ஆசிய பரா விளையாட்டில் போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த

142

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் 3 ஆவது ஆசிய பரா விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளின் நான்காவது நாளான இன்று (11) இலங்கைக்கான நான்காவது தங்கப் பதக்கத்தை இலங்கை பரா அணியின் தலைவர் தினேஷ் பிரியந்த ஹேரத் பெற்றுக்கொடுத்தார்.

இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கை வென்ற 4 ஆவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

அத்துடன், ஆண்களுக்கான  T 42/61/63 குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான சக்கர இருக்கை டென்னில் தனிநபர் போட்டியில் பங்குகொண்ட சுரேஷ் ரணவீர வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்கள்

இதன்படி, போட்டிகளின் நான்காவது நாளான இன்றைய தினம் இலங்கை அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை வென்றது.

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான F-46 பிரிவு ஈட்டி எறிதல் பங்குகொண்ட தினேஷ், 61.84 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற றியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தடவையாக வெண்கலப் பதக்கத்தையும், கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான தினேஷ் பிரயந்த ஹேரத், கடந்த ஏப்ரல் மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் F-46 பிரிவு ஈட்டி எறிதலில் உலகின் 2 ஆவது சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து, உலக சாதனை அடைவுமட்டத்தை அண்மித்தார். குறித்த போட்டியில் 63.70 மீற்றர் தூரத்தை அவர் பதிவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான F-46 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டிக்கான சாதனையை 2016 றியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் தேவேந்திர நிலைநாட்டினார். குறித்த போட்டியில் 63.97 மீற்றர் தூரத்தை எறிந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இம்முறை ஆசிய பரா விளையாட்டில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்தவிடம் அவருக்கு தோல்வியைத் தழுவ நேரிட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனினும், குறித்த போட்டிப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் சிங் குர்ஜார், 61.33 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த ரின்கு, 60.92 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

ஆனால், உலக மற்றும் ஆசிய சாதனைகளுக்குச் சொந்தக்காரராகிய இந்தியாவைச் சேர்ந்த தேவேந்திர, 59.17 மீற்றர் தூரத்தை எறிந்து நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

இது இவ்வாறிருக்க, குறித்த போட்டியில் பங்குகொண்ட மற்றுமொரு இலங்கை வீரரான காமினி ஏக்கநாயக்க (53.94 மீற்றர்) ஏழாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

மலேசிய – இலங்கை நட்புறவு போட்டிக்கான அணிக் குழாம் அறிவிப்பு

இதேவேளை, ஆசிய பரா விளையாட்டு விழா மெய்வல்லுனரில் இன்று நடைபெற்ற T. 42/61/63 குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட பாலித பண்டார, 13.21 மற்றர் தூரத்தை எறிந்து தனது அதிசிறந்த தூரப் பெறுமதியுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

குறித்த போட்டியில் ஈரானைச் சேர்ந்த மொஹமட் சஜாத் (15.27 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ரிக்‌ஷிமோ மொஹமட் (13.12 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

இதேநேரம், மெய்வல்லுனர் போட்டிகளில் மாத்திரம் பதக்கங்களை வென்று வந்த இலங்கை பரா அணிக்கு நேற்றுமுன்தினம் நடைபெற்ற சக்கர இருக்கை இரட்டையர் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

குறித்த போட்டியில் தாய்லாந்தின் சுதி, சின்தொன் ஜோடியினரை இலங்கையின் சுரேஷ் ரணவீர, ரன்ஜன் தர்மசேன ஜோடியினர் 2 நேர் செட் கணக்கில் (6-1, 6-2) வெற்றிகாண்டு வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.

இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் குழு நிலைப் போட்டியில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

இதன்படி, ஆசிய பரா விளையாட்டு விழாவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் இலங்கை அணி, 4 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 13 பதக்கங்களை வென்றது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<