்க்கினின் கோல் கணக்கு இரட்டிப்பாகி, அணியின் கோல் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

போட்டியின் 72ஆவது நிமிடத்தில் யுனைடட் வீரர் ரம்சின் கொடுத்த பந்தினைப் பெற்ற ஜர்க்கின் கம்பம் நோக்கி உருட்டி அடிக்க, அதை முபாசிக் இலகுவாகப் பிடித்துக்கொண்டார்.

ஓடிடாசின் முன்கள வீரர்கள் பந்தினை ஒரு முறையேனும் யுனைடடின் கம்பத்திற்கு அருகாமையில் கூட கொண்டு செல்ல முடியாத அளவிற்கு அவ்வணியின் தடுப்பு வீரர்கள் செயற்பட்டனர்.

கல்பிட்டி பேல்ஸ் அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த புத்தளம் நியூ ஸ்டார்

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் நடைபெறும் “ட்ரகன்ஸ் சம்பியன்ஸ் லீக்” சுற்றுத்…

போட்டியின் 85வது நிமிடத்தில் ஹுசைன் வழங்கிய அற்புதமான பந்துப் பரிமாற்றத்தைப் பெற்றுக் கொண்ட இர்சாத் இலகுவான முறையில் பந்தை கோல் கம்பத்திற்குள் தள்ள யுனைடடின் கோல் கணக்கு நான்காக உயர்ந்தது.

ஒடிடாஸ் வீரர்கள் இரண்டாம் பாதியில் மேற்கொண்ட முதல் முயற்சியாய், போட்டியின் 88வது நிமிடத்தில் முர்சித் வழங்கிய பந்தினைப் பெற்ற சபான் கோல் கம்பம் நோக்கி அடித்தார். இதன்போது சிறப்பாகச் செயல்பட்ட ஹுசைன் அதைத் தடுத்து நிறுத்த அவர்களது ஒரே முயற்சியும் வீணாகிப் போனது.

இப் போட்டியின் இறுதி நிமிடத்தில் (90) யுனைடட் கழக வீரர் ருசான் வழங்கிய பந்தினைப் பெற்ற ஜர்க்கின் இலகுவாக கோல் அடிக்க வேண்டிய சமயத்தில் கோல் கம்பத்திற்கு மேலால் பந்தை அடித்தார். எனவே அவர்களது இறுதி கோல் வாய்ப்பு வீணானது.

போட்டி முடிவடைந்ததாய் நடுவர் அறிவிக்க பலமும் அனுபவமும் மிக்க யுனைடட் கழகம் இளம் ஒடிடாஸ் கழகத்தை 4 கோல்களால் இலகுவாய் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் கண்டது.  

முதல் பாதி: யுனைடட் விளையாட்டுக் கழகம் 4 – 0 ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம்  

கோல் பெற்றவர்கள்

யுனைடட் விளையாட்டுக் கழகம்

ரின்சான் 20’, ஜர்க்கின் 53’, & 63’, இர்சாத் 85’