இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்று (டிவிஷன் l) தொடருக்கான மற்றொரு போட்டியில் யாழ் மண்ணின் பலம் பொருந்திய அணியான சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தினை, மாவனல்லை செரண்டிப் கால்பந்துக் கழகம் 1-0 என வீழ்த்தியுள்ளது.

இதற்கு முன்னைய போட்டியில் செரண்டிப் அணி படோவிட யுனைடட் அணியுடனான போட்டியில் 2-1 என அதிர்ச்சித் தோல்வியடைந்திருந்தது. அதேபோன்று, சென் மேரிஸ் அணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் SLTB அணியிடம் தோல்வி கண்டிருந்தது.

ரினௌன் – ஜாவா லேன் மோதல் சமநிலை : கொழும்பு அணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுபர் சன்

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பலம்கொண்ட ரினௌன் விளையாட்டுக் கழகம் மற்றும் ஜாவா லேன் விளையாட்டுக்…

இந்நிலையில், புதிதாக நிர்மானிக்கப்பட்ட திகன விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த போட்டி ஆரம்பமாகி முதல் நிமிடத்திலேயே செரண்டிப் வீரர் சிமோன், சென் மேரிஸ் அணியின் கோல் எல்லையில் இருந்து பந்தை உள்ளனுப்பினார். எனினும், அதன்போது அவர்களால் கோலைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

தொடர்ந்து சில நிமிடங்களாக இரு அணியினதும் மத்திய மற்றும் பின் கள வீரர்களிடையே ஏற்பட்ட சில தவறுகளால் இரு தரப்பினருக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. எனினும், அவற்றின்மூலம் எவரும் தமக்கான பலனைப் பெற்றுக்கொள்ளவில்லை.

ஆட்டத்தின் 18 நிமிடங்கள் கடந்த நிலையில், சென் மேரிஸ் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை 23 வயதின் கீழ் தேசிய அணியின் முன்னாள் வீரர் நிதர்சன் பந்தை கோலை நோக்கி ஹெடர் செய்தார். எனினும் பந்தை செரண்டிப் கோல் காப்பாளர் நஜான் பிடித்துக்கொண்டார்.

ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் செரண்டிப் முன்கள வீரர் ராஜ் ஷெரோன் உள்ளனுப்பிய பந்தை ஹெடர் செய்வதற்கு அவ்வணியின் எந்த வீரரும் இருக்காத காரணத்தினால் கோல் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு வீணானது.

அதற்கு அடுத்த சில நிமிடங்களில் அவ்வணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ரியாஸ் மொஹமட் பெற்றார். பெனால்டி எல்லைக்கு சற்று தொலைவில் வலது புறத்தில் இருந்து ரியாஸ் உதைந்த பந்தை, அவ்வணி வீரர்கள் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினர்.

தொடர்ந்து சிமோன் மூலம் மேற்கொள்ளப்பட்ட கோலுக்கான முயற்சியை சென் மேரிஸ் கோல் காப்பாளர் சுதர்சன் தடுத்தார்.

மீண்டும் 38ஆவது நிமிடத்தில் வலது புற கோணர் திசையில் இருந்து உயர்த்தி உள்ளனுப்பிய பந்தை செரண்டிப்பின் அப்துலாய் ஹெடர் செய்தார். எனினும் அவரது கோலுக்கான இலக்கு சரியாக அமையவில்லை.

Interview with Popular football player Mohamed Issadeen

Interview with Mohamed Issadeen, Former Sri Lanka National football team player and current SL army football team player..

முதல் பாதியின் மேலதிக நேரத்தில் கிறிஸ்தோபர் ஜக்சன் செரண்டிப் கோல் நோக்கி உதைய, நஜான் பந்தை பாய்ந்து தடுத்தார்.

முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் செரண்டிப் அணிக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக, அப்துலாய் மீக நீண்ட தூரம் எடுத்து வந்து ஆசிருக்கு கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை, ஆசிர் வெளியே அடித்து வீணாக்கினார்.

முதல் பாதி: செரண்டிப் கால்பந்துக் கழகம் 0 – 0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்கள் கடந்த நிலையில், சென் மேரிஸ் வீரர்களால் உயர்த்தி உள்ளனுப்பப்பட்ட பந்தை செரண்டிப் பின்கள வீரர் நிஷான் லக்ஷித ஹெடர் செய்தார். எனினும் பந்து அவர்களது கோல் பகுதிக்கே செல்லும்போது வேகமாக செயற்பட்ட நஜான் பந்தை தன்னகத்தே பற்றிக்கொண்டார்.

மேலும் 5 நிமிடங்கள் கடந்து, ஆசிர் வழங்கிய பந்தைப் பெற்ற அப்துலாய் அதனை அணித் தலைவர் ஷெரோனுக்கு வழங்கினார். எனினும் ஷெரோன் முன்னேறுவதற்குள் பந்து வேகமாக மைதானத்தை விட்டு வெளியேறியது.

பின்களத்தில் இருந்து பெற்ற பந்தை அப்துலாய் மீண்டும் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் சென்று கோலை நேக்கி உதைந்தார். அதன்போது பந்தை சென் மேரிசின் சுதர்சன் பாய்ந்து பிடித்தார்.

ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் சென் மேரிசின் மிஷெல் அன்டனி எதிரணியின் பெனால்டி எல்லையில் இருந்து கோலை நோக்கி அடித்த பந்து கோல் காப்பாளர் நஜானையும் தாண்டி வெளியே சென்றது.

எனினும், போட்டியின 75ஆவது நிமிடம் ஆட்டத்தின் போக்கை மாற்றும் தருணமாக இருந்தது. மத்திய களத்தில் இருந்து பெற்ற பந்தை ஷெரோன் லாவகமாக எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் கொண்டு சென்று அப்துலாயை நோக்கி பரிமாற்றம் செய்தார். இரண்டு தடுப்பு வீரர்களுக்கு மத்தியில் இருந்து பந்தைப் பெற்ற அப்துலாய் மிக சிறந்த முறையில் பந்தை கோல் நோக்கி உதைந்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதல் கோலைப் பெற்றதன் பின்னரும் செரண்டிப் முன்கள வீரர்களுக்கு தொடர்ந்து சில வாய்ப்புகள் கிடைத்தும் அவர்கள் அவற்றின் மூலம் சிறந்த இறுதி முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

படோவிட அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த செரண்டிப்

பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் l) கால்பந்துத் தொடரின் படோவிட யுனைடட் அணியுடனான போட்டியில் மாவனல்லை..

83 ஆவது நிமிடத்தில் செரண்டிப் அணியினர் கோலை நோக்கி உதைந்த பந்தை மேரிசின் சுதர்சன் தடுத்தார். மீண்டும் அதனை அப்துலாய் கோல் நோக்கி உதைந்தார். அந்தப் பந்தும் கோல் கம்பத்திற்கு அருகில் இருந்த மேரிசின் பின்கள வீரரால் தடுக்கப்பட்டது. மீண்டும் மைதானத்தினுள் வந்த பந்தை அவ்வணியின் பின்கள வீரர்கள் அங்கிருந்து வெளியேற்றினர்.

அதன் பின்னர் தொடர்ந்து சென் மேரிசின் முன்களத்தில் வைத்து ஷெரோன் மற்றும் ரியாஸ் பெற்ற வாய்ப்புக்களை அவர்களால் கோலாக்க முடியாமல் போனது.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் சென் மேரிஸ் வீரர்கள் பெற்ற ப்ரீ கிக்கை செரண்டிப் பின்கள வீரர்கள் தடுத்து திசை மாற்றினர்.

மீண்டும் மேலதிக நேரத்தில், செரண்டிப் கோல் எல்லைக்குள் உயர்த்தி வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றத்தை கோல் காப்பாளர் நஜான் தடுத்தார். அதன்போது பெறப்பட்ட கோல் கிக் உதையுடன் போட்டி நிறைவடைந்தது.

எனவே, செரண்டிப் வீரர்கள் இத்தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர்.

முழு நேரம்: செரண்டிப் கால்பந்துக் கழகம் 1 – 0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

செரண்டிப் கால்பந்துக் கழகம் – மொஹமட் அப்துலாய் 75’

 மஞ்சள் அட்டை

செரண்டிப் கால்பந்துக் கழகம் – G. சிமோன் 89’

சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் – ஜேம்ஸ் அன்டனி18’, கிறிஸ்தோபர் ஜக்சன் 79’