புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்த தமிழக நட்சத்திரம் கார்த்திக்!

813

காத்திருஎன்ற வார்த்தை தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கையின் தாரக மந்திரமாகவே இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் நிலையான ஒரு விக்கெட் காப்பாளருக்கான இடத்தைப் பெற முடியாமல் போனது.

எனினும், 2005இல் டோனி இந்திய அணிக்குள் நுழைந்ததும், கார்த்திக்கின் இடம் முகவரி இல்லாமல் சென்றுவிட்டது. இதனையடுத்து இந்திய அணிக்கான கதவும் கார்த்திக்குக்கு ஒருசில தருணங்களில் தான் திறக்கப்பட்டன.

இந்திய அணியில் மொஹீந்தர் அமர்நாத்துக்குப் பிறகு அதிகமுறை அணிக்குத் திரும்பி வந்தவர் என்ற பெயர் தினேஷ் கார்த்திக்கைச் சாரும். இந்திய அணியில் போர்மில் இருந்துகொண்டும் அணிக்குத் தேர்வாகி விளையாடுவதில் சந்தர்ப்பம் கிடைக்காமல் காத்திருந்த வீரரும் இவர்தான்.  

தினேஷ் கார்த்திக்கின் சாகச துடுப்பாட்டத்தால் சுதந்திரக் கிண்ணம் இந்தியா வசம்

கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய தினேஷ் …

அதிலும், டோனி உபாதைகளுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில் அல்லது அவருக்கு ஓய்வு அளிக்கும் சந்தர்ப்பங்களில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடும் வாய்ப்பை பெறுகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்த கார்த்திக், விக்கெட் காப்பாளராக மாத்திரமல்லாது ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டு தனது 100 சதவீத பங்களிப்பினை வழங்குவதில் முன்னிலை வீரராகவும் திகழ்ந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கிலிருந்து டோனி ஓய்வுபெற்றதுடன், அவரின் இடத்தில் விருத்திமன் சஹா விளையாடி வருகின்றார். எனினும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் டோனி இன்னும் விளையாடி வருவதால், இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தினேஷ் கார்த்திக் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் 2017இல், தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் மீண்டும் காற்று வீசுவதற்கு ஆரம்பித்தது. அதிலும், கோஹ்லியின் தலைமைத்துவத்தின் கீழ் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், இந்திய அணி ஒரு மாற்று விக்கெட் காப்பாளர் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை, எனவே இளம் வீரர்களுடன் போட்டியிட்டு அணியில் நிலையான இடமொன்றை பெற்றுக்கொள்வதற்காக தினேஷ் கார்த்திக்கிற்கு போராட வேண்டியிருந்தது.

இதனையடுத்து கடந்த வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெற்றுக்கொண்ட கார்த்திக், இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி-20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடியிருந்ததுடன், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தான் இறுதி நேரத்தில் களமிறங்கி சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

டெஸ்ட் அரங்கில் இருந்து ஏமாற்றத்துடன் விடைபெற்ற நட்சத்திரங்கள்

சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் குறித்த டெஸ்டில் இலங்கை அணி 215.. தாகத்தில் …

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி நேற்று இரவு கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.

சுமார் 20,000 பேர் போட்டியைக் காண மைதானத்துக்கு வருகை தந்திருந்தாலும், போட்டியை நடாத்துகின்ற இலங்கை அணிக்கு இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிட்டவில்லை. அதிலும், பங்களாதேஷ் அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் துரதிஷ்டவசமாக இலங்கை அணி தோல்வியைத் தழுவியதுடன், பரபரப்பை ஏற்படுத்திய அப்போட்டியில் பங்களாதேஷ் வீரர்கள் மைதானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டமை கிரிக்கெட் உலகிற்கு மிகப் பெரிய இழுக்கையும் பெற்றுக்கொடுத்தது.

எனவே, நேற்றைய இறுதிப் போட்டியில் இலங்கை ரசிகர்கள் முதற்தடவையாக இந்தியாவுக்கு பூரண ஆதரவு கொடுக்க, பரபரப்புக்கு மத்தியில் இந்திய அணியினர் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடியிருந்தனர்.

ரோஹித் சர்மாவின் பொறுப்பான ஆட்டத்துடன் இந்திய அணி வெற்றியிலக்கை நெருங்கினாலும், அவ்வணி முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஓட்ட வேகத்திற்கு ஏற்ப துடுப்பெடுத்தாட தடுமாறியது. இதில் 18 பந்துகளுக்கு 35 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் முஸ்தபிசூர் ரஹ்மான் வீசிய 18ஆவது ஓவர் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளுக்கும் ஒரு ஓட்டத்தை கூட பெற முடியாமல் விஜய் சங்கர் தடுமாறினார். தொடர்ந்து ஓவரின் கடைசி பந்தில் சிறப்பாக துடுப்பாடி வந்த மனிஷ; பாண்டே 28 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

Photos: India vs Bangladesh – Nidahas Trophy 2018 Match #7

ThePapare.com | Viraj Kothalawala | 18/03/2018 Editing and re-using images without …

எனினும் அடுத்த ஓவருக்கு முகம்கொடுக்க களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வானவேடிக்கை காட்டினார். ருபெல் ஹொசைனின் முதல் மூன்று பந்துகளுக்கும் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி விளாசியதோடு கடைசி பந்துக்கு மற்றொரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 22 ஓட்டங்களைக் குவித்தார்.

இதனையடுத்து கடைசி ஓவருக்கு 12 ஓட்டங்களைப் பெறவேண்டி ஏற்பட்டது. இந்த ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி ஒன்றை விளாசிய விஜய் சங்கர் ஐந்தாவது பந்தில் பிடிகொடுத்து 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி வெற்றி பெற கடைசி பந்துக்கு 5 ஓட்டங்கள் பெற வேண்டி ஏற்பட்டது. இதன்போது துடுப்பெடுத்தாடிய தினேஷ; கார்த்திக் அபார சிக்ஸர் ஒன்றை விளாசி இந்திய அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

இதில் கார்த்திக் களமிறங்கும் போது 2 ஓவர்களில் 34 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவை என்ற கடினமான நிலை, மிகப் பெரிய அழுத்தம், வெற்றி பெற முடியவில்லை என்றால் வசை, ஏமாற்றம் அனைத்தையும் சுமந்திருப்பார் கார்த்திக். ஆனால் தனது அனுபவமான துடுப்பாட்டத்தை அணிக்கு தேவையான கட்டத்தில் வெளிப்படுத்தி, தோல்வியிலிருந்தும் அணியையும் மீட்டார்.

தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை தனது அபரிமிதமான அதிரடி மூலம் வெற்றி பெறச் செய்து தன் அனுபவத்தை போட்டியின் பிறகு தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தினார்.

இந்திய அணிக்காக இவ்வாறு விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அணிக்காக மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தொடரில் நாங்கள் உள்ளபடியே நன்றாக விளையாடினோம். ஆகவே இறுதிப்போட்டியில் வெல்லாமல் போயிருந்தால் அது துரதிஷ்டம்தான்.

இந்த ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு கடினமாக இருந்தது. அதுவும் முஸ்தபிசூர் பந்து வீசிய விதம். எனவே இறுதியாக களமிறங்கி நன்றாக அடித்து ஆட வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. நான் கடுமையாகப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதாவது பந்து வரும் திசையிலேயே அடிப்பதற்கான அடிப்படைகளை மேற்கொண்டு வந்தேன். அதிஷ்டவசமாக இந்தப் போட்டியில் அந்த யுக்திகள் கைகொடுத்தது.

மோசமான நடத்தைக்கு வருந்திய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

சுதந்திரக் கிண்ண T20 முத்தரப்பு தொடரில் இலங்கையுடனான போட்டியில் மோசமான …

வாய்ப்பு கிடைக்க கடினமான ஒரு அணி இந்திய அணி, ஆனால் ஒருமுறை பெற்ற வாய்ப்பை விட்டுவிடக்கூடாது, எனக்கு உதவியாக இருந்து பின்னணியிலிருந்த அனைவர்களுக்கும் நன்றி. அவர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாகவே இருந்திருக்கின்றனர், உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

எனவே இந்திய அணிக்காக சுமார் 13 வருடங்களாக விளையாடி வருகின்ற தினேஷ் கார்த்திக், இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளிலும், 79 ஒரு நாள் மற்றும் 19 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கின் அபார துடுப்பாட்டம் தொடர்பில் சமூகவலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்:

அபாரமான வெற்றி! தினேஷ் கார்த்திக்கின் சிறந்த துடுப்பாட்டம், இதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்த ரோஹித் சர்மாவின் சிறந்த இன்னிங்ஸ்! இறுதிப் போட்டியில் என்ன மாதிரியான பினிஷிங்!

விராத் கோஹ்லி:

என்ன அருமையான ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இளம் வீரர்களைக் கொண்ட அணியாக விளையாடி கிடைத்த மிகப் பெரிய வெற்றி. பாராட்டுக்கள் தினேஷ் கார்த்திக்.

ரவிச்சந்திரன் அஷ்வின்

தினேஷ் கார்த்திக்கின் நம்பமுடியாத இன்னிங்ஸ். அவரை நன்கு அறிந்தவராக அவருடைய திறமையை நேற்று இரவு பார்க்க முடிந்தது.

யூசுப் பதான்:

வெல் டன் டீம் இந்தியா! என்ன ஒரு பிரமாதமான வெற்றி! நெருக்கடி தருணத்தில் என்ன ஒரு இன்னிங்ஸ் தினேஷ் கார்த்திக். இளம் வீரர்கள் இந்தத் தொடரில் அற்புதமாக விளையாடி விட்டனர்.

அஞ்செலோ மெதிவ்ஸ்:

அருமையான கிரிக்கெட் ஆட்டம். வாழ்த்துக்கள் இந்தியா, தினேஷின் ஆட்டம் சிறப்பு.

ரஸல் ஆர்னல்ட்:

வாவ் டி.கே. உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன் தினேஷ் கார்த்திக்.

இந்நிலையில், சவ்ரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண், பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.