இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் சந்திமால்

1120
My best century in Test cricket – Chandimal

ஜூலை 26ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் புதிய அணித் தலைவர் தினேஷ் சந்திமால் சுகவீனம் காரணமாக பங்குபற்ற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரும் முன்னாள் வீரருமான அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.  

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சந்திமாலின் சுகவீனம் குறித்து எங்களுக்கு நேற்றிரவு அறியக் கிடைத்தது. சந்திமாலின் இரத்த பரிசோதனை தாமதித்து கிடைக்கப்பெற்றிருந்தமையே இதற்கு  காரணம். தினேஷ் சந்திமால் நிமோனியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைகளுக்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் நிச்சியமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்ற மாட்டார்” என்றார்.

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமனம்

இலங்கை அணியின் பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளர் சம்பக்க ராமநாயக்கவுக்குப்…

அத்துடன், தினேஷ் சந்திமால் முழுமையாக குணமாவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது குறித்து வைத்தியர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனவும், சில நேரங்களில் மேலதிகமாக ஓரிரு வாரங்கள் தேவைப்படலாம்.  அதனால் தினேஷ் சந்திமாலுக்குப் பதிலாக ஒருநாள் மற்றும் T-20 அணித் தலைவராகவுள்ள உபுல் தரங்க அணியை வழி நடத்துவார் என்றும் குருசிங்க தெரிவித்தார்.

முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ் அணித் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, தினேஷ் சந்திமால் அணித் தலைவராக நியமிக்கப்பட்டதோடு, கடந்த ஜிம்பாப்வே அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட டெஸ்ட் தொடரில், தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி வரலாற்று வெற்றியையும் பெற்றது.

27 வயதான தினேஷ் சந்திமால் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 2,610 ஓட்டங்களை பெற்றுள்ள அதேவேளை, 128 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 3,211 ஓட்டங்களையும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், காலியில் ஆரம்பமாகவுள்ள வலிமைமிக்க இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அணித் தலைவர் சந்திமால் விலக நேர்ந்துள்ளமை இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பிலும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலயிலும் நடைபெறவுள்ளன.