விமானப்படையை வீழ்த்தி இரண்டாம் இடத்திற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட CH & FC

105

கழக அணிகளுக்கிடையிலான டயலொக் ரக்பி லீக் தொடரின் பத்தாம் வாரத்திற்கான போட்டியொன்றில் CH & FC மற்றும் விமானப்படை விளையாட்டுக் கழக அணிகள் மோதிக் கொண்டன. தமது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த CH & FC அணியானது இப்போட்டியில் 28 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை சுவீகரித்ததுடன், அதன்படி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கான போராட்டம் மேலும் சூடுபிடித்துள்ளது.

கடந்த வாரம் பிரபல ஹெவலொக் விளையாட்டுக் கழகத்திற்கு அதிர்ச்சியளித்த CH & FC அணி, விமானப்படை அணியை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் எதிர்கொண்டது. மறுமுனையில் விமானப்படை அணியோ கடந்த போட்டியில் கண்டி அணியிடம் படுதோல்வியடைந்திருந்தது. ஒன்பது போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றிருந்த அவ்வணி எவ்விதத்திலாவது தோல்வியோட்டத்தை நிறுத்தும் நோக்குடன் களமிறங்கியது.

CH & FC அணி பிரபல அணிகளை பின்தள்ளி இரண்டாம் இடத்தை தன்வசப்படுத்தும் நோக்குடன் பிரவேசித்திருந்தது. அதன்படி CH & FC வீரர் சேமுவல் மதுவந்த தனது உதையின் மூலம் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

போட்டியின் முதல் நிமிடங்களில் விமானப்படை அணி எதிரணிக்கு சமனான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. CH & FC அணி வழமையை போன்றே முதல் பாதியின் ஆரம்பத்தில் சற்று பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது.

இரண்டாவது பாதியை முழுமையாக தம்வசப்படுத்திய கடற்படை

CH & FC அணியின் வீரர்கள் இழைத்த சில தவறுகளின் பிரதிபலனாக விமானப்படை அணிக்கு இரண்டு பெனால்டி வாய்ப்புக்கள் கிடைத்தன. இரண்டு உதைகளையும் அனுபவமிக்க வீரர் சரித் செனவிரத்ன வெற்றிகரமாக உதைத்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தார். (CH & FC 00 – 06 விமானப்படை)

CH & FC அணி சில நிமிடங்களின் பின்னர் முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் பாதிக்குள் பிரவேசித்தது. இந்நிலையில் அவ்வணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிட்டியதுடன், இளம் நட்சத்திர வீரர் சேமுவல் மதுவந்த குறிதவறாது உதைந்து மூன்று புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். 32 ஆவது நிமிடத்தில் CH & FC அணியின் மற்றுமொரு வளர்ந்துவரும் இளம் வீரரான அவிஷ்க லீ, பல தடுப்பு வீரர்களை மீறி ட்ரை ஒன்றை வைத்தார். கொன்வெர்சன் உதையை மதுவந்த இலகுவாக உதைத்தார். (CH & FC 10 – 06 விமானப்படை)

முதல் பாதியின் இறுதி சில நிமிடங்களில் இரு அணிகளும் புள்ளிகளைப் பெறும் நோக்கில் கடினமாக போராடின. 36 ஆவது நிமிடத்தில் விமானப்படை அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்ததுடன், செனவிரத்ன இலக்கை நோக்கி உதைத்து புள்ளி வித்தியாசத்தை ஒன்றாகக் குறைத்தார். (CH & FC 10 – 09 விமானப்படை)

முதல் பாதி: CH & FC 10 – 09 விமானப்படை

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் அடைமழை பெய்ய ஆரம்பித்த காரணத்தினால் இரண்டு அணி வீரர்களும் பந்தை கையிருப்பில் வைத்திருக்க தவறினர். இதன் காரணமாக ட்ரை வைப்பதில் சிரமத்தை உணர்ந்த இரு அணிகளும் பெனால்டி உதைகளின் மூலம் புள்ளிகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டின. அதன்படி 45 ஆவது மற்றும் 55 ஆவது நிமிடங்களில் சேமுவல் மதுவந்த இரண்டு பெனால்டிகளை உதைத்ததுடன், 56 ஆவது நிமிடத்தில் விமானப்படையின் சரித் செனவிரத்ன ஒரு உதையை கம்பங்களுக்கூடாக உதைத்தார். (CH & FC 16 – 12 விமானப்படை)

பொலிஸ் அணியை துவம்சம் செய்த கண்டி விளையாட்டுக் கழகம்

சில நிமிடங்கள் கடந்த நிலையில் மழையின் தீவிரம் குறைந்ததுடன் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட CH & FC அணி, லாவகமான நகர்வுகளின் பின்னர் பிரதீப் குருகுலசூரிய மூலமாக ட்ரை வைத்தது. சற்று கடினமான கொன்வெர்சன் உதையை மதுவந்த தவறவிட்டார். (CH & FC 21 – 12 விமானப்படை)

இறுதி பதினைந்து நிமிடங்களில் எவ்வாறாயினும் புள்ளிகளைப் பெற்று போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் விமானப்படை விளையாட்டுக் கழகம் போராடியது. அவ்வணி பந்தை தம் கையிருப்பில் வைத்திருந்த போதிலும் எதிரணியின் தடுப்புச் சுவரை தகர்க்கவோ புள்ளிகளைப் பெறவோ இயலவில்லை.

76 ஆவது நிமிடத்தில் விமானப்படை வீரர்களின் பந்துப் பரிமாற்றத்தை இடைமறித்த CH & FC அணியின் நட்சத்திர வீரர் லீ கீகல், அபாரமான ட்ரை ஒன்றை வைத்து விமானப்படை வீரர்களின் எதிர்பார்ப்புகளை தகர்த்தெறிந்தார். இம்முறை கொன்வெர்சன் உதையை மதுவந்த வெற்றிகரமாக உதைத்தார். (CH & FC 28 – 12 விமானப்படை)

2018 பாடசாலைகள் ரக்பி போட்டி அட்டவணை வெளியீடு

இறுதி வினாடிகளில் விமானப்படை அணியானது ஆறுதல் ட்ரை ஒன்றைப் பெற கடும் பிரயத்தனத்தை மேற்கொண்ட போதிலும் அவ்வீரர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதன்படி 28 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் CH & FC அணி வெற்றியை தமதாக்கிக் கொண்டது.

முழு நேரம்: CH & FC 28 – 12 விமானப்படை

இத்தோல்வியுடன் விமானப்படை அணிக்கு புள்ளிப்பட்டியலில் இறுதி இரண்டு இடங்களை மீறி முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. CH & FC அணியோ ஹெவலொக் மற்றும் கடற்படை அணிகளுடனான இரண்டாம் இடத்திற்கான போராட்டத்தில் தமக்கான வாய்ப்புக்களை அதிகரித்துக் கொண்டது.

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: அவிஷ்க லீ (CH & FC விளையாட்டுக் கழகம்)

புள்ளிகள் பெற்றோர்

CH & FC – அவிஷ்க லீ (1T), பிரதீப் குருகுலசூரிய (1T), லீ கீகல் (1T), சேமுவல் மதுவந்த (3P, 2C)

விமானப்படை விளையாட்டுக் கழகம் – சரித் செனவிரத்ன (4P)