இரட்டைச்சதம் விளாசிய யாழ் மத்தியின் 15 வயதுடைய சன்சயன்

892
Sanushyan

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு 3 இற்கான (டிவிஷன் III) கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

அணிக்கு இரண்டு இன்னிங்ஸ்களாக அமையும் இந்த ஒரு நாள் போட்டித் தொடரில், யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்காக ஆடி வரும் மதீஸ்வரன் சன்சயன், கனகரத்தினம் மத்திய வித்தியாலயத்திற்கு (ஸ்டான்லி கல்லூரி) எதிரான போட்டியில் இரட்டைச் சதம் விளாசியுள்ளார்.

சகல துறைகளிலும் பிரகாசித்த வட மாகாண அணிக்கு அபார வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு…

வலதுகை துடுப்பாட்ட வீரரான சன்சயன் கடந்த திங்கட்கிழமை (18) யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்டான்லி கல்லூரி) அணிக்கு எதிரான குறித்த போட்டியில், முதலில் துடுப்பாடிய தனது கல்லூரிக்காக வெறும் 138 பந்துகளை மாத்திரம் சந்தித்தே இந்த 200 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

குறித்த போட்டியில் சன்சயனின் இரட்டைச்சத உதவியோடு யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி முதல் இன்னிங்ஸிற்காக 61.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 366 என்ற வலுவான நிலையில் காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

யாழ். மத்திய கல்லூரியினை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணியினர் 100 ஓட்டங்களுடன் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர்.

கனகரத்தினம் மகா வித்தியாலய அணியின் முதல் இன்னிங்சுடன் போட்டியின் ஆட்ட நேரம் முடிவுக்கு வர முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி வெற்றி பெற்றுக் கொண்டது.

இந்தப் போட்டி தவிர சன்சயன் தான் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சதங்களும் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு (115) எதிராகவும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு (107) எதிராகவும் பெறப்பட்டிருந்தது. இந்த இரண்டு சதங்களின் போதும் சன்சயன் ஆட்டமிழக்காது நின்று தனது தரப்பு முதல் இன்னிங்ஸின் அடிப்படையில் வெற்றிபெற காரணமாகவும் அமைந்தார்.  

துடுப்பாட்ட வீரர் என்பதோடு மட்டுமில்லாது சன்சயன் வலதுகை வேகப்பந்து வீச்சாளராக செயற்படும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றார். இதுதவிர சன்சயன் நல்ல ஒரு களத்தடுப்பாளர் என்பதும் குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

சன்சயனின் தொடர்ச்சியான சிறப்பாட்டத்தோடு, இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் – III கிரிக்கெட் தொடரில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணியானது அவர்களது குழுவில் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் காணப்படுகின்றது.  

மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டு வரும் யாழ் மாவட்ட கிரிக்கெட்டில், தற்பொழுது மற்றொரு சாதனையாக இவ்வாறு ஒரு இரட்டைச் சதம் மற்றும் இரண்டு சதங்களைப் பெற்றுள்ள இந்த இளம் வீரருக்கு இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.comஉம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க