டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் 3ஆம் வாரத்தின் இறுதி நாளான இன்று, கண்டி கழகமானது தனது சொந்த மைதானமான நித்தவள மைதானத்தில் இராணுவ அணியை 58-13 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது.

எந்த ஒரு போட்டியிலும் தோல்வியடையாத நிலையில் களமிறங்கிய கண்டி அணி, மைதானம் நிறைந்த தமது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் எதிர்பார்ப்போடு களமிறங்கி அதை சரி வர நிறைவேற்றியது. மறுமுனையில் பலமான எதிரணியை சமாளிக்கும் நோக்கில் இராணுவ அணி போட்டியில் களமிறங்கியது.

போதிய வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி பி.ப. 3.45 மணிக்கே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே கண்டி அணி ஆதிக்கம் செலுத்துவதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் போட்டியின் முதலாவது புள்ளியை இராணுவ அணியே பெற்றுக்கொண்டது. தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலமாக கயான் சாலிந்த கம்பத்தின் நடுவே உதைத்து இராணுவ அணிக்கு 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (கண்டி விளையாட்டுக் கழகம் 00-03 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

கண்டி கழகத்தின் வேக நட்சத்திரமான அனுருத்த வில்வார, தனது வேகத்தின் மூலமாக ட்ரை கோட்டை கடந்து தமது அணிக்கு முதலாவது புள்ளியை பெற்றுக்கொடுத்தார். எனினும் திலின விஜேசிங்க கொன்வெர்சனை தவறவிட்டார். இருந்தாலும் தொடர்ந்து பந்தை பெற்றுக்கொண்ட திலின சிறப்பாக செயற்பட்டு தனுஷ்க ரஞ்சனுக்கு பந்தை பரிமாற்றம் செய்தார். தனுஷ்க ரஞ்சன் இலகுவாக ட்ரை கோட்டை கடந்து கம்பத்தின் கீழே ட்ரை வைத்தார். இம்முறை திலின கொன்வெர்சனை தவறவிடவில்லை. (கண்டி விளையாட்டுக் கழகம் 12-03 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

கடற்படையினால் மூழ்கடிக்கபட்ட ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

தொடர்ந்து இராணுவ அணியானது மற்றுமொரு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கயான் சாலிந்த மூலமாக மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. இம்முறை கண்டி அணி வீரர் பந்து கைகளில் இல்லாத நிலையில் இராணுவ வீரரை தடுத்தமைக்காக பெனால்டி வழங்கப்பட்டது. (கண்டி விளையாட்டுக் கழகம் 12-06 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

இராணுவ அணி இதுவரையில் வெறும் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் காணப்பட்டாலும், முதல் பாதி முடியும் வரை இதற்கு பின்னரான தருணங்களை கண்டி அணி தம் வசப்படுத்திக்கொண்டது. வேக நட்சத்திரம் வில்வார, அணியின் மூத்த வீரர் மரிஜாவிடம் இருந்து பந்தை பெற்றுக்கொண்டு, மீண்டும் ஒரு முறை தனது மின்னல் வேகத்தால் ட்ரை கோட்டைக் கடந்தார். தொடர்ந்து ஸ்க்ரம் ஹாப் நிலை வீரரான ஸ்ரீநாத் சூரியபண்டார, இராணுவ வீரர் நழுவ விட்ட பந்தைப் பெற்றுக்கொண்டு தனி ஆளாக ட்ரை கோட்டை கடந்தார். திலின முதலாவது கொன்வெர்சனை தவறவிட்ட பொழுதும் இரண்டாவதை வெற்றிகரமாக உதைத்தார். (கண்டி விளையாட்டுக் கழகம் 24-06 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

இம்முறை மரிஜாவிடம் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட ரிச்சர்ட் தர்மபால சிறப்பாக எதிரணி வீரர்களைத் தாண்டி சென்று மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார். தொடர்ந்து திலினவின் சாமர்த்தியத்தினால் உடனடியாக எடுக்கப்பட்ட பெனால்டியில் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட ரஞ்சன், தனது இரண்டாவது ட்ரையை வைத்தார். திலின இரண்டாவது ட்ரையை மட்டுமே வெற்றிகரமாக கொன்வெர்சன் செய்தார்.

முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 34 – 06 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியிலும் தமது அணியின் வாணவேடிக்கையை காண காத்திருந்த கண்டி ரசிகர்களுக்கு கண்டி கழகம் ஏமாற்றம் அளிக்கவில்லை. இராணுவ அணி இரண்டாம் பாதியில் முதலாம் பாதியை விட சற்று சிறப்பாக விளையாடினாலும், அவர்களால் கண்டி அணி புள்ளிகள் பெறுவதைத் தடுக்க முடியவில்லை.

வேக நட்சத்திரம் வில்வார இம்முறை 40 மீட்டர் தூரத்தில் இருந்து பந்தை தனியாக எடுத்து சென்று ட்ரை கோட்டை கடந்து, தான் வேக நட்சத்திரம் என்பதை 3ஆவது முறையாகவும் நிரூபித்தார். தொடர்ந்து கயான் வீரரத்னவின் சிறப்பான பந்து பரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்ட தனுஷ்க ரஞ்சன், போட்டியில் 3ஆவது முறையாகவும் ட்ரை கோட்டைக் கடந்தார். திலின கொன்வெர்சன் இரண்டையும் வெற்றிகரமாக உதைத்தார். (கண்டி விளையாட்டுக் கழகம் 48-06 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

CR & FC அணிக்கு அதிர்ச்சி கொடுத்த CH & FC

கண்டி அணி வீரர்களான திமித்ரி விஜேதுங்க மற்றும் தரிந்து சதுரங்க ஆகியோர் முறையே 62 மற்றும் 65ஆவது நிமிடங்களில் நடுவரினால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, கண்டி அணி 13 வீரர்களுடன் களத்தில் விளையாடியது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட இராணுவ அணி போட்டியில் தனது முதலாவது ட்ரையை வைத்தது. 5 மீட்டர் ஸ்க்ரம் ஒன்றை பெற்றுக்கொண்ட இராணுவ அணியானது, பந்தை அகலப் பரிமாற்றம் செய்து, தமது தலைவர் துஷித சேனநாயக்க மூலமாக ட்ரை வைத்தது. கயான் சாலிந்த கடினமான கொன்வெர்சனை சிறப்பாக பூர்த்தி செய்தார். (கண்டி விளையாட்டுக் கழகம் 48-13 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

  • Skipper Gayan Weeraratne was the silent contributor creating the opportunities

இராணுவ அணியின் சுரங்க ஹேரத்திற்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட தொடர்ந்து தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கம்பத்தின் நடுவே உதைத்த நைஜல் ரத்வத்த, கண்டி அணிக்கு மேலும் 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (கண்டி விளையாட்டுக் கழகம் 51-13 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

போட்டியின் இறுதி நிமிடத்தில், இராணுவ அணியினால் நழுவவிடப்பட்ட பந்தை பெற்றுக்கொண்ட நைஜல் சிறிது தூரம் கடந்து ஜேசன் திஸாநாயக்கவிற்கு பந்தை பரிமாற, ஜேசன் ட்ரை கோட்டை கடந்தார். திலினவின் வெற்றிகரமான கொன்வெர்சனுடன் நடுவர் போட்டி முடிவுற்றதாக அறிவித்தார்.

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 58 ( 9T ,5C ,1P) – 13 (1T ,1C ,2P) இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

  • ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – புவனேக விஜேதுங்க

புள்ளிகள் பெற்றோர்

கண்டி விளையாட்டுக் கழகம்
ட்ரை – அனுருத்த வில்வார (3), தனுஷ்க ரஞ்சன் (3), ஜேசன் திஸாநாயக்க (1), ரிச்சர்ட் தர்மபால (1), ஸ்ரீநாத் சூரியபண்டார (1)
கொன்வெர்சன் – திலின விஜேசிங்க (3), நைஜல் ரத்வத்த (2)
பெனால்டி – நைஜல் ரத்வத்த (1)

இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
ட்ரை – துஷித சேனநாயக்க (1)
கொன்வெர்சன் – கயான் சாலிந்த (1)
பெனால்டி – கயான் சாலிந்த (2)