2020 இல் தியகமவில் சர்வதேச தரத்திலான விளையாட்டுத் தொகுதி

160

தியகமவில் சர்வதேச விளையாட்டு கட்டடத் தொகுதி (International Sports Complex), தேசிய விளையாட்டு அகடமி (National Sports Academy) போன்றவற்றை அமைப்பதற்கான  அபிவிருத்தி செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களின் தலைமையில் நேற்று (29) இடம்பெற்றது.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் தியகமவில் 400 மீட்டர் நீளமான செயற்கை ஓடுபாதை, 50 மீட்டர் நீளமான நீச்சல் தடாகம், கிரிக்கெட் மைதானம், சர்வதேச பாடத்திட்டங்களை கற்பிக்க கூடிய  விளையாட்டு அகடமி, நவீன வசதிகள் கொண்ட ஜிம்னாஸ்டிக் அரங்கு, பேஸ்போல் (Baseball) மைதானம், விரிவுரைகள் வழங்குவதற்கான அரங்கு, கலந்துரையாடல் அரங்கு, வீரர்கள் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் தேசிய விளையாட்டு பாடசாலை என்பவற்றை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.   

பொதுநலவாய விளையாட்டில் தேசிய கொடியை ஏந்தும் பளுதூக்கல் வீரர்!

3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

தியகமவில் சர்வதேச விளையாட்டுக் கட்டடத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான வேலைகள் 2008ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த வேலைகள் அரைவாசி மாத்திரமே பூர்த்தியாகிய நிலையில் கைவிடப்பட்டிருந்தது. எனினும் இப்போது இலங்கை இராணுவத்தின் உதவியோடு அங்கு 2020ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் அதன் அனைத்து அபிவிருத்தி வேலைகளையும் முடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி வேலைகளுக்காக 7500 மில்லியன் ரூபா செலவழிக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில், அபிவிருத்தி வேலைகளில் இலங்கை இராணுவ வீரர்கள் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டிருந்தது. குறித்த உடன்படிக்கையில் விளையாட்டு அமைச்சின் சார்பில் ஐயந்த விஜயரத்னவும், இலங்கை இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் சத்யப்பிரியவும் ஒப்பம் இட்டிருந்தனர்.

இராணுவம் – விளையாட்டு அமைச்சு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படல்.

இந்த பெரும் அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான ஊடக நிகழ்வில் பேசியிருந்த  விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, “ நாங்கள் இந்த ஆண்டில் விளையாட்டு அமைச்சு சார்பாக  1,500 மில்லியன் ரூபா (இந்த வேலைத்திட்டங்களுக்காக) ஒதுக்கியுள்ளோம். இதில் 310 மில்லியன் ரூபா செயற்கை ஓடுபாதைக்காக செலவிடப்படும். இந்த இடத்திலேயே எதிர்கால (ஓட்டப்போட்டி) நிகழ்வுகள் தேசிய விளையாட்டு அகடமியின் ஆளுகையில் இடம்பெறும். இந்த விடயங்களுக்காக ஒரு செயற்குழுவும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. “

“இங்குள்ள நீச்சல் தடாகங்கள் சர்வதேச தரத்தினை அனுகாமல் இருப்பதற்கு அவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக அமைகின்றது.

இது தொடர்பாக நாம் ஏற்கனவே தேசிய நீச்சல் தொழில்நுட்ப சபையின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடி இருந்ததோடு அதன்போது சர்வதேச தரத்திற்கு நீச்சல் தடாகங்களை கொண்டுவருவது சம்பந்தமான திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய தடாகங்கள் 11 மீற்றர் உயரத்தில் காணப்படுவதோடு அவை சர்வதேச தரத்தினை அனுக 13 மீற்றர் உயரத்தினை கொண்டிருக்க வேண்டும்.

மேலும், தேசிய விளையாட்டுப் பாடசாலைகள் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது. கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியவை ஒருங்கிணைந்து, உள்ளூர் பாடசாலைகளில் சிறந்த திறமைமிக்க வீர வீராங்கனைகளை தெரிவு செய்வதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளது.  அப்படி தெரிவு செய்யப்படும் பாடசாலை வீர, வீராங்கனைகளுக்கு அதிகாலையிலும் பாடசாலை நிறைவடைந்த பின்னரும் (இங்கு) பயிற்சி நெறிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

>> அங்குரார்ப்பண நிகழ்வின் புகைப்படங்கள்

அதோடு தியகமவில் அமைக்கப்படவிருக்கும் கிரிக்கெட் மைதானம் சர்வதேச போட்டிகளுக்கு ஏற்றவாறு இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.  “ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் திலங்க சுமதிபால இங்கு அமைக்கப்படும் கிரிக்கெட் மைதானத்தினை சர்வதேச கிரிக்கெட் மைதானமாக ஆக்க வாய்ப்புத்தருமாறு கேட்டிருந்தார். இந்த அடிப்படையில் இங்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்று எதிர்காலத்தில் கட்டப்படவுள்ளது. “ என்றார்.

புதிய செயற்கை ஓடுபாதை பற்றி கதைத்த அமைச்சர் அது தற்போது  தியகமவில் இருக்கின்ற ரக்பி மைதானத்தினைச் சுற்றி அமைக்கப்படும் என்று குறிப்பிட்டதோடு அது தொடர்பாக மேலும் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

இங்கு ஏற்கனவே இருக்கின்ற செயற்கை ஓடுபாதை முறையற்ற நிலையில் இருக்கின்றது. இதற்கு பதிலாக நாங்கள் 400 மீட்டர் நீளமான புதிய ஓடுபாதையினை அமைக்கவிருக்கின்றோம். அதற்கு முதல் இப்போது இருக்கும் ஓடுபாதை நவீனப்படுத்தப்பட வேண்டும். எங்களிடம் இப்போது சுகததாச அரங்கில் காணப்படும் ஒரேயொரு ஓடுபாதை மட்டுமே இருக்கின்றது. இந்த வேலைகள் (ஓடுபாதையை நவீனப்படுத்துவது) சில நாட்களுக்குள் முடிந்து விடும். இதற்கு மேலதிகமாக நாம் இரத்தினபுரி, மாத்தறை, பிங்கிரிய மற்றும் மாத்தளை போன்ற விளையாட்டு தொகுதிகளிலும் செயற்கை ஓடுபாதைகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்திருக்கின்றோம். இப்படியாக ஒவ்வொரு மாகாணத்திற்கும் என மொத்தமாக ஒன்பது செயற்கை ஓடுபாதைகளை அமைப்பது எமது எதிர்பார்ப்பு “  எனக் குறிப்பிட்டார்.  

தடகள விளையாட்டு நிகழ்ச்சிகள் தவிர ரக்பி, பேஸ்போல், கைப்பந்து (Handball), குறிபார்த்து சுடுதல், அம்பெய்தல் போன்ற விளையாட்டுக்களை நடாத்துவதற்கான வசதிகள் தியகமவின் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்தவுடன் கிடைக்கும்.  

அமைக்கப்படவுள்ள விளையாட்டு கட்டடத் தொகுதி ஒரே நேரத்தில் 33 அணிகளை உள்ளடக்கும் அளவுக்கு விசாலமானது என்பதோடு, இதிலிருந்து 4,000 வரையிலான பார்வையாளர்களும் போட்டிகளை கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இங்கு உருவாக்கப்படவுள்ள விளையாட்டு அகடமியில் சர்வதேச தரத்திலான விளையாட்டுப் பாடநெறிகள் தரம் 7 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கு வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு கற்பிக்கப்படவிருக்கின்றது. மாணவர்கள் இதனால் விளையாட்டுக்களில் ஆர்வத்தையும், விளையாட்டுக்கள் தொடர்பான சிறந்த கல்வியினையும் பெற்றுக்கொள்வர்.

இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான நிதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக  இன்னும் நிதி உதவிகள், கடன் உதவிகள் பெற்றுக் கொள்ள இப்போதும் உள்ளூர், சர்வதேச பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. விளையாட்டுக்களை  மேம்படுத்த தேவையாக இருக்கும் இந்த உட்கட்டமைப்பு வசதிகள் காலக்கிரமத்தில் பூர்த்தி செய்யப்படுவதன் மூலம் சர்வதேச நாடுகள் பங்குபெறும் இந்த விளையாட்டுத் தொடரினை இலங்கை வெற்றிகரமாக நடாத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.