தினேஷ் கார்த்திக்கின் அதிரடியை வீணடித்த ராஜஸ்தான்

99
iplt20.com

ஐ.பி.எல்.  தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தினேஷ் கார்த்திக்கின் அதிரடித் துடுப்பாட்டத்தை வீணடித்து, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

வில்லியர்ஸின் அதிரடியால் பெங்களூர் அணிக்கு வெற்றி

ஐ.பி.எல். தொடரில் ப்ளே-ஓஃப் சுற்றுக்கு தங்களுடைய ……

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியானது, இரண்டு அணிகளும் ப்ளே-ஓஃப் வாய்ப்பினை நெருங்குவதற்கான முக்கிய போட்டியாக அமைந்திருந்தது. குறிப்பாக கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் முறையே 6வது மற்றும் 8வது இடங்களை பிடித்திருந்தன.

இந்நிலையில், இரண்டு அணிகளும் கட்டாய வெற்றியினை நோக்கி களமிறங்க, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி, தினேஷ் கார்த்திக்கின் அபார துடுப்பாட்டத்தின் மூலமாக 175 ஓட்டங்களை பெற்றது.

குறிப்பாக, இந்தப் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரரான என்ரே ரசல் ஆகியோர் ஏமாற்றமளித்திருந்த போதும், இறுதிவரை துடுப்பெடுத்தாடிய கார்த்திக் 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 97 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் வரோன் அரோன் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், தங்களது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, ஆரம்பத்தில் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. அஜின்கே ரஹானே மற்றும் சஞ்சு செம்சுன் ஆகியோர் ஓட்டங்களை குவிக்க, ராஜஸ்தான் அணி 5.2 ஓவர்களில் 53 ஓட்டங்களை கடந்தது. பின்னர், தங்களுடைய சுழற்பந்தினை வைத்து கொல்கத்தா அணி, ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தது.

சுனில் நரைன் தனது சுழலால் ஸ்மித் மற்றும் ரஹானே ஆகியோரை வெளியேற்ற, சௌவ்லா செம்சுன் மற்றும் ஸ்டோக்ஸை வெளியேற்றினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாற்றத்தை எதிர்கொள்ள, புதுமுக வீரர் ரியான் பராக் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தார்.

வொட்சனின் அதிரடியால் சென்னைக்கு மீண்டும் முதலிடம்

ஐ.பி.எல். தொடரில் தங்களது சொந்த மைதானத்தில் தொடர் வெற்றிகளை குவித்து வரும், சென்னை சுப்பர் …………………….

பின்னர், 24 பந்துகளுக்கு 46 ஓட்டங்கள் என்ற நிலையில், ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் ரியான் பராக் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களின் அதிரடியுடன் இறுதி ஓவருக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜொப்ரா ஆர்ச்சர் பௌண்டரி மற்றும் சிக்ஸரை விளாசி, இரண்டு பந்துகளில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

அதிரடியாக ஆடிய ஜொப்ரா ஆர்ச்சர் 12 பந்துகளுக்கு 27 ஓட்டங்களையும், ரியான் பராக் 31 பந்துகளில 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் ப்யூஸ் சௌவ்லா 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் படி, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், அதே 8 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 6வது இடத்திலும், பெங்களூர் அணி 8வது இடத்திலும் நீடிக்கின்றன.

போட்டி சுருக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 175/6 (20), தினேஷ் கார்த்திக் 97 (50), நிதிஷ் ராணா 21 (26), வரோன் ஆரோன் 20/2

ராஜஸ்தான் றோயல்ஸ் – 177/7 (19.2), ரியான் பராக் 47 (31), அஜின்கியா ராஹானே 34 (21), ஜொப்ரா ஆர்ச்சர் 27 (120), ப்யூஸ் சௌவ்லா 20/3

முடிவு – ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<