கேள்விக்குறியாகும் மெதிவ்ஸின் எதிர்காலம்?

1917

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது.

தொடர்ந்து, இம்முறை ஆசிய கிண்ணத்தில் இருந்து இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் இருந்தார் என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து, கடந்த சில தினங்களாக அஞ்சலோ மெதிவ்ஸுக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் வாயிலாக காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, கேலிச் சித்திரங்கள் வரையப்பட்டு பல விமர்சனங்களும் வெளியாகி இருந்தன.

இலங்கை ஒருநாள் குழாமிலிருந்து மெதிவ்ஸ்,மெண்டிஸ் நீக்கம் : குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை…

இந்த நிலையில், இன்னும் 9 மாதங்களில் ஆரம்பமாகவுள்ள 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்துவதற்கு அஞ்சலோ மெதிவ்ஸ் தகுதியானவரா என்ற கேள்வியும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டன.  

இதுஇவ்வாறிருக்க, இலங்கை ஒரு நாள் மற்றும் டி-20 அணித்தலைமை பொறுப்பில் இருந்து அஞ்சலோ மெதிவ்ஸை விலகிக் கொள்ளும்படி தேர்வுக் குழுவினர் கோரியிருந்ததை அடுத்து, குறித்த பதவிகளில் இருந்து தான் விலகுவதாக கடந்த 23ஆம் திகதி அஞ்சலோ மெதிவ்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்து, அடுத்த மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமாலை நியமிக்கவும், குறித்த தொடரில் இருந்து மெதிவ்ஸை நீக்கவும் தேர்வுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும், தனது இராஜினாமா குறித்து இங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கு அஞ்சலோ மெதிவ்ஸ் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அக்கடித்தத்தில் தேர்வுக் குழுவினர் மற்றும் பயிற்சியாளரும் தன்னை பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியமைக்கான முழுப் பொறுப்பும் தன்மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், ஆசிய கிண்ண தோல்வியின் ஒரு பங்காளியே தான் என்றும், அதன் முழுப் பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது எனவும் அஞ்சலோ மெதிவ்ஸ் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒருநாள் குழாமிலிருந்து மெதிவ்ஸ்,மெண்டிஸ் நீக்கம் : குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான …

மேலும், தான் அணிக்கு சுமையாக இருக்க விம்பவில்லை எனவும், அணிக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ள மெதிவ்ஸ், அணிக்கு தகுதியற்ற வீரராக தன்னைக் கருதினால் அணியில் இருந்து விலகுவதற்கு தயாராக உள்ளதாகவும் குறித்த கடிதத்தின் மூலம் சுட்டிக்காட்டினார்.

இதுஇவ்வாறிருக்க, உடற் தகுதி பரிசோதனைக்கு முன்னரே மெதிவ்ஸின் உடற்தகுதி பரிந்துரைக்கப்பட்ட மட்டத்தில் இல்லை என தேர்குழுவினர் தெரிவித்திருந்தனர். எனினும், தனது உடற் தகுதியினை நிரூபிக்கத் தயார் என்று மெதிவ்ஸ் அவர் தேர்வாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், இங்கிலாந்திற்கு எதிராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் கடந்த 26ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. தினேஷ் சந்திமால் தலைமையில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட ஒருநாள் குழாத்தில் இருந்து முன்னாள் அணித்தலைவரான அஞ்சலோ மெதிவ்ஸ் நீக்கப்பட்டமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

எதுஎவ்வாறாயினும், இலங்கை ஒருநாள் குழாமை அறிவிக்கும்போது கருத்துத் தெரிவித்த தலைமைத் தேர்வாளர் கிரெஹம் லெப்ரோய், அடுத்தாண்டு உலகக் கிண்ணம் வரை தினேஷ் சந்திமாலே அணித்தலைவராக செயற்படுவார் என்றும் உலகக் கிண்ணத்துக்கான தமது திட்டங்களில் அஞ்சலோ மெதிவ்ஸ் இன்னும் காணப்படுகின்றார் என்றும் கூறியிருந்தார்.

அஞ்சலோ மெதிவ்ஸ் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில், இலங்கை அணியின் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்ற போது நான்தான் மெதிவ்ஸை தலைவராக நியமிக்க வேண்டும் என தெரிவித்தேன். ஏனெனில், அவர்தான் அணியின் அனுபவமிக்க வீரராக இருந்தார். ஆனால், தற்போது தான் அவருடைய உடற்தகுதி குறித்து நன்கு அறிய முடிந்தது. ஓட்டங்களை பெறுவதற்காக மெதிவ்ஸ் சிரமப்படுகின்றார். அத்துடன் ஏனைய வீரர்களையும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்கின்றார்.

2017இற்கு பின்னர் அவரது சராசரி 57 என்பது எங்களிற்கு தெரியும், அண்மையில் நிறைவடைந்த தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் 97 ஓட்டங்களை பெற்றார் என்பதும் தெரியும். ஆனால், அவர் 64 தடவைகள் ரன் அவுட் ஆகியுள்ளார். இதில் 49 தடவைகள் எதிர் வீரரை ஆட்டமிழக்க செய்துள்ளார், இது உலக சாதனையாகவும் பதவாகியது. எனினும், நான் அவர் மீண்டும் விரைவில் திரும்பி வருவதை விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்திய அஞ்சலோ மெதிவ்ஸ், குறித்த தொடரில் இலங்கை அணியை காலிறுதிப் போட்டிகள் வரை அழைத்துச் சென்றார். எனினும், உலகக் கிண்ணப் போட்டிகளின் பிறகு மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் திலகரத்ன டில்ஷான் ஆகிய நட்சத்திர வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இலங்கை அணியில் இடம்பெற்ற மாற்றங்கள், வீரர்களின் தொடர் உபாதைகள் உள்ளிட்ட காரணங்களினால் இலங்கை அணி தொடர் பின்னடைவை சந்தித்து வந்தன.  

இதுஇவ்வாறிருக்க, கடந்த 2017ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் ஒரு நாள் தொடரை அவ்வணி வெற்றி கொண்டதை அடுத்து அஞ்சலோ மெதிவ்ஸ் தனது தலைவர் பதவியை இராஜினாமாச் செய்தார்.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்கவின் கோரிக்கைக்கு அமைய, 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை மீண்டும் ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக அவர் பெறுப்பேற்றார்.

எனினும், கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு விதமான காயங்களால் அவதிப்பட்டு வருகின்ற மெதிவ்ஸுக்கு முக்கியமான தொடர்களில் விளையாட முடியாமல் போனது. அதிலும் குறிப்பாக, 2017ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 22 இன்னிங்ஸ்களில், 100 பந்துகளுக்கு 76 ஓட்டங்கள் என்ற வகையிலென்றாலும், 59.2 என்ற சராசரியில் 888 ஓட்டங்களை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்றிருந்தார்.

இலங்கை ஒருநாள் அணித் தலைவராக சந்திமால் நியமனம்; மெதிவ்ஸை விலகுமாறு கோரிக்கை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக தினேஷ்…

எவ்வாறாயினும், இலங்கை அணி இறுதியாக பங்கேற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரின் ஐந்து போட்டிகளில், 83 என்ற ஓட்ட வேகத்தில், 78.33 என்ற சராசரியில் 235 ஓட்டங்களை மத்தியூஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த இலங்கை வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

அத்துடன், இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணியை மெதிவ்ஸ் வழிநடத்திய விதத்தை இம்முறை ஆசிய கிண்ணத்தில் காணமுடியவில்லை. இலங்கை அணிக்கு இறுதி நேரத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுக்கின்ற முக்கிய வீரர்களுள் ஒருவராக விளங்குகின்ற மெதிவ்ஸிற்கு துடுப்பாட்டத்திலும் சோபிக்க முடியாமல் போனது. அதேபோல, ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் திஸர பெரேரராவுடன் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி வந்த மெதிவ்ஸ், தேவையற்ற பிடியொன்றை வழங்கி ஆட்டமிழந்தார்.

அதுமாத்திரமின்றி, முக்கியமான வீரர்களை ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்கவும் செய்தார். அதிலும் குறிப்பாக, உபாதைக்குப் பிறகு ஓடுவதில் மிகவும் பின்னடைவை காண்பித்து வருகின்ற மெதிவ்ஸ், பந்துவீச்சாளர்களை கையாள்வதிலும் தோல்வி கண்டார்.

இலங்கை கிரிக்கெட் அணி வரலாற்றில் இல்லாதவாறு கடந்த 4 வருடங்களுக்களாக நெருக்கடிகளையும், தோல்விகளையும் சந்தித்து வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மை. 2015 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கை அணியின் தலைவர்களாக பல வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உபுல் தரங்க, லசித் மாலிங்க, சுரங்க லகடமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் அதில் உள்ளடங்குகின்றனர்.

அதுமாத்திரமின்றி, 2017ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை அணி பங்கேற்ற 57 ஒருநாள் போட்டிகளில் 40 போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன், ஜிம்பாப்வே, பங்களாதேஷ் நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளிடம் தோல்விகளை சந்த்தித்திருந்தமை மோசமான பதிவுகளாகவும் கருதப்படுகின்றது.  

எனினும், இவ்வாறான தோல்விகளுக்கும், பின்னடைவுகளுக்கும் அணித் தலைவரினதும், வீரர்களினதும் மோசமான செயற்பாடே காரணம் என்பதை வழமையாகக் கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட்டும், அதன் பயிற்றுவிப்பாளர்களும், தலைவலிக்கு தலையணையை மாற்றுகின்ற செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

அதிலும் குறிப்பாக, அநீதிக்கு எதிராக குரல் எழுப்பி தமது விளையாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பல வீரர்களை இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் நாம் பார்த்துள்ளோம்.

இதற்கு சமீபத்திய சம்பவமாக விளையாட்டுத்துறை அமைச்சரையும், இலங்கை கிரிக்கெட்டையும் பகிரங்கமாகப் பேசிய குற்றச்சாட்டில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு சுமார் ஒரு வருட காலம் எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு இந்நாட்டு அதிகாரிகளினால் புறக்கணிக்கப்பட்டு இருந்ததை அனைவரும் நன்கு அறிவர்.

T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ள, அணிக்கு பத்து ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட T10 கிரிக்கெட்…

எனவே, இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்ற கனவான்களின் விளையாட்டு என அழைக்கப்படுகின்ற கிரிக்கெட் விளையாட்டில் இவ்வாறானதொரு அசாதாரணத்துக்கு முகங்கொடுத்த வீரர்களின் பட்டியலில் மற்றுமொரு வீரராக அஞ்சலோ மெதிவ்ஸும் இடம்பெற்றுவிட்டார்.

கடந்த வருடத்தில் ஒருநாள் அரங்கில் திறமைகளை வெளிப்படுத்திய முன்னிலை வீரராக விளங்கிய மெதிவ்ஸ், தனக்கெதிராக அநீதி இழைக்கப்பட்டதை முழு உலகிற்கும் தெரியப்படுத்திய காரணத்தால் இறுதியில் இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டு விட்டது.  

மெதிவ்ஸின் ஒருநாள் போட்டிகளின் ஓட்ட விபரம்

வருடம் போட்டிகள் ஓட்டங்கள் சராசரி சதம் அரைச்சதம்
2008- 2015 167 3972 39.33 01 27
2016 13 520 47.27 05
2017 15 573 63.66 01 03
2018 08 315 52.50 02
ஒட்டுமொத்தமாக 203 5380 42.36 02 37

வீரராகவும், தலைவராகவும் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள்

போட்டி ஓட்டங்கள் சராசரி சதம் அரைச்சதம்
97 (வீரராக) 2116 37.78 1 15
106 (தலைவராக) 3264 45.97 1

22

 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<