பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் l) கால்பந்துத் தொடரின் படோவிட யுனைடட் அணியுடனான போட்டியில் மாவனல்லை செரண்டிப் கால்பந்துக் கழகம் 2-1 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற போட்டியில் செரண்டிப் அணி, பேருவளை ரெட் ஸ்டார் அணியுடனான ஆட்டத்தை 2-2 என சமநிலையில் முடித்திருந்தது. எனினும், படோவிட யுனைடட் அணி ஓல்ட் மெசனோடியன்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தது.

இறுதி நேர அபாரத்தால் செரண்டிப்புடனான ஆட்டத்தை சமப்படுத்திய ரெட் ஸ்டார்

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து நீண்ட தூரம் வழங்கப்பட்ட பந்துப்..

இந்நிலையில், படோவிட அணியினரின் சொந்த மைதானமான குரே பார்க் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகியது முதல் செரண்டிப் வீரர்களின் பந்துப் பரிமாற்றம் சற்று அதிக ஆதிக்கத்துடன் இருந்தது.

செரண்டிப் அணியினர், இப்போட்டியில் விளையாடாத தமது முக்கிய வீரர்களான ரியாஸ் மொஹமட் மற்றும் ராஜ் ஷெரோன் ஆகியோருக்குப் பதிலீடாக அணியின் மத்திய மற்றும் முன் களத்தில் சில மாற்றங்களை செய்திருந்தது.

ஆட்டத்தின் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் செரண்டிப் முன்கள வீரர் கோலை நோக்கி உதைந்த பந்து மேல் கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானம் நோக்கி வர, அதனை சக வீரர் சிமோன் மீண்டும் கோல் நோக்கி உதைந்தார். எனினும் பந்து கம்பத்திற்கு வெளியே சென்றது.

போட்டியின் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் செரண்டிப் வீரர்களுக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது, நிஷான் லக்ஷிதவினால் உள்ளனுப்பப்பட்ட பந்தை தரிந்து லியனகே மீண்டும் கோல் திசைக்கு உதைந்தார். இதன்போது தன்னிடம் வந்த பந்தை சிமோன் கோலுக்குள் செலுத்தி, செரண்டிப் அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து படோவிட தரப்பினருக்கு கிடைத்த ப்ரீ கிக் உதையை பொடன்சியல் பெற்றார். அவர் கோல் நோக்கி உதைய, பந்தை செரண்டிப் கோல் காப்பாளர் நஜான் தட்டிவிட, மீண்டும் அவ்வணியின் பின்கள வீரர்கள் அதனை வெளியேற்றினர்.

ஆட்டத்தின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில், செரண்டிப் வீரர் அப்துலாய் உள்ளனுப்பிய பந்தைப் பெற்ற ஆசிர், கோல் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை தவறவிட்டார்.

எனினும், முதல் பாதியின் இறுதித் தருணமான 45ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து செரண்டிப் அணியின் கோல் திசைக்கு வழங்கப்பட்ட பந்தை படோவிட அணியின் பிரதீப் ரங்கன பெற்று, கோல் காப்பாளர் நஜானைத் தாண்டி பந்தை கோலுக்குள் அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.

முதல் பாதி: செரண்டிப் கால்பந்துக் கழகம் 1-1 படோவிட யுனைடட் விளையாட்டுக் கழகம்

தீர்மானம் மிக்க இரண்டாவது பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்கள் கடந்த நிலையில், செரண்டிப் அணிக்கான இரண்டாவது கோலை ஆசிர் பெற்றுக் கொடுத்தார். எனினும், உதவி நடுவரின் சமிக்ஞைக்கு அமைய ஆசிர் ஓப் சைட் இருந்ததாக நடுவர் தெரிவிக்க அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

அதன் பின்னரும் செரண்டிப் வீரர்களுக்கு தொடர்ச்சியாக பல கோல் வாய்ப்புக்கள் கிடைத்த போதும், அவற்றை அவ்வணியின் வீரர்கள் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினர்.

Highlights – Red Star v Serandib FC (2017 Premier League Division I)

Uploaded by ThePapare.com on 2017-09-16.

60 நிமிடங்கள் கடந்த நிலையில், படோவிட கோல் எல்லையில் செரண்டிப் வீரர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் எதிரணியினரால் தடுக்கப்பட்டன. இறுதியாக, செரண்டிப் வீரரால் கோலுக்குள் செலுத்தப்பட்ட பந்தை, கோல் எல்லைக்கு அண்மையில் இருந்து படோவிட கோல் காப்பாளர் கிஸ்ஸே ஓமர் தட்டித் தடுத்தார்.

மேலும் நான்கு நிமிடங்கள் கடந்த நிலையில், படோவிட அணியினரால் செரண்டிப்பிற்கு அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. 64ஆவது நிமிடம் செரண்டிப் பின்கள வீரர் மதுசன்க திசெர தனித்து நின்று படோவிட முன்கள வீரரிடம் இருந்து பந்தை தடுக்க முற்பட்டார். எனினும், இதன்போது அவரது தவறின் காரணமாக எதிரணியின் வீரர் ஒருவர் பந்தைத் தட்டி உள்ளனுப்ப, படோவிட அணியின் நவீன் நிர்மால் அதனை கோலாக்கினார்.

68ஆவது நிமிடம் உள்ளனுப்பப்பட்ட பந்தை ஆசிர் கோலுக்கு இடது திசையில் இருந்து வெகமாக உதைந்தார். எனினும் இதனை படோவிட கோல் காப்பாளர் கிஸ்ஸே ஓமர் வெளியே தட்டி விட்டார்.

மீண்டும் செரண்டிப் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது, நிஷான் அதனை கோல் நோக்கி உதைய, அதனையும் கிஸ்ஸே ஓமர் தடுத்தார்.

இவ்வாறு செரண்டிப் அணியின் மற்றொரு சிறந்த முயற்சியாக அப்துலாய் அடித்த பந்து தடுக்கப்பட்டு மீண்டும் வர, அதனை பண்டாரகொட மீண்டும் கோல் நோக்கி உதைந்தார். மீண்டுமொருமுறை கிஸ்ஸே ஓமர் சிறந்த முறையில் பந்தைத் தடுத்தார்.

இவ்வாறு, அடுத்தடுத்து பல வாய்ப்புகள் செரண்டிப் வீரர்களால் உருவாக்கப்பட்டும், அவை அனைத்தும் படோவிட பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டன.

மறு முனையில் படோவிட முன்கள வீரர்கள் தமது அணிக்கான அடுத்த கோலைப் பெறுவதற்கான முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளாமல், நிதானமாக ஆடினர்.

குறிப்பாக, செரண்டிப் அணியின் மத்திய கள வீரர் ரியாஸ் மற்றும் அனுபவ வீரர் ஷெரோன் ஆகியோர் அணியில் இல்லாமை அவ்வணிக்கு பெரும் குறையாக இருந்தமையை மைதானத்தில் காணக்கூடியதாக இருந்தது.

முழு நேரம்: செரண்டிப் கால்பந்துக் கழகம் 1-2 படோவிட யுனைடட் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – கிஸ்ஸே ஓமர் (படோவிட யுனைடட் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

செரண்டிப் கால்பந்துக் கழகம் – G. சிமொன் 31’

படோவிட யுனைடட் விளையாட்டுக் கழகம் –  பிரதீப் ரங்கன 45’, நவீன் நிர்மால் 64’

மஞ்சள் அட்டை

செரண்டிப் கால்பந்துக் கழகம் – நஸ்றுல்லா அமீர் அலி 57’, ஹேமன்த பண்டாரகொட 78 ‘

படோவிட யுனைடட் விளையாட்டுக் கழகம் – K பெரேரா 13’, நாமல் கசுங்க 40’, பிரியன்த குமார 59’, S. ரூபசிங்க 67’, ருவன் ஷாமர 78’, C. பொடன்சியல் 84’