கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் CH & FC

2017/2018 பருவகாலத்திற்கான டயலொக் ரக்பி லீக் தொடரின் முதற் போட்டியில் நடப்பு சம்பியனான கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் CH & FC அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டியில் கண்டி அணியானது பெரும் புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவ்வணி மந்தமான விளையாட்டுப் பாணியின் காரணமாக கடும் போட்டிக்கு பின்னர் 23 – 06 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றதுடன் கண்டி அணியின் நட்சத்திர வீரர் பாசில் மரிஜா போட்டியை ஆரம்பித்து வைத்தார். போட்டியின் ஐந்தாவது நிமிடத்தில் திலின விஜேசிங்க பெனால்டி உதையொன்றின் மூலம் கண்டி அணிக்கு முதல் புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். (கண்டி விளையாட்டுக் கழகம் 03 – 00 CH & FC)

அதன் பின்னர் இரு அணிகளும் தொடர்ந்து தவறுகளை விட்ட வண்ணம் விளையாடியதால் எவ்வணியினாலும் புள்ளிகளைப் பெற முடியவில்லை. எனினும் கண்டி அணி ஒருவாறாக 33 ஆவது நிமிடத்தில் தனுஷ்க ரஞ்சன் மூலமாக ட்ரை ஒன்றை வைத்தது. கொன்வெர்சன் உதையை திலின விஜேசிங்க வெற்றிகரமாக உதைத்தார். (கண்டி விளையாட்டுக் கழகம் 10 – 00 CH & FC)

இதனைத் தொடர்ந்து CH & FC அணியின் இளம் வீரர் சேமுவல் மதுவந்த தனக்கு கிடைத்த பெனால்டி உதையை லாவகமாக உதைத்து புள்ளி வித்தியாசத்தைக் குறைத்தார். எனினும் முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் கண்டி அணியின் அனுருத்த வில்வர அபாரமாக அடுத்தடுத்து இரண்டு ட்ரைகள் வைத்து அசத்தினார். (கண்டி விளையாட்டுக் கழகம் 20 – 03 CH & FC)

முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 20 – 03 CH & FC

இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலும் இரு அணிகளும் மோசமான ஆட்டத்தின் காரணமாக பல வாய்ப்புக்களை வீணடித்தன. ஏறத்தாழ பத்து நிமிடங்களின் பின்னர் இரு அணிகளுக்கும் ஒவ்வொரு பெனால்டி வாய்ப்புக்கள் கிடைத்ததுடன், முறையே சேமுவல் மதுவந்த மற்றும் திலின விஜேசிங்க தத்தமது அணிகளுக்கு மூன்று புள்ளிகள் வீதம் பெற்றுக் கொடுத்தனர். (கண்டி விளையாட்டுக் கழகம் 23 – 06 CH & FC)

டயலொக் ரக்பி லீக்கில் மீண்டும் TMO தொழில்நுட்பம்

போட்டியின் இறுதிப் பாகத்தில் இரு அணிகளும் சற்று முன்னேற்றகரமான நகர்வுகளை வெளிப்படுத்த ஆட்டம் விறுவிறுப்பானது. எனினும் சீரற்ற காலநிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக 73 நிமிடங்கள் நிறைவுற்ற நிலையில் நடுவரினால் போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கடந்த வருடம் தொடர்ந்து படுதோல்விகளை எதிர்கொண்ட CH & FC அணி இப்போட்டியில் சவாலான ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்த அதேவேளை நடப்பு சம்பியனான கண்டி விளையாட்டுக் கழகம் ரசிகர்கள் பலரையும் ஏமாற்றியிருந்தது.

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 23 – 06 CH & FC

  • ThePapare.com இன் ஆட்டநாயகன் – ஸ்ரீநாத் சூரியபண்டார (கண்டி விளையாட்டுக் கழகம்)

புள்ளிகள் பெற்றோர்

கண்டி விளையாட்டுக் கழகம் – தனுஷ்க ரஞ்சன் (1 ட்ரை), அனுருத்த வில்வர (1 ட்ரை), திலின விஜேசிங்க (2 பெனால்டி, 2  கொன்வெர்சன்)

CH & FC – சேமுவல் மதுவந்த (2 பெனால்டி)

ஹெவலொக் விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இதேவேளை இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் கடந்த பருவகாலத்திற்கான தொடரில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்ட ஹெவலொக் விளையாட்டுக் கழகமானது பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டது.

ஹெவலொக் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெவலொக் அணி 36 – 00 என்ற புள்ளிகள் கணக்கில் இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

அடைமழைக்கு மத்தியில் போட்டி ஆரம்பமானதுடன், இரண்டாவது நிமிடத்தில் ஹெவலொக் அணியின் பிரசாத் மதுஷங்க முதல் ட்ரையினை வைத்தார். கடினமான கொன்வெர்சன் உதையை ரீசா முபாரக் வெற்றிகரமாக உதைத்தார். (ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 07 – 00 பொலிஸ் விளையாட்டுக் கழகம்)

ஆசிய ரக்பி தொடரில் இலங்கைக்கு 3ஆம் இடம்

ஹெவலொக் விளையாட்டுக் கழகத்தின் முன்கள வீரர்கள் போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன், அதன் பலனாக ஐந்தாவது நிமிடத்தில் துஷ்மந்த பிரியதர்ஷன தமது அணிக்கு இரண்டாவது ட்ரையை பெற்றுக் கொடுத்தார். முபாரக் கொன்வெர்சன் உதையை லாவகமாக உதைக்க புள்ளி வித்தியாசம் 14 ஆக அதிகரித்தது. (ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 14 – 00 பொலிஸ் விளையாட்டுக் கழகம்)

Police SC v Havelock SCபொலிஸ் அணிக்கு முதல் பாதியில் இரண்டு பெனால்டி வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் ப்ளை ஹாப் வீரர் சந்தேஷ் ஜயவிக்ரமவின் இரண்டு உதைகளும் குறிதவறின. எனினும் ரீசா முபாரக் தனக்கு கிடைத்த பெனால்டி உதையை மீண்டும் குறிதவறாது உதைத்ததுடன், அதன்படி ஹெவலொக் அணி முதல் பாதியை முன்னிலையில் நிறைவு செய்து கொண்டது. (ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 17 – 00 பொலிஸ் விளையாட்டுக் கழகம்)

முதல் பாதி: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 17 – 00 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியிலும் ஹெவலொக் அணியின் முன்வரிசை வீரர்கள் எதிரணிக்கு பலத்த அழுத்தத்தை வழங்கி வந்தனர். சில சிறப்பான நகர்வுகளின் பின்னர் அணித்தலைவர் ஜேசன் மெல்டர் தனது அணி சார்பில் மற்றுமொரு ட்ரையை வைத்தார். இம்முறையும் முபாரக்கின் கொன்வெர்சன் உதை இலக்கை நோக்கி அமைந்திருந்தது. (ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 24 – 00 பொலிஸ் விளையாட்டுக் கழகம்)

போட்டியின் 65ஆவது நிமிடத்தில் அபாரமான ஓட்டத்தின் மூலம் எதிரணியின் தடுப்பை மீறி முன்னேறிய கெவின் டிக்சன் பந்தை ரீசா முபாரக்கிற்கு பரிமாற, அவர் கம்பங்களுக்கிடையில் ட்ரை வைத்தார். கொன்வெர்சன் உதையையும் முபாரக் வெற்றிகரமாக உதைத்தார். (ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 31 – 00 பொலிஸ் விளையாட்டுக் கழகம்)

போட்டி முழுவதும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெவின் டிக்சன் இறுதி வினாடிகளில் ஹெவலொக் அணியின் இறுதி ட்ரையை வைத்து போட்டியை சிறப்பாக நிறைவு செய்தார். இம்முறை கொன்வெர்சன் உதையை துலாஜ் பெரேரா உதைத்ததுடன், அவரது உதை இலக்கை நோக்கி அமையவில்லை. இதன்படி ஹெவலொக் அணி 36 – 00 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை இலகுவாக வெற்றி கொண்டது. (ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 36 – 00 பொலிஸ் விளையாட்டுக் கழகம்)

முழு நேரம்: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 36 – 00 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

  • ThePapare.com இன் ஆட்டநாயகன் – பிரசாத் மதுஷங்க (ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

புள்ளிகள் பெற்றோர்

ஹெவலொக் விளையாட்டுக் கழகம் – பிரசாத் மதுஷங்க (1 ட்ரை), துஷ்மந்த பிரியதர்ஷன  (1 ட்ரை), ஜேசன் மெல்டர்  (1 ட்ரை), ரீசா முபாரக்  (1 ட்ரை, 2 பெனால்டி, 4 கொன்வெர்சன்)