இலங்கை அணியில் இருந்து விலகும் சந்திமால்: அசலங்க அணியில் இணைப்பு

1656

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் உபாதை காரணமாக இங்கிலாந்து அணியுடன் கண்டியில் புதன்கிழமை (14) நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில தனன்ஜயவின் பந்துவீச்சு முறையில் சந்தேகம்

காலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ……

காலியில் வெள்ளிக்கிழமை (9) முடிந்த இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமாலுக்கு கால் தசைகள் இணையும் பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது. இந்த உபாதை குணமடைய இன்னும் இரண்டு வாரகால அவகாசம் தேவைப்பட்டதனை அடுத்தே சந்திமாலுக்கு இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போயிருக்கின்றது.

இதேநேரம், இந்த இரண்டு வாரகால அவகாசம் பூர்த்தியாகியதன் பின்னரும் சந்திமால் பூரண உடற்தகுதியினை நிரூபிக்காது போனால் அவர் இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகும் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும் சந்தேகம் என கூறப்படுகின்றது.

சந்திமால் இல்லாத இலங்கை அணியினை இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் வழிநடாத்தவுள்ளார். இதற்கு முன்னர், மூன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டுள்ள லக்மால் அப்போட்டிகள் மூன்றிலும் தனது தரப்பினை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக அனுபவம் கொண்ட குசல் ஜனித் பெரேரா, லஹிரு திரிமான்ன ஆகியோர் இலங்கையின் மேலதிக வீரர்கள் குழாத்தில் இருந்த போதும் சந்திமாலின் இடத்தினை அணியில் நிரப்ப அறிமுக வீரரான சரித் அசலங்க அழைக்கப்பட்டிருக்கின்றார்.

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சந்திமால் பங்கேற்பது சந்தேகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் காலியில்….

மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான அசலங்க இங்கிலாந்து அணியுடன் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 63 பந்துகளுக்கு 68 ஓட்டங்களை விளாசி திறமையினை வெளிப்படுத்தியிருந்து குறிப்பிடத்தக்கது. அதோடு அசலங்க பகுதிநேர சுழல் வீரராக பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, காலி டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியின் நட்சத்திர சுழல் வீரரான ரங்கன ஹேரத் ஓய்வு பெற்றதனை அடுத்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்படும் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான மலிந்த புஷ்குமார இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹேரத்திற்கு பதிலாக உள்வாங்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

மலிந்த புஷ்பகுமார இலங்கை அணிக்காக முன்னதாக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருப்பதோடு, உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் 650 இற்கு மேலான விக்கெட்டுக்களை கைப்பற்றிய அனுபவத்தையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<