பெரிதும் பேசப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட 2017 டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

2017 ஆம் ஆண்டிலும் ஒரு சாதனையாக பன்னிரண்டாவது தடவையாகவும் இலங்கையின் மிகப் பெரிய விளையாட்டு அனுசரணையாளர்களான டயலொக் ஆசியாடா பிஎல்சி (Dialog Axiata PLC) இம்முறையும் சம்பியன்ஸ் லீக்கிற்கு அனுசரணை வழங்குகிறது. கிண்ணத்தை வெல்வதற்கு இம்முறை தொடரில் 18 அணிகள் போட்டியிடுகின்றன.

கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல் இம்முறை தொடர் ‘லீக் அடிப்படையில்’ 17 வாரங்களாக இடம்பெறவுள்ளன. இந்த பருவத்தில் 10 வெவ்வேறு மைதானங்களில் 153 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

கடந்த பருவத்தில் தனது பிரதான போட்டியாளரான ரினௌன் கழகத்தை இறுதிப் போட்டியில் வீழ்த்தி கொழும்பு கால்பந்தாட்ட கழகம் கிண்ணத்தை வென்று நடப்பு சம்பியனாக உள்ளது. கொழும்பு கால்பந்தாட்ட கழகம் 2015 ஆம் ஆண்டிலும் சம்பியன் பட்டத்தை வென்றதோடு ஹட்ரிக் சம்பியன் வெற்றி ஒன்றுக்காகவே இம்முறை களமிறங்குகிறது.  

பாடசாலை கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் முதலாம் வாரம் ஆரம்பம்

கடந்த பருவத்திலிருந்து ஜாவா லேன், திஹாரிய யூத், சிவில் பாதுகாப்பு கழகம் மற்றும் மாத்தரை சிட்டி கால்பந்து கழகங்கள் தரமிறக்கம் செய்யப்பட்டிருந்தபோதும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) சிறப்பு நிறைவேற்றுக் குழு கூட்டத்தில், ஜாவா லேன் மற்றும் மாத்தரை சிட்டி கழகங்களை தரமிறக்குவதில்லையென தீர்மானிக்கப்பட்டது.  

2016 பிரிமியர் லீக் டிவிஷன் 1 சம்பியனான மொரகஸ்முல்ல கால்பந்து கழகம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற பெலிகன்ஸ் கால்பந்து கழகம் ஆகிய இரு அணிகளும் சம்பியன்ஸ் லீக்கிற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளன.

களுத்தறை வெர்னன் பெர்னாண்டோ அரங்கில் சுபர் சன் கால்பந்து கழகத்திற்கும் ப்ளு ஸ்டார் கால்பந்து கழகத்திற்கும் இடையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியே 2017 டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் ஆரம்ப போட்டியாக அமையவுள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் திறமைகளை மேம்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்ட டயலொக், இலங்கை விளையாட்டுத் துறையில் முன்னோடி அனுசரணையாளர்களாவர். டயலொக் நிறுவனம் தேசிய கிரிக்கெட், ரக்பி மற்றும் பாராலிம்பிக் அணிகளுக்கு பெருமையுடன் அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.