ஹெவலொக் அணியை மிரள வைத்த பொலிஸ்

103

டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் இரண்டாம் சுற்றில், பலம் மிக்க ஹெவலொக் அணியை கிட்டத்தட்ட வெற்றிகொள்ளும் நிலைக்கு வந்த பொழுதும், 24-24 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொலிஸ் அணி, போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.

பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஹெவலொக் அணி இலகுவாக வெற்றிபெறும் என நினைத்த பொழுதும், பொலிஸ் அணி அதிரடி விளையாட்டை வெளிப்படுத்தி, போட்டியை தனக்கு சாதகமாய் அமைத்துக்கொண்டது.

சந்தேஷின் உதவியுடன் ஹெவலொக் அணியின் கோட்டைக்குள் நுழைந்த பொலிஸ் அணியானது, வாஜித் பௌமி மூலமாக போட்டியின் முதலாவது ட்ரை வைத்து ஹெவலொக் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. சந்தேஷ் கொன்வெர்சனை தவறவிட, பொலிஸ் அணியானது 5 புள்ளிகளால் முன்னிலை பெற்றது. (பொலிஸ் 05 – 00 ஹெவலொக்)

தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளான ஹெவலொக் அணி, இரண்டு பெனால்டி வாய்ப்புகளை எதிரணிக்கு வழங்கியது. எனினும் பொலிஸ் அணி அதனை புள்ளிகளாக மாற்றத் தவறியது. பின்னர் தனது திறமையை வெளிக்காட்டிய ஹெவலொக் அணியானது, தொடர்ந்து இரண்டு ட்ரைகளை வைத்து தனது பலத்தை நிரூபித்தது. ஷாரோ பெர்னாண்டோ ஹெவலொக் அணி சார்பாக முதலாவது ட்ரை வைக்க, சுதம் சூரியாராச்சி இரண்டாவது ட்ரை வைத்து தமது அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். முபாரக் இரண்டு கொன்வெர்சனையும் தவறவிட்டார். (பொலிஸ் 05 – 10 ஹெவலொக்)

CH & FC அணியின் சவாலை முறியடித்த கண்டி விளையாட்டுக் கழகம்

தொடர்ந்து இரண்டு அணிகளும் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிக்காட்டியதை பார்க்கக் கூடியதாக இருந்தது. 27 ஆவது நிமிடத்தில் நான்கு ஹெவலொக் அணி வீரர்களைக் கடந்து சென்ற விங் நிலை வீரரான சுஜன் கொடிதுவக்கு அற்புதமான ட்ரையை தமது அணிக்கு பரிசளித்தார். சந்தேஷ் கொன்வெர்சன் மூலம் மேலதிக இரண்டு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.

எனினும் பொலிஸ் அணியால் முதல் பாதியில் முன்னிலையை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. சுதம் சூரியாராச்சி மீண்டும் ஒரு முறை ட்ரை வைத்து ஹெவலொக் அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார்.

முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 12 – 17 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் மறுபடியும் தீவிர விளையாட்டை வெளிக்காட்டியது. ஹெவலொக் அணி கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மீண்டும் ஒரு ட்ரை வைத்து தனது முன்னிலையை மேலும் அதிகரித்துக்கொண்டது. ருக்மல் பெர்னாண்டோ இம்முறை ஹெவலொக் அணி சார்பாக ட்ரை வைத்தார். முபாரக் கொன்வெர்சனை சிறப்பாக உதைத்தார். 12 புள்ளிகளால் ஹெவலொக் அணி முன்னிலையில் காணப்பட்டாலும், பொலிஸ் அணி தன்னம்பிக்கையை தளரவிடவில்லை. உதார சூரியப்பெரும பொலிஸ் அணி சார்பாக ட்ரை வைத்து முன்னிலையை 5 புள்ளிகளாகக் குறைத்தார். (பொலிஸ் 19 – 24 ஹெவலொக்)

இறுதி சில நிமிடங்களில், ஹெவலொக் அணிக்கு அழுத்தம் கொடுத்த பொலிஸ் அணியானது, பந்தை சிறப்பாக முன் நகர்த்தியது. இதன் பயனாக ஷானக ஹரிஸ்சந்திர கம்பத்தின் அடியே ட்ரை வைத்து பொலிஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். எனினும் இலகுவான கொன்வெர்சனை சந்தேஷ் உதைக்க, அது துரதிஷ்டவசமாக கம்பத்தில் பட்டு திரும்பியது. அத்துடன் நடுவர் போட்டியை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ட்ரை மழை பொழிந்த கண்டி, கடற்படை விளையாட்டுக் கழகங்கள்

டயலொக் ரக்பி லீக் தொடரில் விறுவிறுப்பான வாரமாக அமைந்த இவ்வாரம், இரண்டு அணிகளும் கைகலப்பில் ஈடுபட்டதால் மோசமாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 24 (4T, 2C) – 24 (4T, 2C) ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – ரசித் சில்வா (பொலிஸ் விளையாட்டுக் கழகம்)

புள்ளிகள் பெற்றோர்

பொலிஸ் விளையாட்டுக் கழகம்

ட்ரை – வாஜித் பௌமி, சுஜான் கொடிதுவக்கு, உதார சூரியப்பெரும, ஷானக ஹரிஷ்சந்திர

கொன்வெர்சன் – சந்தேஷ் ஜயவிக்ரம (2)

ஹெவெலொக் விளையாட்டுக் கழகம்

ட்ரை – ஷரோ பெர்னாண்டோ, சுதம் சூரியாராச்சி (2), ருக்மல் பெர்னாண்டோ

கொன்வெர்சன் – ரீசா முபாரக் (2)