டயலொக் ரக்பி லீக் போட்டிகளின் இரண்டாம் சுற்றில், விமானப்படை அணியை 65-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாக வென்று, தனது வெற்றியோட்டத்தை கண்டி கழகம் தொடர்கிறது.

ரத்மலான விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கண்டி அணியானது இலகுவாக வெற்றி பெறும் என அனைவராலும் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் 10 ட்ரைகளை வைத்து கண்டி அணி தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. கடந்த வருடம் விமானப்படையிடம் இதே மைதானத்தில் தோல்வியடைந்த கண்டி அணி, இவ்வெற்றியின் மூலம் அவ்வலியை ஆற்றியது எனலாம்.

ஆரம்பம் முதலே கண்டி அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. விமானப்படை அணி செய்த தவறின் மூலம் அவர்களது எல்லையில் பந்தை பெற்றுக்கொண்ட கண்டி அணியானது, முதலாவது ட்ரையை புவனேக உடன்கமுவ மூலமாக இலகுவாக வைத்தது. தொடர்ந்து தனுஷ்க ரஞ்சன் கண்டி அணி சார்பாக இரண்டாவது ட்ரை வைக்க,விமானப்படை அணி தள்ளாடியது. திலின விஜேசிங்க இரண்டு கொன்வெர்சனையும் சிறப்பாக உதைத்தார். (கண்டி 14 – 00 விமானப்படை)

விமானப்படை அணியானது முதல் பாதியில் ஒரு ட்ரை வைத்து கண்டி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இஷார மதுஷான் ட்ரை வைத்து கண்டி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனினும் 20ஆவது நிமிடத்திலிருந்து தொடர்ந்து 3 ட்ரைகளை வைத்து கண்டி அணி போனஸ் புள்ளியை தமதாக்கிக்கொண்டது. திலினவினால் ஒரே ஒரு கொன்வெர்சனை மாத்திரமே சரிவர பூர்த்தி செய்ய முடிந்தது. (கண்டி 31 – 05 விமானப்படை)

பொலிஸ் அணியை துவம்சம் செய்த கண்டி விளையாட்டுக் கழகம்

கண்டி அணி தனது முன் வரிசை வீரர்களைப் பயன்படுத்தி ரோலிங் மோல் மூலம் விமானப்படை அணிக்கு அழுத்தம் கொடுத்தது. அவ்வகையில் யாகூப் அலி கண்டி அணி சார்பாக ட்ரை வைத்து முன்னிலையை மேலும் அதிகரித்தார். திலின கொன்வெர்சனை சிறப்பாக பூர்த்தி செய்தார். (கண்டி 38 – 05 விமானப்படை)

விமானப்படை அணியானது மெதுமெதுவாக முன்னேறி கண்டி அணியின் கோட்டைக்குள் நுழைந்தது. விமானப்படை அணி ட்ரை கோட்டை நெருங்கிய போதும் ட்ரை வைக்கத் தவறியது. எனினும் இரண்டாவது முயற்சியின் போது, கண்டி வீரர் உடன்கமுவ பிழையான முறையில் விமானப்படை வீரரை தடுத்ததால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டதோடு, விமானப்படை அணிக்கு பெனால்டி ட்ரையும் வழங்கப்பட்டது.

கண்டி வீரர் தனுஷ் தயானின் இரண்டாவது ட்ரையுடன் முதல் பாதி நிறைவு பெற்றது.

முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 45 – 12 விமானப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் கண்டி அணியானது மேலும் மூன்று ட்ரை வைத்து அசத்தியது. தரிந்து சதுரங்க, நைஜல் ரத்வத்த மற்றும் உச்சித ஜயசூரிய ஆகியோர் கண்டி அணி சார்பாக ட்ரை வைத்தனர்.

இரண்டாம் பாதியில் விமானப்படை அணியானது முதலாம் பாதியை விட சற்று சிறப்பாகவே விளையாடியது எனலாம். எனினும் விமானப்படை அணியினால் எந்த ஒரு ட்ரையும் வைக்க முடியாமல் போனாலும், கண்டி அணியை 3 ட்ரைகளுக்கு மட்டுப்படுத்தியது.

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 64(10T, 7C ) – 12(2T, 1C ) விமானப்படை விளையாட்டுக் கழகம்

  • ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – தனுஷ் தயான் (கண்டி விளையாட்டுக் கழகம்)

CR & FC எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

விறுவிறுப்பான போட்டியின் பின்னர், பொலிஸ் அணியின் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்த CR & FC அணி, 33-31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தம்வசப்படுத்திக்கொண்டது.

கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதலே சிவப்பு அணிந்த CR & FC அணியானது ஆதிக்கம் செலுத்தியது. தலைவர் கவிந்து பெரேரா CR & FC அணி சார்பாக முதலாவது ட்ரையினை மைதானத்தின் ஓரத்தில் வைத்தார், தரிந்த ரத்வத்த கொன்வெர்சனை தவறவிட்டார். தொடர்ந்து பொலிஸ் அணிக்கு அழுத்தம் கொடுத்த CR & FC அணியானது 15 ஆவது நிமிடத்தில் தனது பரொப் நிலை வீரரான கயான் ஜயசேகர மூலமாக இரண்டாவது ட்ரையையும் வைத்தது. ரத்வத்த முன்னிலையை மேலும் 2 புள்ளிகளால் அதிகரித்துக்கொடுத்தார். பொலிஸ் அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக சந்தேஷ் ஜெயவிக்ரம பெனால்டி மூலம் சிறப்பாக உதைத்து 3 புள்ளிகளை பொலிஸ் அணிக்கு பெற்றுக்கொடுத்தார். (CR & FC 12 – 03 பொலிஸ்)

டயலொக் ரக்பி லீக் முதல் சுற்றை வெற்றியுடன் முடித்த கண்டி கழகம்

CR & FC அணி பந்தை அதிகமாக தம்வசம் வைத்துக்கொண்டு விளையாடியதால் 23ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு ட்ரை வைத்து தனது முன்னிலையை 14 ஆக அதிகரித்துக் கொண்டது. பலம் மிக்க ஒமல்க குணரத்ன இரண்டு பொலிஸ் வீரர்களைக் கடந்து சென்று ட்ரை வைத்தார். ரத்வத்த இம்முறை கொன்வெர்சனை தவறவிடவில்லை. தொடர்ந்து பொலிஸ் அணி CR & FC அணியின் கோட்டைக்குள் பந்தை நகர்த்திய பொழுதும் ட்ரை கோட்டை கடக்க தடுமாறியது. 30 ஆவது நிமிடத்தில் ரீசா றபாய்தீன் அபாயகரமான முறையில் விளையாடியதால் அவருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டதோடு, பொலிஸ் அணிக்கு பெனால்டி ட்ரை வழங்கப்பட்டது. (CR & FC 19 – 10 பொலிஸ்)

முதல் பாதி நிறைவடைய முன்னர்  ஒமல்க மற்றும் ஒரு முறை ட்ரை கோட்டை கடந்தார்.

முதல் பாதி: CR & FC 26 – 10 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் பொலிஸ் அணியானது புதியதொரு அணி போல் விளையாடியமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாதியை முற்று முழுதாக கட்டுப்படுத்திய பொலிஸ் அணியானது, இரோஷன் சில்வா மூலமாக 53 ஆவது நிமிடத்தில் ட்ரை வைத்தது. சந்தேஷ் ஜெயவிக்ரம கொன்வெர்சன் மூலமாக 2 மேலதிக புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (CR & FC 26 – 17 பொலிஸ்)

CR & FC அணிக்கு பெரிதும் அழுத்தம் கொடுத்த பொலிஸ் அணியானது, மெல்ல மெல்ல முன் நகர்ந்து போட்டியின் உத்வேகத்தை அதிகரித்தது. அதன் பலனாக 65 ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணியின் வாஜித் பவ்மி ட்ரை கோட்டை கடந்து பொலிஸ் அணிக்கு நம்பிக்கை அளித்தார். சந்தேஷ் ஜெயவிக்ரம இம்முறையும் கொன்வெர்சனை தவறவிடவில்லை. (CR & FC 26 – 24 பொலிஸ்)

போட்டி இப்போது சூடு பிடிக்க ஆரம்பித்தது. ரசிகர்கள் மத்தியில் போட்டியின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் பொலிஸ் அணிக்கு 3 பெனால்டி வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றாலும், பொலிஸ் அணியினால் எதையும் புள்ளிகளாக மாற்ற முடியவில்லை. மறுமுனையில் 2 பெனால்டி வாய்ப்புகளை CR & FC அணி பெற்றுக்கொண்டு, ரீசா றபாய்தீன் மூலமாக ட்ரை வைத்து தமது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது. ரத்வத்த முக்கியமான இரண்டு புள்ளிகளை கொன்வேர்ட் செய்தார். (CR & FC 33 – 24 பொலிஸ்)

போட்டியின் இறுதி நேரம் வரை வெற்றி பெறுவதற்கு பெரிதும் முயற்சி செய்த பொலிஸ் அணியானது, இறுதியில் சந்தேஷ் ஜெயவிக்ரம ட்ரை வைத்து போட்டிக்கு உயிர் அளித்தார். எனினும் துரதிஷ்டவசமாக, சந்தேஷ் ஜெயவிக்ரம அவரது ட்ரையை அவரே கொன்வெர்சன் செய்து முடிக்க போட்டியும் நிறைவடைந்தது. எனினும் பொலிஸ் அணியானது பிரபல CR & FC அணிக்கு கடும் சவால் விடுத்தது பாராட்டத்தக்கது.

முழு நேரம் : CR & FC 33 (5T, 4C) – 31 (4T, 4C, 1P) பொலிஸ் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – சந்தேஷ் ஜெயவிக்ரம (பொலிஸ் விளையாட்டுக் கழகம்)